காந்தியிடம் இந்த அரசு கற்றுக்கொள்ள ஏராளமான விழுமியங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது மனித உரிமைகளைப் பாதுகாப்பது. மனித உரிமைகளை நெஞ்சுக்கு நெருக்கமாக வைத்திருந்தவர் காந்தி!

காந்தியவாதியான ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட, இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான மனித உரிமை அமைப்பான மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) நேற்று மாலை, காந்தியடிகளை நினைவு கூர்ந்து, நாட்டில் மனித உரிமைகள் இன்று நசுக்கப்படும் சூழலை படம் பிடித்துக் காட்டியுள்ளது. அதன் சாராம்சமே இந்தக் கட்டுரை.

Mahatma Gandhi

அரசத் துரோக வழக்கில் காந்தி கைது செய்யப்படும் முன், அரசைக் கடுமையாக விமர்சித்து பல கட்டுரைகளை அவர் எழுதியிருந்தார்.

அரசத் துரோக வழக்கில், புகழ்பெற்ற அகமதாபாத் விசாரணையில், குற்றவாளியாக நீதிமன்றத்தின் முன் நின்ற காந்தி,

Gandhi

கருத்துச் சுதந்தரத்தை இதை விட வலுவாக யாரும் வெளிப்படுத்திவிட முடியாது. சுதந்தரம் என்பது ஆங்கிலேயர்களிடமிருந்து மட்டும் பெறுவதல்ல, மனித உரிமைகளின் அங்கமான, பேச்சுரிமை, எழுத்துரிமை, அமைதியாகக் கூடும் உரிமை உள்ளிட்ட சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதே என்று அவர் கருதினார். அதனால்தான் அவர், “அகிம்சையைக் கடைபிடிப்பதோடு ஒத்துப் போகும் சிவில் உரிமைகள், சுயராஜ்யத்தின் முதல் படி. இதுவே அரசியல் மற்றும் சமூக வாழ்வின் மூச்சுக் காற்று. இதுவே சுதந்தரத்தின் அடித்தளம். இதை நீர்த்துப் போகச் செய்யவோ, சமரசம் செய்து கொள்ளச் செய்யவோ கூடாது. இதுதான் வாழ்வின் நீர்” என்றார்.

ஆனால் இன்றைய அரசியல் சூழலில், அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துரிமை, ஒரு தரப்பு சமூகத்தைக் காயப்படுத்துகிறது என்றும், அரசை விமர்சிக்கப் பயன்படுத்தப்படுகிறது என்றும் ஒட்டு மொத்தமாக நசுக்கப்படுகிறது.

“பேச்சுரிமை என்பது காயப்படுத்தினாலும், தாக்குதலுக்கு உட்படுத்தப்படக் கூடாதது; பத்திரிகைகள் கடுமையாக விமர்சனம் செய்யவும், ஏன் விஷயங்களை தவறாக சித்தரிக்கவும் கூட முடிந்தால்தான், பத்திரிகைச் சுதந்தரம் உண்மையில் மதிக்கப்படுகிறது… கூடும் மக்கள் புரட்சிகரத் திட்டங்களைக் கூட விவாதிக்க முடிந்தால்தான், கூடும் உரிமை உண்மையில் மதிக்கப்படுகிறது” என்று சொன்னவர் காந்தி.

Modi

Also Read: இந்திய அரசு பரிசளித்த மகாத்மா காந்தி சிலை… அமெரிக்காவின் டேவிஸ் நகரில் சேதம்! – என்ன நடந்தது?

அதனால்தான், பிரிட்டிஷ் அரசு ரொளலட் சட்டத்தைக் கொண்டு வந்த போது, அவர் கொந்தளித்தார். ரொளலட் சட்டம், ஒருவரை தடுப்புக் காவலில் வைக்கவும், அவர் நீதிமன்றத்தில் முறையிடும் உரிமையைப் பறிக்கவும் வழி செய்தது. இதை எதிர்த்து காந்தி, நாடு தழுவிய ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்தார். அரசு எதிரிகளாகக் கருதுபவர்களை விசாரணையின்றியும், நீதிமன்றத்தில் முறையீடு செய்ய இடமளிக்காமலும் சிறையில் தள்ளுவதை அவர் கடுமையாக எதிர்த்தார்.

