“முனைமரங்கள் பேசாமல் இருந்ததால் மரணத்தைத் தழுவின,

மலைகளும் கரடுகளும் பேசாமல் இருந்ததால் இன்று மண்ணோடு கலந்தன,

மண் பேசாமல் இருந்ததால் இன்று மலடாகிப்போனது,

நதிகள் பேசாமல் இருந்ததால் இன்று பல காணாமல் போய்விட்டன,

இன்னும் பல நதிகள் நகரங்களின் சாக்கடைகளாகவும், மக்களின் மலக்கிடங்குகளாகவும் மாறிவிட்டன.

ஏன் பேசாத சக மனிதர்களைக் கூட நீங்கள் நாதியற்றவர்களாய் மாற்றி வீதிகளில் அலையவிட்டுள்ளீர்கள்.

எனவே, நான் இனியும் பேசாமல் இருந்தால், நான் நானாக இல்லாமல், எனது உயிரினங்களை அழித்து, எனது உண்மையான தன்மையைக் கெடுத்து, என்னை ஒரு கழிவு நீர் குட்டையாக்கிவிடுவீர்கள், என்பதால் பேசுகின்றேன்.

நான் மட்டுமல்ல இந்த நாடும், உலகமும் மக்களும் நலமுடன் இருக்க, நான் பேசியாக வேண்டும்… எனவே நான் பேசுகின்றேன்.

ஆறு

என்னில் கலக்கும் நதிகளின் நீரைப் பயன்படுத்துவதில், பங்கிடுவதில் பல, விவாதங்கள், போராட்டங்கள் நடக்கின்றன. நதிகள் ஓடும் ஒவ்வொரு மாநிலமும் தனக்கான பங்கைப் பெறுவதில் முனைப்பாகச் செயல்படுகின்றன. இன்னோர் பக்கம் நதிகளில் இருந்து நீரை எடுத்துப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் தங்களுக்கான பங்கைப் பெற அரசியல்வாதிகளிடம் பேரம் நடத்துகின்றார்கள். ஆயக்கட்டில் வராத விவசாயிகள் தங்களுக்கும் தண்ணீர் வேண்டும் என்று விண்ணப்பிக்கின்றனர்.

சில அரசியல்வாதிகளும், சில சமூக ஆர்வலர்களும், ஏன் சில அறிவியல் மேதாவிகளும், `வீணாகக் கடலில் கலக்கும் நதி நீரைப் பயன்படுத்துவது எப்படி?’ என்று புதிய புதிய திட்டங்களை அறிவிக்கின்றனர். சிலர் புத்தகங்கள் எழுதி புகழ் சேர்க்க முயல்கின்றனர். இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று சில நீதிமான்களும் ‘கடலில் வீணாகக் கலக்கும் மழை நீரைப் பயன்படுத்த திட்டமிட வேண்டும்’ என அரசுக்கு ஆலோசனை கொடுக்கின்றனர். இத்தோடு விட்டார்களா? இன்னும் சிலரோ, நதிகளை இணைத்து, நதி நீரே கடலில் கலக்காமல் செய்யத் திட்டமிடுகின்றனர்.

முதலில் இவர்களின் இந்த, நதிநீர் கடலில் `வீணாகக் கலக்கிறது’ என்ற வாதமே தவறானதாகும்.

நதிகளின் நீருக்கு ஆதாரமாய் இருப்பது கடலாகிய நான்தான் என்பதை இவர்கள் மறந்துவிட்டனர். அதே போல எனது நீர் ஆதாரங்களில் மழையோடு, நதிகளும் முக்கியமான ஒன்று என்பதையும் அனைவரும் மறந்துவிட்டனர். எனக்கான நீரை நீங்கள் உபரி என்று அழைக்கின்றீர்கள். உங்களுக்கு வேண்டுமானால் அது உபரி, எனக்கு அது உயிர் நீர் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஆரம்ப கல்வியில் கற்றுக்கொடுத்த நீர் சுழற்சி விதிகளை மனப்பாடம் செய்து தேர்வு எழுதியதால், அதை அப்போதே மறந்து விட்டீர்கள். அதன் அறிவியல் கோட்பாடுகளும் மறந்துபோனது. உலகில் உள்ள எல்லா நதிகளும் என் போன்ற ஏதோ ஒரு கடலில் கலப்பது காலம்காலமாக நடந்து வருகிறது. அதுதான் இயற்கை. அவ்வாறு கலக்காமல் போனால், எனது குணமும் தன்மையும் மாறிவிடும். என்னுள் வாழும் கோடிக்கனக்கான உயிரினங்கள் இல்லாமல் இறந்துபோகும். மனிதர்கள் இல்லாத காலத்திலேயே தோன்றிய நதிகளுடனான எங்களின் உறவும் உறுதியான, இயற்கையான ஒன்றாகும்.

