புதிய சட்டம் நிறைவேற்றப்படுமானால், ஆஸ்திரேலியாவில் தேடல் சேவையை முடக்குவதைத் தவிர வேறு வழியில்லை என அந்நாட்டு அரசை கூகுள் எச்சரித்துள்ளது. இதன் பொருள், ஆஸ்திரேலியர்கள் கூகுள் தேடலை பயன்படுத்த முடியாமல் போகலாம் என்பதுதான். இதை ஆஸ்திரேலிய அரசுக்கு கூகுள் விடுத்துள்ள மிரட்டல் என்றும் எடுத்துக்கொள்ளலாம். கூகுளின் இந்த மிரட்டலுக்கு, ஆஸ்திரேலிய அரசின் பதிலை, ‘நெத்தியடி’ என்று சொல்வதைவிட, இறையாண்மை மிக்க அரசின் சரியான பதில் என வர்ணிக்கலாம்.

ஆஸ்திரேலியாவுக்கும், கூகுளுக்கும் என்னதான் பிரச்சனை? கூகுள் ஏன் அந்நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறவேண்டும்? இந்த பிரச்னையின் பின் விளைவுகள் என்ன? – இப்படி பல கேள்விகள் எழுப்பப்படும் இந்தப் பிரச்னை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஆஸ்திரேலியா மற்றும் கூகுள் இடையிலான சட்ட மோதல்தான் இந்த பிரச்னைக்கு மூலக்காரணம் என்றாலும், உண்மையில் இது ஆஸ்திரேலியா தொடர்பான பிரச்னை மட்டும் அல்ல: இறையாண்மை மிக்க தேசங்களுக்கும், கூகுள் போன்ற பெரு நிறுவனங்களுக்கும் இடையிலான பிரச்னையாகவே இதைப் பார்க்க வேண்டும்.

உலக அளவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஆற்றல் மிக்க வர்த்தக பேரரசுகளாக கூகுள், ஃபேஸ்புக் போன்ற பெரு நிறுவனங்கள் வளர்ந்திருப்பதன் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டு வரும் பின்னணியில் இந்த மோதலை புரிந்துகொள்வதே சரியாக இருக்கும். அதற்கு முன் முதலில், ஆஸ்திரேலியாவில் கூகுளுக்கு என்ன பிரச்னை என்று பார்க்கலாம்.

image

செய்தி நிறுவனங்கள் உருவாக்கித்தரும் மதிப்புக்கு ஏற்ப அவற்றுக்கு இணைய நிறுவனங்கள் நஷ்ட ஈடு அளிக்க வழி செய்யும் வகையில் ஆஸ்திரிலேய அரசு சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, இணைய மேடைகளாக செயல்படும் நிறுவனங்கள், அவை சுட்டிக்காட்டும் செய்தி இணைப்புகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

சட்ட மொழியை ஒதுக்கிவிட்டு, எளிதாக புரிந்துகொள்ள வேண்டும் எனில், கூகுள் தேடலில் இடம்பெறும் செய்தி இணைப்புகளுக்கு, அவற்றை உருவாக்கிய செய்தி நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதுதான் இந்த சட்டத்தின் சாரம்சம். கூகுள் மட்டும் அல்ல, இணைய மேடையாக கருதப்படும் ஃபேஸ்புக்கிற்கும் இது பொருந்தும். (இந்த பிரச்னையில், கூகுள் போலவே ஃபேஸ்புக்கும் ஆஸ்திரேலிய அரசை எச்சரித்துள்ளது).

இணையத்தில் வெகுகாலமாக விவாதிக்கப்பட்டும் வரும் பிரச்னை இது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கூகுள் போன்ற தேடியந்திரங்கள் செய்திகள் உள்ளிட்ட இணைப்புகளை தேடல் முடிவில் அடையாளம் காட்டுகின்றன. இதன் பயனாக கூகுள் விளம்பர வருவாயை அள்ளிக் குவிக்கிறது. ஆனால், கூகுளில் சுட்டிக்காட்டப்படும் செய்திகளை வெளியிட்ட நிறுவனங்கள் இதனால் எந்தப் பலனும் அடைவதில்லை. கூகுள் வழியே, இணையவாசிகள் தேடி வந்தாலும், அவற்றுக்கு வருவாய் இழப்புதான். செய்திகளை தான் இலவசமாக படித்து விட்டுச்செல்கின்றனரே!

