தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், வாரிசு அரசியல் குறித்து அவர் கொடுத்த ஒரு விளக்கம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாகியிருக்கிறது.

தி.மு.க-வின் இளைஞரணிச் செயலாளர், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் எதிர்காலம் குறித்தும், ‘வாரிசு அரசியல்’ என தி.மு.கவின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்தும் ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,

“அரசியல் நோக்கத்தோடு சொல்லப்படுகின்ற ஒரு கருத்து. என்னையும் `வாரிசு, வாரிசு…’ என்று சொன்னார்கள். படிப்படியாக நானாக வளர்ந்து வந்திருக்கிறேன். அதே போன்று உதயநிதியைப் பொறுத்தவரை, எப்படி மற்ற கட்சித் தோழர்கள், கட்சியில் இருக்கக்கூடிய நிர்வாகிகள், படிப்படியாக வளர்ந்து வந்து இன்றைக்கு ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறார்களோ, அப்படித்தான் வந்திருக்கிறார். துறைமுகம் தொகுதி, சேப்பாக்கம் தொகுதியில் தலைவர் அவர்கள் நின்றபோதும், நான் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக நின்றபோதும் தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறார். அதற்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்திருக்கிறார்.

`உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ – நசரேத்பேட்டை

தி.மு.க முன்னெடுத்த ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ போன்ற பிரசாரங்களில் அவர் பங்கேற்று, அவருடைய பணியைச் செய்துகொண்டிருக்கிறார். இளைஞரணிப் பொறுப்புக்கு வந்த பிறகு, இளைஞரணிக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிற பணிகளைச் செய்துகொண்டிருக்கிறார். யார் வளர்ந்து வந்தாலும், இந்தக் கட்சியைப் பொறுத்தவரை, முக்கியப் பொறுப்புக்கு, முக்கிய இடத்துக்கு வரக்கூடிய வாய்ப்பு நிச்சயம் உண்டு. அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது; இனிமேலும் அப்படித்தான் இருக்கும்” என்றும் பதிலளித்திருக்கிறார் அவர். ஸ்டாலினின் இந்த விளக்கம்தான் தற்போது மிகக் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இதுமட்டுமல்ல, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க தலைவர்கள், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன், கனிமொழி, தயாநிதி மாறன் என மிகப்பெரிய வாரிசுப் பட்டாளமே களமிறங்கியது. `நாங்களும் சளைத்தவர்கள் அல்ல’ என அ.தி.மு.க-வில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன், ஓ.பன்னீர்செல்வத்தில் மகன் ரவீந்திரநாத், பி.ஹெச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன், ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் எனப் பலர் போட்டியிட்டனர். அதேபோல, காங்கிரஸ் கட்சியிலும்கூட காங்கிரஸ் தலைவர்களின் வாரிசுகள் போட்டியிட்டனர். ஆனால், பொதுவாக வாரிசு அரசியல் என்றால் தி.மு.க-வை மட்டும் எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது ஏன்?

உதயநிதி ஸ்டாலின்

தவிர, ‘எங்கள் கட்சியில் பொறுப்புக்கு வருவதோ, வேட்பாளராகப் போட்டியிடுவதோ எங்கள் கட்சி நிர்வாகிகள் முடிவெடுக்க வேண்டிய விஷயம். இதில் வெளியில் இருப்பவர்களுக்கு என்ன பிரச்னை’ என்றும் தி.மு.க-வினரால் எதிர்க்கேள்வி முன்வைக்கப்படுகிறது. இது குறித்து, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் பேசினோம்.

முரளி அப்பாஸ்:

“கருணாநிதியின் குடும்ப உறுப்பினராக இருப்பதால், உதயநிதி நிச்சயமாக தி.மு.க-வின் உறுப்பினராகத்தான் பல ஆண்டுகளாக இருந்திருப்பார். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், தடாலடியாக அந்தக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் என்கிற உயரிய பொறுப்புக்கு அவர் வந்ததுதான் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. அவரது தந்தை ஸ்டாலின் அடுத்தடுத்த பதவிகளுக்கு வரும்போது, அந்தக் கட்சியினர் கொடுத்த விளக்கங்களே இன்னும் முடியாதபோது, அவரருடைய மகனுக்கும் தற்போது விளக்கம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதில், ‘வாரிசு அரசியல் என்பது உள்நோக்கத்தோடு சொல்லப்படுவது’ என்கிற ஸ்டாலினின் விளக்கம் வேடிக்கையானது. காரணம், அந்தக் கட்சியில் வாரிசு அரசியல் நடப்பது உலக்கத்துக்கே தெரியும்.

