டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் 70 நாட்களை எட்டி தீவிரமடைந்து வரும் நிலையில் மாநிலத்தின் 3 முக்கிய எல்லைகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 70-வது நாட்களை எட்டியுள்ளது. டெல்லியின் முக்கிய எல்லைகளான காசிப்பூர், சிங்கு, டிக்ரி ஆகிய இடங்களில் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததை அடுத்து தற்போது எல்லைகள் அனைத்தும் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காவல் துறையினர் மட்டுமின்றி துணை ராணுவப் படை வீரர்கள், சிறப்பு அதிரடி படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி-உத்தரப்பிரதேசம் எல்லையான காசிப்பூரில் என்.24 தேசிய நெடுஞ்சாலையை மறித்து பாலத்திற்கு மேலேயும், கீழேயும் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே அந்த பகுதியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தற்போது அப்பகுதியில் சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, வேலிகளின் மேல்புறம் முட்கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. இணையதள சேவையும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை இயக்கமுடியாத வகையில் சாலைகளில் ஆணிகளும் அடிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் போராட்டத்தின் பிரதான இடமாக சொல்லப்படக்கூடிய பஞ்சாப்- எல்லையான சிங்கு-ஹரியானாவிலும் தடுப்பு வேலிகள், சிமெண்டால் ஆன தடுப்புகள் எழுப்பப்பட்டுள்ளன. சாலைகளில் பள்ளமும் தோண்டப்பட்டு, சில இடங்களில் ஆணிகளும் அடிக்கப்பட்டுள்ளன. இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டே உள்ளது. இப்பகுதியில் உள்ளூர் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருவதால், கூடுதலாக துணை ராணுவப்படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

image

அரியானா எல்லையான டிக்ரியை பொறுத்தவரையில் மெட்ரோ நிலையம் அமைந்து இருக்கக்கூடிய பகுதியில் பாலத்திற்கு கீழே போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு கண்டெய்னர்கள் நிறுத்தப்பட்டு, சாலையின் நடுவே கூர்மையான ஆணிகள் மற்றும் கம்பிகள் பதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாரும் இந்த பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது முதலில் இந்த பகுதியில்தான் விவசாயிகள் தடுப்பு வேலிகளை தகர்த்தெறிந்து டெல்லிக்குள் நுழைய முயன்றனர்.

மூன்று எல்லைகளும் காவல்துறையினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவசாயிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.