கல்விக் கட்டணம் எவ்வளவு என்பதை அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில், அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி தமிழக சுகாதார துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனாலும் மாணவர்கள் போராட்டத்தில் இருந்து சற்றும் பின்வாங்காமல் தீர்க்கமாக இருக்கின்றனர். அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்ததால் தமிழக அரசே ஏற்று நடத்தும் என கடந்த 2013ஆம் ஆண்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரி என கருதி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தனர். ஆனால் சேர்ந்த பிறகு, தனியார் கல்லூரிக்கு நிகராக கட்டணம் இருப்பதாக கூறி 50 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவர்களின் தீவிர போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக அரசு உயர்கல்வி துறையின் கீழ் இயங்கிய ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை, சுகாதார துறையின் கீழ் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த மாணவர்கள் அதில் தங்களின் ஒற்றைக் கோரிக்கையான அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பது இடம் பெறாததால் போராட்டத்தை தொடர்வதாகவும், கல்வி கட்டணம் எவ்வளவு என்பதை அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் எனதெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களே நிர்ணயிக்கப்படும் என்றும் அதற்கான அரசாணையை விரைவில் வெளியிடுவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நடப்பில் பயிலும், இனி கட்டணம் செலுத்த உள்ள மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே கட்டணம் செலுத்திவிட்ட மாணவர்களுக்கோ, பழைய மாணவர்களுக்கோ பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.