கடல்

Also Read: ஏன் இன்னும் நதிநீர் இணைப்பைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள்? #MustRead

அப்போதிருந்து இப்போதுவரை, உலகின் தட்பவெப்பத்தை, சுற்றுச்சூழலை நிர்ணயிப்பதில் எனக்கும் முக்கியப் பங்கு உண்டு என்பதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. உலகின் நான்கில் மூன்று பங்குள்ள என்னுள் ஏற்படும் மாற்றம் உலக சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதை ஏன் யாரும் நினைத்துப்பார்க்க முயற்சி செய்வதில்லை? எனது நீரின் அளவு அதிகமாக உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் உலகம் பேரழிவைச் சந்திக்கும் என்பதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. என் நீரின் வேதியல் குணத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு என்னில் கலக்கும் ஆற்று நீரும் ஒரு முக்கியக் காரணியாகும். சரியான அளவில் ஆறுகளும், மழை நீரும் கலக்கும்போது எனது உண்மையான குணம் நிலைத்திருக்கும். அளவு மட்டுமல்ல, குணமும் சரியாக இருக்கும். மிகக் குறைவான ஆற்று நீர் கலக்கும் கடலில், அமிலத்தன்மை அதிகமாகவும், உப்புத்தன்மை குறைவாகவும் இருக்கும். இன்னும் சில நதிகளின் தன்மைக்கு ஏற்ப எனது உப்பின் அளவு மாற்றமடையவும் செய்யும். இதற்கு சாக்கடல் சாட்சியாக உள்ளது.

என்னில் கலக்கும் ஒவ்வொரு நதியும் ஒரு இயற்கைச் சூழலைக்கொண்டது. அதற்கான வழித்தடத்தை மட்டுமல்ல, அதற்கான நாகரிகத்தையும், அறிவியல் ஆதாரத்தையும் கொண்டது. அதன் கரைகள் ஒவ்வொன்றும் ஆயிரம் கதை சொல்லும். பல கிளை நதிகளை இணைத்துக்கொண்டு தனக்கான ஒரு வரலாற்றை உருவாக்கிக் கொண்டுள்ளன. அந்த வரலாற்றைக் கவனத்தில் கொள்ளாமல், சுயநலத்தோடு சிந்திப்பவர்களுக்கு எனது நிலையும், நதிகளின் உணர்வும் என்றும் புரியாது.

இயற்கையின் அம்சங்களில், செயல்பாடுகளில் எதுவுமே தனித்து இல்லை. ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டவை. எனவே, இயற்கையின் போக்கை இயற்கையிடமே விட்டுவிடுவதுதான் மனிதர்களுக்கும் நல்லது, எனக்கும் நல்லது. மனிதர்கள் இயற்கை விதிகளைத் தெரிந்துகொள்வது, அதை மாற்றுவதற்காக அல்ல, அவர்களின் அன்றாடச் செயல்பாட்டுக்கு அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்காகத்தான். ஆனால், மனிதர்கள் எப்போதும் எல்லை மீறுவதையே தங்களின் இயற்கைக் குணமாகக்கொண்டுள்ளனர். இங்கு அதைத்தான் செய்ய முற்பட்டுள்ளனர். இல்லை செய்துகொண்டுள்ளனர்.

பருவ காலங்களில், கன மழை பெய்து, பெருமளவில் தண்ணீர் கடலில் கலக்கும்போது, தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதாக கூறும் நீங்கள், ஒவ்வொரு நாளும் நதிகளில் தண்ணீர் செல்கிறதா, நதிகள் நதிகளாக நீடிக்க அவற்றில் தண்ணீர் தொடர்ந்து செல்ல வேண்டுமே… எந்த நதியும் நீர் இன்றி வரண்டுபோகாமல் உள்ளனவா என்று ஏன் சிந்திப்பதில்லை. ஏற்கெனவே உங்களின் தேவைக்காகக் கட்டப்பட்டுள்ள அணைகள், தடுப்பணைகள், ஏரிகள், குளங்களில் சேமிக்கப்பட்ட பின்னரே எனக்கான தண்ணீர் வருகிறது. அதை நீங்கள் வீணாகும் நீர் என்கின்றீர்கள். சேமிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தக் கூட உங்களிடம் திட்டங்கள் இல்லை.

