அண்மையில் தமிழகம் வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பரப்புரை மட்டுமன்றி கிராமத்தினருடன் சேர்ந்து சமையலும் செய்து அசத்தினார்.

தமிழக சுற்றுப் பயணத்தின்போது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள தோட்டத்தில் ராகுலுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள், காளான் பிரியாணி தயார் செய்துகொண்டிருந்தனர். செயற்கையான மசாலாப் பொருட்கள் எதுவுமின்றி, மண்மணம் மாறாமல் பிரியாணி தயாராகிக்கொண்டிருந்தபோது, ராகுல் காந்தி அங்கே சென்றார். சமையல் பணியில் இருந்தவர்களுடன் சில வார்த்தைகள் தமிழில் உரையாடிய, பின்னர் சமையலில் இறங்கினார் ராகுல்.

image

ரைத்தாவை ருசி பார்த்த ராகுல் காந்தி, நானும் சமைப்பேன் என்று கூறினார். காளான் பிரியாணி மணமாகவும், பார்க்க அருமையாகவும் இருக்கிறது என பாராட்டினார். ஓலைப் பாயில், கிராமத்து சமையல் கலைஞர்களுடன் அமர்ந்து சகஜமாகப் பேசிய ராகுல், அவர்கள் அமெரிக்கா சென்று சமைக்கத் தேவையான உதவிகளையும் செய்வதாகத் தெரிவித்தார்.

கமகமவென வாசனை வந்த காளான் பிரியாணியை சாப்பிட்டு, அதற்கு நற்சான்றும் அளித்தார். அண்ணனுடன் அமர்ந்து உணவருந்தியது உற்சாகமாக இருந்தது என இளம் சமையல் கலைஞர்கள் மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

image

ராகுலுக்கு உணவு சமைத்து கொடுத்த கிராமத்து சமையல் கலைஞர்கள், வில்லேஜ் குக்கிங் சேனல் என்னும் YOUTUBE சேனலை 2 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். தாங்கள் சமைக்கும் உணவுகளை அருகில் உள்ள முதியோர் காப்பகத்திற்கு அளித்து பசியாற்றுகின்றனர். அவர்களிடம் என்னென்ன உணவு வகைகள் எல்லாம் சமைப்பீர்கள் என்று கேட்டறிந்த ராகுல் காந்தி, அடுத்தமுறை தமக்கு ஈசல் சமைத்து கொடுக்க வேண்டும் என கூறிவிட்டுச் சென்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.