ஆனால், ரொளலட் சட்டத்திற்கு நிகரான ஊபா (UAPA) சட்டம், சுதந்தர இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது. பீமா கோரேகான் வழக்கில் ஸ்டான் சாமி, சுதா பரத்வாஜ், கவிஞர் வரவர ராவ் உள்ளிட்ட 16 மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஊபா சட்டத்தின் கீழ் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். அரசியல் சாசன விழுமியங்களின் மீது நம்பிக்கை கொண்ட, ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட, காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உள்ள செயற்பாட்டாளர்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்த காரணத்தால், ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில், வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயத் தலைவர்கள் மீதும் ஊபா பாய்ந்துள்ளது.

அடிப்படை மனித உரிமைகளான சிந்திக்கும் உரிமை, போராடும் உரிமை, வழிபடும் உரிமை ஆகியவற்றை தன் வாழ்வில் முழுமையாகப் பயன்படுத்தியவர் காந்தி. இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட அவர், ஒரு போதும் இந்த அடிப்படை உரிமைகளை மறந்தவரல்லர். ஆனால், காந்தியின் தேசம் என்று உலகால் அறியப்படும் இந்தியாவில், அரசை எதிர்ப்பவர்களெல்லாம் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். “பெயில் (பிணை)தான் விதி, ஜெயில் என்பது விதிவிலக்கு” என்று உச்ச நீதிமன்றம் வகுத்த கொள்கைகள் காற்றில் பறக்கின்றன. ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை கிடைக்கவில்லை. சிலர் இரண்டாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுகின்றனர்.

பத்திரிகை சுதந்திரம்

இறுதியாக, கருத்துரிமையோடு தொடர்புடைய காந்தியின் நகைச்சுவை உணர்வைக் குறிப்பிட்டாக வேண்டும். மனிதர்களின் அடிப்படை இயல்பான நகைச்சுவைக்குப் பெயர் போனவர் அவர். காந்தியின் காதுகளின் வடிவத்தைக் கண்டு, அவரை மிக்கி மவுஸ் என்று சரோஜினி நாயுடு நையாண்டி செய்திருக்கிறார். காந்தியும் மற்றவர்களை கிண்டலடிப்பதில் சளைத்தவர் அல்லர். அரசர் ஜார்ஜ் V அவர்களை காந்தி சந்தித்த போது, ஒரு நிருபர் “ஏன் இவ்வளவு குறைவாக உடையணிந்துள்ளீர்கள்?” என்று கேட்டார். அதற்கு காந்தி, “எங்கள் இருவருக்கும் தேவையான உடைகளை அரசரே அணிந்துள்ளார்” என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

ஆனால், ஆளும் அரசு, “கருத்துரிமை / நகைச்சுவை என்றால் கிலோ என்ன விலை?” என்று கேட்கிறது. இன்றைய அரசியல் சூழலை தொடர்ந்து நையாண்டி செய்து வரும், காமெடியன் முனாவர் ஃபரூக்கி என்ற இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குஜராத்தைச் சார்ந்த அவரைக் கைது செய்துள்ளது மத்திய பிரதேச காவல்துறை. பிணை மறுத்த உயர் நீதிமன்றமோ, மத உணர்வுகளை யாரும் காயப்படுத்த அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளது. இதில் காமெடி என்னவென்றால், அவர் நடத்தாத நிகழ்ச்சியொன்றில், செய்யாத நையாண்டியைச் சுட்டிக்காட்டி அவரைக் கைது செய்துள்ளது அரசு. இதை விட ஜனநாயகத்தை வேறு எப்படி கேலி செய்ய முடியும்?

Narendra Modi

Also Read: தென்னாப்பிரிக்கா முதல் தென் குமரி வரை… காந்தியை பிரமிக்க வைத்த தமிழர்கள்! #Gandhi

அடிப்படை மனித உரிமைகளை அரசு தொடர்து நசுக்கி வருவது, ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான விஷயமல்ல. காந்தியின் நினைவு தினமான இன்று, அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துரிமையைப் பாதுகாக்கவும், மனித உரிமைகளை நசுக்கும் ஊபா சட்டத்தை நீக்கவும், ஊபா சட்டத்தின் கீழ் பொய் வழக்குளில் கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் விடுதலையை உறுதி செய்யவும், கருத்துரிமையோடு தொடர்புள்ள நகைச்சுவை உணர்வை மதிக்கவும் அரசை வலியுறுத்துவோம். எல்லோருக்குமான, பன்மைத்துவம் கொண்ட, சகிப்புத்தன்மை கொண்ட, நகைச்சுவை உணர்வு கொண்ட இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம். இதுவே, காந்தியின் நினைவுக்கு நாம் செய்யும் கைம்மாறாக இருக்கும்.

– கே.சரவணன்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.