கடல்

எங்கு எவ்வளவு நீரைத் தேக்கலாம் என்று திட்டமிட்டதுண்டா? ஆற்று நீர் என்னில் கலப்பது மிகவும் அவசியம் என்பதை, அறிந்தும் அதை ஏன் கவனத்தில் கொள்வதில்லை? இதை உங்களின் கல்வி கற்றுக்கொடுக்கவில்லையா? அணைகளில் நீர் முழுமையாக நிரம்பிய பின்னரே, அணைகள் திறக்கப்படுகிறது. அதாவது அதற்குமேல் அணையில் நீரை சேமிக்க முடியாது, என்பதாலோ, கீழ்மட்டத்தில் பாசனத்துக்கு நீர் வேண்டும் என்பதால் மட்டுமே திறக்கின்றீர்கள். எப்போதாவது மழைநீரின் ஒரு பகுதி கடலில் கலக்கவிட வேண்டும் என்று எண்ணியுள்ளீர்களா? நதிகள் கடலில் கலக்கவிடாமல் நீங்கள் அணைகளைக் கட்டிவிட்டால், என்னை நம்பியுள்ள பல உயிரினங்கள் அழிந்துவிடும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் என்ன செய்வீர்கள், இவையெல்லாம் உங்களின் பாடத்திட்டத்தில் இல்லையே. இதுவரை யாரும் எனக்காகப் பேசவோ, வாதிடவோ, முன்வரவில்லை. வேறு வழி இல்லாததால், என் நிலையை நானே கூற வேண்டியுள்ளது.

பெரிய பெரிய அணைகளுக்கு எதிரான போராட்டங்கள்கூட அப்பகுதி மக்களும் மலைகளும், இயற்கைச் சூழலும் பாதிக்கப்படும் என்பதால்தான் நடத்தப்படுகின்றன. எனது நிலையில் இருந்து யாரும் இதுவரை வாதிட்டதில்லை. உண்மை அறிந்த சிலரும், பேசினால் தன்னை மக்கள் நலனுக்கு எதிரானவன் எனப் பறைசாற்றிவிடுவார்கள் என்று அஞ்சி அமைதி காக்கின்றனர்.

மனிதர்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் என்ற உயிர்வளியில் 70 சதவிகிதத்தை நான் வழங்குகின்றேன் என்பதுகூடப் பலருக்குத் தெரிந்திருக்காது. என்னில் வாழும் உயிரினங்கள் உணவு தயாரிப்பதாலும், சுவாசிப்பதாலும் உயிர்வளி உற்பத்தியாகிறது. நீர் வாழ் உயிரினங்கள் உணவு தயாரிக்க வேண்டுமென்றால், அவை தொடர்ந்து சமமான எண்ணிக்கையிலும், சீரான வளர்ச்சியையும் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

ஆற்று நீர் என்னில் கலந்தால்தான் அவற்றில் உள்ள கனிமங்களும் சத்துக்களும் என்னில் வாழும் சிறு நுண்ணுயிர்களுக்கு ஊட்டமாக, உணவாகக் கிடைக்கும். அவற்றை சிறு மீன்கள் உண்ணும். சிறிய மீன்களை பெரிய மீன்கள் உண்ணும். பெரிய மீன்களை திமிங்கிலங்கள் சாப்பிடும், இது ஒரு தொடர் நிகழ்வு. இன்னும் பல உயிரினங்கள் ஆற்று நீர் கலக்கும் முகத்துவாரங்களில்தான் இனப்பெருக்கமே செய்யும். நீங்கள் நதி நீரைத் தடுத்ததால் பல உயிரினங்கள் அழிந்து போய்விட்டன.

ஆறு

Also Read: `தமிழ்மக்களை திசைதிருப்பும் முயற்சியே இந்த நதிநீர் இணைப்புப் பிரசாரம்!’ – பொறியாளர் சுந்தர்ராஜன்

நதி நீர் கலப்பது வீண் என்பதன் மூலமாக மிகப்பெரிய நீர் சுழற்சியை மட்டுமல்ல, உயிர்ச் சுழற்சியையும் நிறுத்துகிறீர்கள். எனது எதிர்காலமும், உங்களின் எதிர்காலமும், ஏன் உங்கள் சந்ததிகளின் எதிர்காலமும் இதனால் பாதிக்கப்படலாம். இதில் எனது நலனும் இணைந்துள்ளது என்பதால் நான் பேசுகின்றேன்.

