கேரள மாநிலத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கடந்த 3-ம் தேதி கேரளா சென்றார். கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டதுடன், நிர்வாகிகள் கூட்டம், கட்சியில் வி.ஐ.பி-களை உறுப்பினராக சேர்த்தல் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அதன் ஒரு பாகமாக திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் சினிமா நடிகர் கிருஷ்ணகுமார் தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டார்.

திருச்சூரில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா முன்னிலையில் முன்னாள் டி.ஜி.பி ஜேக்கப் தாமஸ் தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டார். வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடபோவதாக முன்னாள் டி.ஜி.பி ஜேக்கப் தாமஸ் ஏற்கனவே கூறியிருந்தார். மேலும் எந்த தொகுதியில் போட்டியிடப்போவது என முடிவு செய்யவில்லை என்றும் அறிவித்திருந்தார். கடந்த சட்டசபை தேர்தலில் ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டுமே கேரள பா.ஜ.க-விற்கு கிடைத்தது. இந்த முறை கூடுதல் சீட்டுகளை பிடிக்கும் எண்ணத்தில் பா.ஜ.க முக்கிய பிரபலங்களை களத்தில் இறக்க தயாராகி வருகிறது. கேரளத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜே.பி. நட்டா நேற்று திருச்சூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்த முன்னாள் டி.ஜி.பி ஜேக்கப் தாமஸ்

அப்போது கேரளத்தை ஆளும் சி.பி.எம் முதல்வர் பினராயி விஜயனை, ஸ்வப்னா சுரேஷின் தங்கம் கடத்தல் வழக்கிலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை சோலார் பேனல் மோசடி வழக்கிலும் தொடர்பு படுத்தி கிண்டலாக பேசினார் ஜே.பி.நட்டா. பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசுகையில், “கேரளத்தின் அரசு அமைப்புகள் முழுவதும் ஊழல் நிறைந்ததாக உள்ளது. ஒரு மாநிலம் என்ற நிலையில் ஊழலும், மோசடியும் கேரளத்திற்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது. ஊழல் வழக்குகளில் பெண்களின் நிழல் உண்டு. இந்த அரசு செய்தது பணம் மோசடி மட்டும் அல்ல, அதற்கும் மேலானது. பினராயி விஜயனின் அரசு தவறான நிர்வாகமும், செயலற்ற தன்மையும் கொண்டது.

Also Read: தங்கம் கடத்தல் வழக்கு: 98 நாள்கள் சிறை… 3 வழக்கிலும் ஜாமீன்! புத்தகத்துடன் வெளியேறிய சிவசங்கரன்!

பெண்கள் மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் இந்த ஆட்சியில் அதிகரித்துள்ளன. சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது கேரள அரசு. கேரளத்தில் ஒரு முதலமைச்சர் தங்கத்தின் மீது மிகவும் பிரியமாக இருக்கிறார். மற்றொரு முதலமைச்சர் சோலாரில் இருந்து ஆற்றல் பெறுகிறார்.

பா.ஜ.க பொதுக்கூட்டத்தில்

பிரதமர் நரேந்திர மோடி செய்யும் நல்ல திட்டங்களை கடவுளின் சொந்த தேசத்திற்கும் விரிவுபடுத்த நாங்கள் விரும்புகிறோம். பிரதமரின் கரிசனமான நல்ல நடவடிக்கைகள் குறித்து நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏமன் நாட்டில் இருந்தும், ஆப்கானிஸ்தானத்தில் இருந்தும் மக்களை எப்படி திரும்ப அழைத்து வந்தோம் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.