‘’இளைஞர்களே உங்களது ரத்தத்தை கொடுங்கள். நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன்’’ என்று மேடையில் அனல் பேச்சை வீசிய வங்கத்துச் சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள் இன்று.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது அஹிம்சை மூலம் ஆங்கிலேயருக்கு எதிராக களமிறங்கியவர் மகாத்மா காந்தி. அதற்கு நேரெதிராக இளைஞர்களை ஒன்று சேர்த்து, ஆயுதங்களை தாங்கிய புரட்சிப் படையை அமைத்து ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் தான்  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் பிறந்த நேதாஜி, பாப்டிஸ்ட் மிஷன் பள்ளியில் ஆரம்பக் கல்வியும், கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரி மற்றும் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியிலும் படித்தார். கல்லூரியில் படிப்பு என்ற புத்தகப் புழுவாக மட்டும் அல்லாமல் மாணவர்களுக்கான படைப் பயிற்சியில் கலந்து கொண்டு சிறந்த மாணவனாக தேறினார்.

image

ஐசிஎஸ் தேர்வில் வெற்றியடைந்தார் நேதாஜி. ஆனால் ஆங்கிலேயருக்கு அடிபணிந்து செய்யக்கூடிய வேலையை என்னால் செய்ய முடியாது என்று சீறிய நேதாஜி அந்த வேலையை உதறினார். நேதாஜியின் வேட்கையை கல்லூரியிலேயே கண்ட சி.ஆர். தாஸ், நேதாஜிக்கு தன்னுடைய தேசியக் கல்லூரியின் தலைவர் பொறுப்பை கொடுத்தார். அப்போது நேதாஜிக்கு வயது 25. தீப்பற்ற ஏங்கி நிற்கும் மாணவர்களுக்கு இடையே நெருப்பு பொறியாய் விழுந்தார் சுபாஷ் சந்திர போஸ். வார்த்தைகளில் உற்சாகம், ஒவ்வொரு பேச்சிலும் கக்கிய அனல் மாணவர்களை உத்வேகப்படுத்தியது. நேதாஜியின் பெயர் மெல்ல மெல்ல பரவ தொடங்கியது.

கொல்கத்தாவில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை தொடங்கி வெற்றிகரமாக செய்து வந்த நேதாஜிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. தங்களுக்கு தலைவலியாக நேதாஜி உருவெடுத்ததை உணர்ந்த ஆங்கில அரசு அவரை பொய்க் காரணங்களை கூறி சிறையில் அடைத்தது. ஆனால் நல்ல தலைவனின் வெற்றிக்கு தலைவன் எதிரே நிற்கத் தேவையில்லை அவரின் பெயர் ஒன்றே போதும் என்பதற்கு ஏற்ப சிறையில் இருந்தபடியே சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார் நேதாஜி. நேதாஜி என்ற பெயரை மக்கள் எவ்வளவு நம்பினார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

image

நாட்டுக்கெனத் தனிக் கொடி அறிவித்தது, ஜன கணமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தது, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியது, ஜான்சி ராணிப் படை என பெயரிட்டு பெண்களுக்கெனத் தனிப் பிரிவு ஏற்படுத்தியது என நேதாஜியின் ஒவ்வொரு அடியும் ஆங்கிலேய அரசுக்கு மரண அடியாக விழுந்தது. மேலும் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை முதன் முதலில் உச்சரித்த தலைவரும் நேதாஜி தான்.

1945 ஆகஸ்ட் 18-ஆம் தேதி விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக ஜப்பான் அரசு அறிவித்தது. ஆனால், அவரின் மரணம் குறித்துப் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் எழுந்தன. வீட்டுச்சிறையில் அடைத்து ஆங்கிலேயர்கள் காத்து நின்ற போதே காற்று போல தப்பித்து ஜெர்மனியில் தஞ்சம் அடைந்த மாவீரன் விமான விபத்தில் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என மக்கள் பேசினர். 

நேதாஜி இல்லாவிட்டாலும் அவர் பெயர் ஒலிக்காத மேடைகளே இல்லை. அவர் கூறிய வார்த்தைகள் இந்தியாவில் எங்கெங்கும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.