நீங்கள் உங்களை மட்டுமல்ல, இயற்கையையும் ஏமாற்ற நினைக்கின்றீர்கள். நீங்களும் இயற்கையின் ஓர் அங்கம் என்பதை முற்றாக மறந்துவிட்டதன் விளைவுதான் இது. எல்லோரையும் ஏமாற்றுவது போல என்னையையும் ஏமாற்ற ஜூன் 8-ம் தேதியை உலக பெருங்கடல்கள் தினம் என அறிவித்துள்ளீர்கள். ஆனால், அதை எப்போதாவது கொண்டாடி உள்ளீர்களா?

நான் உலகின் குளிர்சாதனப் பெட்டியைப் போலவும், இன்னும் சொல்லப்போனால் நுரையீரலாகவும் இயங்குவதை அறிவியல் பேசும் நீங்கள் அறியாமலா உள்ளீர்கள்? என்னால் உருவாக்கப்படும் அழகிய நீல வண்ண வானம் வெறும் அழகு மட்டுமா? அது எப்படி உருவாக்கப்படுகிறது என்று யாராவது சிந்தித்ததுண்டா? கொஞ்சம் அறிவியல் உலகுக்குச் சென்று பாருங்கள்.

சரி இதெல்லாம், உங்கள் அறிவியல், பாடத்திட்டத்தில் இல்லை, தெரியாது. ஆனால், என்னை நம்பி லட்சக்கணக்கானோர் உயிர் வாழ்த்து வருகின்றனறே, அது கூட உங்களின் கண்களுக்குத் தெரியவில்லையா? என்னை நம்பி வாழும் அவர்களின் வாழ்வாதாரமே நான்தானே.

உலகில் உள்ள பல கோடிமக்களுக்கு தினமும் உணவு அளிப்பதோடு, அதில் ஈடுபடவோரின் வாழ்க்கைக்கான வருமானத்துக்கும் நான்தானே காரணம், பொறுப்பு. அவர்கள் கூட எனக்காகக் குரல் கொடுக்காதது எனக்கு வருத்தம்தான். அவர்கள் கூட என்னைப் புரிந்துகொள்ளவோ, எனக்காகப் போராடவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இல்லை உருவாக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பூமியில் சுமார் 40 மில்லியனுக்கும் மேலான உயிரினங்கள் இருப்பதாக உயிரியில் விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். அதில் ஒரு உயிரினம்தான் நீங்கள். உங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்தால் மற்ற உயிரினங்கள் என்னாவது? ஏன், என்னைச் சார்ந்து வாழும் சக மனிதர்களைக்கூட நினைவில் வைக்காத நீங்கள், என்னை நம்பி என்னுள்ளே வாழும், பல நூறு கோடி நுண்ணுயிர்களை எப்படி நினைவில் வைக்கப்போகின்றீர்கள்.

உங்களில் எத்தனை பேருக்கு அலையாத்திக் காடுகளைத் தெரியும்? அதை வெட்டி விற்க முடியாத காடு என்பதால் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. அதை `மாங்குரோவ் காடுகள்’ என்றும் கூறுவார்கள். இது எனக்கும் பூமிக்குமான உறவில் உதித்தவை. நதிகள் என்னோடு கலக்கும்போது கருவாகும் காடுகள், நானும் நிலமும் நல்லுறவு கொள்ள இயற்கை கொடுத்த கொடைகள். சேறு கலந்த நதிநீரும் கடல் நீரும் கலக்கும் சதுப்பு நிலம் என்றால் அந்தக் காடுகளுக்கு அலாதிப் பிரியம். உங்களின் தமிழ்நாட்டில், கொள்ளிட வாயில், காவிரி, கடலில் கலக்கும் பிச்சாவரத்தில் இந்தக் காடுகள் உள்ளன.

முனைவர் வெங்கடாசலம்

இந்த மாங்குரோவ் காடுகள் மட்டும் இல்லையென்றால் 2004 சுனாமியில் தமிழ்நாடு இன்னமும் பெரிய இழப்புகளைச் சந்தித்திருக்கும் என்பதை யாரேனும் சிந்தித்துப் பார்க்கவோ, விவாதம் நடத்தவோ ஏன் முன்வருவதில்லை?

அதுகுறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம். இன்னும் பேசுகிறேன்.

தொடரும்.

கட்டுரையாளர்:

முனைவர் வெங்கடாசலம், பேராசிரியர் (ஓய்வு),

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.