இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட்ட பெயருக்கு ஏத்தபடியே அந்த அணியின் பேட்டிங் டிப்பார்ட்மெண்டிற்கு ஆணி வேராக இருந்து வருகிறார். கிரிக்கெட் களத்தில் அவரது ஆட்டம் நங்கூரம் போட்டு ஆடுவதை போல தான் இருக்கும். அந்த அளவிற்கு அவ்வளவு சீக்கிரத்தில் தனது விக்கெட்டை விட்டுக் கொடுக்க மாட்டார் ரூட். மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேன்கள் என போற்றப்படும் Fab 4 வீரர்களில் ரூட்டும் ஒருவர். இந்திய கேப்டன் கோலி, நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் Fab 4 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இவர்கள் மூவரை காட்டிலும் அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடிய மற்றும் அதிக ரன்கள் குவித்துள்ளார் ரூட் தான். 100 டெஸ்ட் போட்டிகளில் 8507 ரன்கள்.

image

யார் இந்த ரூட்?

இங்கிலாந்தின் ஷெபீல்டு நகரில் கடந்த 1990, டிசம்பர் 30 அன்று பிறந்தவர் ஜோ ரூட். பத்து வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாடி வருகிறார். முதலில் யார்க்க்ஷயர் அணிக்காக விளையாடினார் ரூட். சிறப்பான ஆட்டத்தின் மூலம் 19 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணியில் விளையாடும் வாய்ப்பு கிட்டியது. அதன் பிறகு அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வீணடிக்காமல் பயன்படுத்திக் கொண்டு தனது திறனை நிரூபித்தார். ஒரு பேட்ஸ்மேனாக ரன் குவிப்பதில் ரூட் வல்லவர். உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் ரூட்.

கடந்த 2012 – 13 சீசனில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அறிமுக வீரராக டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார் ரூட். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2 – 1 என கைப்பற்றி இருந்தது. இந்த தொடரின் கடைசி போட்டி நாக்பூரில் நடைபெற்றது. அந்த போட்டியில் தனது முதல் இன்னிங்ஸிலேயே 229 பந்துகளை சந்தித்து 79 ரன்களை குவித்து அசத்தினார் ரூட். அதனால் அதே சுற்றுப்பயணத்தில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் அறிமுகமானார். அதில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நான்காவது போட்டியில் அரை சதம் விளாசியிருந்தார். 

image

இங்கிலாந்து அணியிலிருந்து அனுபவ பேட்ஸ்மேன் பீட்டர்சன் கழட்டிவிடப்பட்டார். அதனால் பேட்டிங் டிப்பார்ட்மென்டின் மொத்த பிரஷரும் ரூட் தோளில் விழுந்தது. அவரும் அதற்கு அசராமல் விளையாடினார். பீட்டர்சன் இல்லாத இங்கிலாந்து அணியில் இலங்கைக்கு எதிராக தனது முதல் இரட்டை சதத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் பதிவு செய்தார் ரூட். அது அவர் விளையாடிய 16வது டெஸ்ட் போட்டி. தொடர்ந்து ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சதங்களை விளாசினார். வங்கதேசத்திற்கு எதிராக மட்டும் தான் ரூட் சதம் பதிவு செய்தது இல்லை. 2017 வாக்கில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து அலெஸ்டர் குக் விலகியதால் முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்டார் ரூட். ஐந்து ஆண்டுகளில் 53  டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரூட் அதில் 11 சதங்களை பதிவு செய்திருந்தார். அந்த 53 டெஸ்ட் போட்டியில் 26 அரை சதங்களை ரூட் விளாசியிருந்தார். அதன் பலனாக ரூட் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

கேப்டன் ரூட்

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ரூட் நியமிக்கப்பட்டதும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட தொடரை 3 – 1 என வென்றது ரூட் அணி. கேப்டனாக ரூட் தனது முதல் இன்னிங்ஸில் 190 ரன்களை குவித்தார். ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இரண்டு முறை ஆஷஸ் தொடரில் விளையாடி உள்ளது. அதில் ஒரு தொடரில் தோல்வியும், ஒன்று சமனிலும் முடிந்துள்ளது. இதுவரை இங்கிலாந்து அணியை அவர் 48 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தியுள்ளார். அதில் 26 போட்டிகளில் வெற்றியும், 16 போட்டிகளில் தோல்வியும், 6 போட்டிகள் சமனும் செய்துள்ளது இங்கிலாந்து அணி.

image

ரூட் அணியை வழிநடத்துவதை காட்டிலும் பேட்டிங்கில் கவனம் செலுத்தலாம் என்ற விமர்சனங்களும் எழுந்தன. கேப்டனான பிறகு நிறையவே தனது ஆட்டத்தில் ரூட் சொதப்ப தொடங்கினார். அதற்கு காரணம் அவரது பேட்டிங் ஆர்டரை மாற்றியது தான். கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ரூட் 9 சதங்களை விளாசியுள்ளார். அதில் மூன்று சதங்கள் கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் பதிவு செய்யயப்பட்டுள்ளது.  இதன் மூலம் அவரது பேட்டிங் ஆவரேஜும் எகிறியுள்ளது. தனது அபாரமான கரண்ட் ஃபார்மினால் பழைய ரூட்டாக ஆக்ஷனுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார் ரூட். 

-எல்லுச்சாமி கார்த்திக்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.