உத்தராகண்ட்டில் பனிச்சரிவினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படும் நிலையில், அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் திரை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் ட்விட்டரில் தங்களது ஆறுதல்களை பதிவிட்டு வருகின்றனர். 

உத்தராகண்ட்டில் மாநிலம் சமோலி மாவட்டத்தில், தபோவான் என்ற இடத்தின் அருகே நீர் மின் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவரும் பகுதியில் திடீரென பனிப்பாறைகள் வெடித்துச் சிதறி, பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் அதன் அருகில் உள்ள தௌலிகங்கா ஆற்றில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அச்சமயம் நீர் மின் திட்ட கட்டுமானப் பணியில் சுமார் 100 பேர் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் 10க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் தபோவான் நீர் மின் திட்ட கட்டுமானத்தில் ஒரு பகுதி சேதமடைந்தது. அப்போது அப்பகுதியில் உள்ள குகையில் சிக்கிக் கொண்ட 15க்கும் மேற்பட்டோரை இந்திய – திபெத் எல்லை காவல்துறையினர் மீட்டனர்.

இதனிடையே, தௌலிகங்கா ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. சமோலி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டனர்.

தகவலறிந்த உத்ரகாண்ட்டில் முதலமைச்சர் திரேந்திர சிங் ராவத், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டு, முடுக்கிவிட்டார். வெள்ளப்பெருக்கு தொடர்பாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். அசாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், தொலைபேசி வாயிலாக T.S. ராவத்தையும் மாநில அதிகாரிகளையும் தொடர்புகொண்டு பேசினார்.

அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். இந்தியா உத்ரகாண்ட்டில் மாநில மக்களுடன் இருப்பதாகவும் அனைவரின் பாதுகாப்பிற்காக தேசம் பிரார்த்தனை செய்து வருவதாகவும் மோடி கூறியிருக்கிறார்.

இந்நிலையில் உத்தராகண்ட் பனிச்சரிவு குறித்து பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது பிரார்த்தனைகளை ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறும் போது, “ உத்தராகண்ட்டில் உள்ள அனைவரின் பாதுகாப்பிற்காக எனது பிரார்த்தனைகள்” என்று பதிவிட்டுள்ளார்.


கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கூறும் போது, “உத்தராகண்ட்டில் வெள்ளத்தில் பாதிப்படைந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களும் பிரார்த்தனைகளும். மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களால் உதவ இயலும் என நான் நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.


நடிகர் அக்‌ஷய் குமார் கூறும் போது, “ பனிச்சரிவு காட்சிகள் பயங்கரமாக இருந்தது, அனைவரின் பாதுகாப்பிற்காக எனது பிரார்த்தனைகள்” என்று பதிவிட்டுள்ளார்.


நடிகர் சோனு சூட் கூறும் போது, “ உத்தராகண்ட் நாங்கள் உங்களோடு இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.