ஒருபக்கம் இணையத்தின் தாக்கத்தால் நாளிதழ்கள் உள்ளிட்ட பாரம்பரிய ஊடகங்கள் தங்கள் வருவாயை இழந்து வருகின்றன. இணையம் உருவாக்கிய இலவச யுகத்தில், விற்பனையும் குறைந்து, விளம்பர வருவாயும் வற்றி போய்விட்டது. இன்னொரு பக்கம் பார்த்தால், தேடியந்திரமான கூகுளும், சமூக வலைதளமான ஃபேஸ்புக்கும் பெரு நிறுவனங்களாக வளர்ந்து நிற்கின்றன. இந்த இரண்டு நிறுவனங்களுமே விளம்பர வருவாயை அள்ளிக் குவிக்கின்றன.

செய்திகள் உள்ளிட்ட தேடல் முடிவுகளைத் தேடி தொகுத்தளிக்கிறது கூகுள். ஃபேஸ்புக் என்ன செய்கிறது என்றால், இணையவாசிகள் நட்பை பகிர்ந்துகொள்ள வழி செய்யும் மேடையை உருவாக்கி, அதில் அவர்களுக்கான செய்திகளையும் இடம்பெறச் செய்கிறது. எந்த வகை செய்திகளை யார் விரும்பி படிக்கின்றனர் என்பது போன்ற விஷயங்களை வைத்து விளம்பர வலை விரித்து இந்நிறுவனங்கள் வருவாய் ஈட்டுகின்றன.

இப்படிக் குவியம் விளம்பர வருவாயால் கூகுளும், ஃபேஸ்புக்கும் இணைய குபேரன்களாகி இருக்கின்றன. ஆனால், முன்னணி செய்தி நிறுவனங்கள் கூட வருவாய்க்கு திணறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

image

இந்தப் பின்னணியில்தான், கூகுள் போன்ற நிறுவனங்கள், தாங்கள் சுட்டிக்காட்டும் செய்திகளுக்கு, அவற்றை வெளியிடும் செய்தி ஊடகங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனும் கருத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. செய்திகளை வைத்து வருமானம் பார்க்கும்போது, அவற்றில் ஒரு பகுதியை செய்தியை உருவாக்கும் நிறுவனங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனும் வாதம் இதற்கு அடிப்படையாக அமைகிறது.

இணைப்பு மூலம், செய்தி நிறுவனங்களுக்கு இணைய போக்குவரத்தை அளிக்கும்போது, தனியே கட்டணம் ஏன் செலுத்த வேண்டும்? என்பது இதற்கான இணைய நிறுவனங்களின் பதில் வாதமாக அமைகிறது. நாங்கள் ஒரு சேவையை அளிக்கிறோம்; அதில் செய்திகளை அடையாளம் காட்டுகிறோம். எங்கள் சேவை மூலம் வருமானம் ஈட்டுகிறோம். இதற்காக செய்தி நிறுவனங்களுக்கு ஏன் கட்டணம் தர வேண்டும் என அவை கேட்கின்றன.

இரண்டு தரப்பின் வாதங்களுமே சரியானவைதான் என்றாலும், இந்த பிரச்னையில், செய்தி நிறுவனங்களின் குரல் பலவீனமாகவே இருப்பதை உணரலாம். அதே நேரத்தில் கூகுள், ஃபேஸ்புக் போன்ற பெரிய நிறுவனங்களின் குரல் வலுவாகிக் கொண்டே வருவதையும் உணரலாம். இணைய உலகில் அவை வைத்ததுதான் சட்டம் என்று கூட சொல்லலாம்.

இந்தப் பின்னணியில்தான் ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு ஊடகங்களை காப்பாற்றும் முயற்சியாக கூகுள், ஃபேஸ்புக் போன்ற இணைய நிறுவனங்கள் செய்தி நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்த வழி செய்யும் புதிய சட்டம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாக இத்தகைய சட்டம் ஆஸ்திரேலியாவில் விவாதிக்கப்பட்டு, அமலுக்கு வரும் நிலையில் உள்ளது.