முரளி அப்பாஸ்

`அதனால் மற்றவர்களுக்கு என்ன நஷ்டம்… எங்கள் கட்சியில் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம்…’ என்று அவர்கள் சொல்ல முடியாது. காரணம், வாரிசு அரசியல் முறை, சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. ஆபத்தை விளைவிக்கக்கூடியது. ஸ்டாலினும் இப்படித்தான் கட்சிப் பொறுப்புகளுக்கு வந்தார். இப்போது முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஸ்டாலினுக்கு அதற்கான தகுதியில்லை என்பது, அவர் பங்குபெறும் ஒவ்வொரு மேடையிலும் நிரூபணமாகிவருகிறது. கேட்டால், `கட்சிக்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார்’ என்கிறார்கள். அவரைவிட அந்தக் கட்சிக்காக கடுமையாக உழைத்த திறமையான பல நபர்களை, அந்தக் கட்சியில் என்னால் காண்பிக்க முடியும். தி.மு.க-வினர் வேண்டுமானால் ஸ்டாலினைச் சகித்துக்கொள்ளலாம். தமிழக மக்கள் ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்… அந்தக் கட்சித் தலைவரின் மகன் என்பதைத் தவிர மற்றவர்களைவிட அவருக்குக் கூடுதல் தகுதி, திறமை என்ன இருக்கிறது?

அப்படி ஸ்டாலினுக்கே தமிழகத்தை ஆளக்கூடிய அளவுக்கு திறமை இல்லை என்கிறபோது, அதற்குள் அவர் மகன் வந்துவிட்டார். நான்கு கூட்டங்களில் பேசிவிட்டார். பிரசாரத்துக்குச் சென்றுவிட்டார் என்பதெல்லாம் ஒரு தகுதியாக எடுத்துக்கொள்ள முடியாது. அதிகாரத்தைத் தங்களின் குடும்பத்துக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே வாரிசுகளைக் கொண்டுவருகிறார்களே தவிர, வேறொன்றும் இல்லை” என்கிறார் அவர்.

`அனைத்துக் கட்சிகளிலும் வாரிசு அரசியல் இருக்கிறபோது, தி.மு.க-வை மட்டும் குறிவைத்துத் தாக்குவது ஏன்?’ என நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயசீலனிடம் பேசினோம்.

ஜெயசீலன்

ஜெயசீலன்:

“ஜனநாயகத்தின் அடிப்படையில் இயங்குகிற எந்தவொரு வெகுஜன அமைப்பிலும் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின் அடிப்படையில்தான் ஒருவர் பொறுப்புக்கு வர வேண்டும். அதுதான் அடிப்படை மாண்பு. காங்கிரஸ் கட்சி, இயற்கையிலேயே பண்ணையார் தன்மைகொண்ட, ஜனநாயகத்தை மறுக்கிற ஒரு கட்சி. அதனால், அந்தக் கட்சியில் நமக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால், தற்போதைய திராவிடக் கட்சிகளின் தாய் இயக்கமான தி.மு.க-வில், அண்ணா காலத்தில் ஜனநாயகத்தன்மை அதிகமாக இருந்தது. காரணம், அந்தக் கட்சியின் தோற்றுநரான அண்ணா மிகச்சிறந்த ஜனநாயகவாதியாக இருந்தார். திராவிட இயக்கக் கொள்கைகளின்மீது எனக்கு பல மாறுபாடுகள் இருந்தாலும், இந்த விஷயத்தை நான் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

ஆனால், தாய் அமைப்பாக, பிற கட்சிகளுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய அந்தக் கட்சியே, வாரிசுகளை முன்னிறுத்துவது ஒரு நோயாக மற்ற கட்சிகளுக்கும் பரவுகிறது. அண்ணா கட்டமைத்த ஜனநாயக விழுமியங்களை, கருணாநிதி காலத்திலும் இப்போதும் தின்று செரித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் தி.மு.க-வின் மீது அதிகமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன” என்கிறார் அவர்.

