நாடெங்கும் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடிகளில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் கட்டாயம் என்ற நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

ஃபாஸ்டேக் முறைக்கு மாறுவதற்காக நீட்டிக்கப்பட்டு வந்த அவகாசம் முடிவுக்கு வந்த நிலையில் அம்முறை தற்போது கட்டாயமாகியுள்ளது. நெடு்ஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பெரும்பாலான வாகனங்கள் ஃபாஸ்டேக் ஸ்டிக்கருடன் கடந்து சென்றன. வெகு சில வாகன ஓட்டிகள் மட்டும் ஃபாஸ்டேக் இல்லாமல் வந்து அதிக கட்டணம் கொடுத்து சென்றனர்.

ஃபாஸ்டேக் குறித்த விவரம் தெரியாமல் சில வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி பணியாளர்களுடன் வாக்குவாதமும் செய்தனர். நெடுஞ்சாலைகளில் செல்லும் கார், வேன், லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சுங்கச் சாவடிகளில் மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கான ஃபாஸ்டேக் முறையை கடந்த 2017ம் ஆண்டே மத்திய அரசு கொண்டு வந்தது. பின்னர் இதை கடைபிடிப்பதற்கான அவகாசம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மேற்கொண்டு வாய்ப்பு வழங்காமல் ஃபாஸ்டேக் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

image

சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கொண்டு வரப்பட்டதே ஃபாஸ்டேக் நடைமுறை. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தால் கடந்த 2017ஆம் ஆண்டே ஃபாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டாலும் கூட, பல்வேறு கால அவகாசங்களுக்கு பிறகு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதற்கான கெடு நள்ளிரவுடன் முடிந்தது. ஃபாஸ்டேக் என்பது ரேடியோ ஃப்ரீக்வன்சி ஐடன்டிஃபிகேஷன் தொழில்நுட்பத்தில் இயக்கக்கூடிய ஸ்டிக்கர். அந்த ஸ்டிக்கர் இணையதள வாலெட் ஒன்றோடு இணைக்கப்பட்டிருக்கும்.

மொபைலில் ப்ரீபெய்டு ரீசார்ஜ் செய்வது போல் பாஸ்டேக் கணக்கில் ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த ஸ்டிக்கரை வாகனத்தின் முன் கண்ணாடியில் உட்புறமாக ஒட்ட வேண்டும். நீங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் போது அங்கிருக்கும் சென்சார், ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து சுங்கக்கட்டணத்தை உங்கள் கணக்கில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளும்.

image

ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை பேடிஎம், வங்கிகள் மற்றும் மத்திய அரசின் NHAI இணையதளம் மூலம் பெறலாம். அதே போல் சுங்கச்சாவடி பகுதிகளில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் வழங்க ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். மத்திய அரசு பல முறை அவகாசம் அளித்த நிலையில் தற்போது ஃபாஸ்டேக் கட்டாயம் என்று சொல்லிவிட்டது. அப்படி ஃபாஸ்டேக் பெறவில்லை என்றால் சுங்கக்கட்டணம் இரண்டு மடங்கு வசூலிக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.