யூனியன்  பிரதேசமான புதுச்சேரியும் 2021 சட்டமன்ற தேர்தலை தமிழகத்துடன் இணைந்து சந்திக்க உள்ளது. அதற்காக  புதுச்சேரியில் உள்ள கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. காங்கிரஸ், திமுக கட்சிகள் ஓர் அணியாகவும், நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் (என்.ஆர்.காங்கிரஸ்), பாஜக மற்றும் அதிமுக ஓர் அணியாகவும் இந்தத் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன.

தற்போது புதுச்சேரியை நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. இருந்தாலும் கடந்த சில நாள்களாகவே ஆளுங்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களான நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணா ராவ் மற்றும் ஜான்குமார் என வரிசையாக நான்கு பேர் தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதில் நமச்சிவாயமும் தீப்பாய்ந்தானும் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளனர். 

image

திடீரென எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தது காங்கிரஸ் ஆட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதால் தாமாக முன்வந்து முதல்வர் உட்பட அனைவரும் அவரவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இதில் ஜான்குமார் தனது உறுப்பினர் பதவியை கடைசியாக ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

புதுச்சேரி சட்டப் பேரவை 

புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கடந்த தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. சுயேட்சையாக வெற்றிபெற்ற மாஹே தொகுதி உறுப்பினரின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது காங்கிரஸ். அதற்கு மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள திமுகவும் ஆதரவு கொடுத்திருந்தது. இந்நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் 4 எம்.எல்.ஏக்கள்  இப்போது ராஜினாமா செய்துள்ளனர்.  அதில் மூவரது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்து ஏற்றுக்கொண்டுள்ளார். ஒருவரது கடிதத்தை ஏற்று கொள்ளாமல் இருக்கிறார் என தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியின் பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனால், இப்போது காங்கிரஸின் பலம் 11 என குன்றியுள்ளது. தவிர 3 திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒரு சுயேட்சையின் ஆதரவும் காங்கிரஸுக்கு உள்ளது. இப்போதைக்கு காங்கிரஸின் பலம் 15.

அதேநேரத்தில் எதிர்க்கட்சியான என்.ஆர் காங்கிரஸ் 7 தொகுதிகளில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வென்றிருந்தது. மேலும் 4 தொகுதிகளை அதிமுக உறுப்பினர்கள் கைப்பற்றியிருந்தனர். அதோடு 3 நியமன எம்.எல்.ஏக்களும் பாஜக சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதை வைத்து பார்த்தால் எதிர்க்கட்சிகளின் பலம் 14 என உள்ளது. மல்லாடி கிருஷ்ணா ராவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்படும்  பட்சத்தில் காங்கிரஸ் அதன் பெரும்பான்மையை இழக்கும் என தெரிகிறது. 

இந்நிலையில்தான் புதுச்சேரி அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. அரசை கவிழ்க்க சதி நடப்பதாக கூறி அமைச்சரவையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. 

image

“புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது. காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது. இந்திய அரசியல் சட்ட சாசனப்படி புதுச்சேரி அரசு செயல்படும்” என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார். 

இருப்பினும் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ராஜினாமா செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

image

மல்லாடி கிருஷ்ணா  ராவின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சி தானாகவே பெரும்பான்மையை இழந்து விடும் என சொல்கின்றனர் உள்ளூர் அரசியல் விமர்சகர்கள். 

“கட்சியின் அடிமட்ட தொண்டனுக்கு பதவிகளையும், பொறுப்புகளையும் கொடுக்காமல் வியாபாரிகளுக்கு அதை கொடுத்தது தான் புதுச்சேரியில் காங்கிரஸ் இந்த சூழலுக்கு தள்ளப்பட காரணம்” என குமுறுகின்றனர் காங்கிரஸ் மீது பற்றுக் கொண்ட மக்கள். 

இந்த பரபரப்பான அரசியல் சூழலில்தான் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நாளை தேர்தல் பரப்புரைக்காக புதுச்சேரி வர உள்ளார். 

– எல்லுச்சாமி கார்த்திக்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.