மேற்கண்ட விமர்சனங்கள் குறித்து, தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர், கான்ஸ்டைன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

கான்ஸ்டைன்டைன் ரவீந்திரன்:

“ஜனநாயகம் என்பது பெரும்பான்மையான கருத்துகளால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவது அல்ல. நல்லதைத் தேர்தெடுப்பதுதான். உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக வந்த பிறகுதான் வேலைகள் விறுவிறுவென்று நடக்கின்றன. முன்பைவிடவும் மிகச்சிறப்பான மாற்றம் இளைஞரணியின் செயல்பாடுகளில் தெரிகிறது. அவர், அந்தப் பதவிக்கு வந்ததால் எங்கள் கட்சிக்கு நன்மைதானே தவிர, பாதிப்பு எதுவுமில்லை. எங்கள் கட்சி எடுத்த முடிவு சரிதான் என நிரூபணமாகியிருக்கிறது. தி.மு.க-வின் தலைமைப் பொறுப்புக்கோ, ஆட்சிப் பொறுப்புகளுக்கோ அவர் வரும்போது அதைப் பற்றி விவாதிக்கலாம். தற்போது அது குறித்துப் பேசுவது தேவையற்றது.

அதேபோல, எங்கள் தளபதி, 89, 96 போன்ற தேர்தல்களில் வெற்றிபெற்றபோதும் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. 96-ல் அவர் காலத்தில் அரசியலுக்கு வந்த, இளைஞரணியைச் சேர்ந்த பொன்முடி, கே.என்.நேரு, சுரேஷ்ராஜன் உள்ளிட்ட 13 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால், அது பற்றியெல்லாம் யாரும் இங்கு பேசுவதில்லை. இன்று எங்கள் தலைவருக்கு இணையான ஆளுமைகொண்ட ஒரு தலைவர் எங்கள் கட்சியில் மட்டுமல்ல, மற்ற எந்தக் கட்சியிலும் இல்லை.

Also Read: ராகுல், உதயநிதி பின்னே எடப்பாடி பழனிசாமி – மதுரையில் களைகட்டும் ஜல்லிக்கட்டு அரசியல்!

எங்கள் தலைவரைப் பற்றிக் கருத்து சொல்ல, மக்கள் நீதி மய்யத்துக்கு எந்தத் தகுதியும் இல்லை. இனத்துக்காக, மொழிக்காக, நாட்டுக்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக எத்தனை போராட்டங்களுக்கு அவர்கள் களத்துக்கு வந்திருக்கிறார்கள்… மற்றவர்கள் சொல்வதைப்போல எங்கள் கட்சியில் பல திறமையானவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், திறமையானவர்களான நாங்கள் அனைவரும் இணைந்துதான் எங்களுக்கான தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். திருச்சி சிவா, ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் திறமையானவர்கள்தான். எங்கள் தலைவர் வந்த காலகட்டத்தில்தான் அவர்கள் அரசியலுக்கும் வந்தார்கள். ஆனால், பொன்முடி அண்ணனை தலைவராக்கினால், விழுப்புரம் மாவட்டத்தைத் தாண்டி தென் மாவட்டங்களில், அவரைத் தலைவராக்கியதற்கான காரணத்தைச் சொல்லவே எங்களுக்குக் காலம் பத்தாது. அதேநிலைதான் மற்ற தலைவர்களுக்கும். ஆனால், மு.க.ஸ்டாலின் எங்கள் தலைவர் என்று சொன்னால், இந்த நாடு அதை ஒப்புக்கொள்கிறது.

பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின்

அண்ணா என்ன சொன்னார்… ‘மக்களிடம் செல்லுங்கள், அவர்கள் எதை ஏற்றுக்கொள்கிறார்களோ, அதைச் செயல்படுத்துங்கள்’ என்று சொன்னார். அவரின் வழிகாட்டுதல்படிதான் நாங்கள் நடந்துவருகிறோம். அடுத்ததாக நாம் தமிழர் கட்சி, தத்துவார்த்தரீதியாக எங்களை விமர்சிப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இனத்துக்காக, மொழிக்காக தி.மு.க நிற்க வேண்டும் என அவர்கள் நினைப்பதை நான் வரவேற்கிறேன். சித்தாந்தரீதியாக சில சிதிலங்கள் இருக்கின்றன என்றால் நாங்கள் அதைச் சரிசெய்துகொள்வோம். ஆனால், களத்தில் நாம் தமிழர் கட்சி யாருக்கு ஆதரவாக நிற்கிறது… அவர்களால் ஆட்சிக்கு வர முடியாத சூழல் நிலவும்போது, அவர்கள் நியாயமாக யாரை ஆதரிக்க வேண்டும்… ஆனால், அ.தி.மு.க-வினருடன் ரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொன்டு எங்களை எதிர்த்துவருகிறார்கள். தி.மு.க-வைவிட, அ.தி.மு.க எந்தவிதத்தில் மேம்பட்டது, ஸ்டாலினைவிட எடப்பாடி எந்தவிதத்தில் திறமையாளர் என்பதை அவர்கள் விளக்க வேண்டும்” என்கிறார் அவர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.