எதிர்பார்க்க கூடியது போல, கூகுள் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறது. இதன் விளைவாகவே, புதிய சட்டம் அமலுக்கு வந்தால், ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடல் முடக்கப்படுவதை தவிர வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ளது. பொருளாதார நோக்கிலும், செயல்பாட்டு நோக்கிலும் மோசமான விளைவுகளை இந்த சட்டம் உண்டாக்கிவிடும் என கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் எதிர்வினை ஆற்றுவதில்லை என ஆஸ்திரேலிய அரசு அமைதியாக பதில் அளித்துள்ளது. சட்டம் இயற்றுவது எங்கள் வேலை, எங்கள் நாட்டில் செயல்பட விரும்பினால், எங்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலோட்டமாக பார்த்தால், இது வருவாய் தொடர்பான மோதலாக தோன்றினாலும், பிரச்னை அதைவிட ஆழமானது. உண்மையில் கூகுள் செய்தி நிறுவனங்களுக்கு இழப்பீடு தருவதை கூட எதிர்க்கவில்லை. அதை தீர்மானிக்கும் உரிமை தன்னிடம் இருக்க வேண்டும் என விரும்புகிறது.

ஆஸ்திரேலிய புதிய சட்டப்படி, இணைய நிறுவனங்கள் செய்திகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது மட்டும் அல்ல, இதில் பிரச்னை என வந்தால், மத்தியஸ்த அமைப்பு ஒன்று தலையிட்டு தீர்த்து வைக்கும் என்பதாகும். இந்த அம்சத்தை பார்த்து கூகுள் மிரண்டு போயிருப்பதாக சொல்கின்றனர்.

அது மட்டும் அல்ல, கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் அல்கோரிதம்களில் செய்யும் மாற்றங்களையும் மத்தியஸ்தர் பார்வைக்கு உட்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அம்சம் கூகுளை இன்னும் கிலியாக்கியுள்ளது.

பணம் தருகிறோம், ஆனால் எங்கள் விதிப்படி தருகிறோம் என கூகுள் சொல்வதாக புரிந்துகொள்ளலாம். செய்தி நிறுவனங்களுக்கு இழப்பீடு தருவதுதான் முறை என கருதப்பட்டால், நாங்கள் தீர்மானிக்கும் அடிப்படையில் அதை தருகிறோம் என கூகுள் கருதுகிறது. மாறாக, இது மத்தியஸ்தர் அமைப்பிடம் விடப்பட்டால், வழக்கு என வந்தால், கூகுள் எதுவும் செய்ய முடியாது, அளிக்கப்படும் தீர்ப்பை ஏற்று செயல்பட வேண்டியிருக்கும். இது வர்த்தக நோக்கில் செலவு மிக்கதாக ஆகலாம் என்பதோடு, கூகுள் இன்னொரு அமைப்பின் அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட்டாக வேண்டும். அதனால்தான் கூகுள் மத்தியஸ்தர் அமைப்பு அம்சத்தை எதிர்க்கிறது.

image

அதேபோல, அல்கோரிதம் என்பது இணைய நிறுவனங்களின் ரகசிய வழியாகும். இவற்றை வைத்துக்கொண்டு தான், இணையவாசிகளை குறிவைக்கும் இலக்கு விளம்பரங்கள் மூலம் அள்ளிக் குவிக்கின்றன. வர்த்தக நோக்கில் இந்த அல்கோரிதம்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கின்றன.

இந்த ரகசியத்தை பகிரங்கமாக்கினால், தங்கள் வர்த்தகம் என்னாவது என கூகுள் அஞ்சுகிறது.

மேலும், ஆஸ்திரேலியாவில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் மற்ற நாடுகளும் இதுபோன்ற சட்டத்தை கொண்டு வந்தால் என்னாகும் என கூகுள் கூடுதலாக அஞ்சுகிறது. எனவேதான், இந்த சட்டம் மோசமான முன்னுதாரணமாகிவிடும் என கூறுகிறது.

கூகுள் தன் எதிர்ப்புக்கு வர்த்தக நோக்கத்தை காரணமாக கூறாமல், தேடியந்திரங்களின் செயல்பாடு, இணைய மேடைகளின் தன்மை போன்ற அம்சங்களை எல்லாம் குறிப்பிட்டு நேர்த்தியாக வாதங்களை முன் வைத்தாலும், இறையாண்மை மிக்க அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டும் என்பதே அதன் உண்மையான அச்சமாக இருக்கிறது.

அதனால்தான், ‘தேடலை முடக்குவோம்’ என மிரட்டுகிறது. ஒரு வர்த்தக நிறுவனம், ஒரு தேசத்தின் அரசை நோக்கி எச்சரிக்கை செய்வதை எப்படி புரிந்து கொள்வது?

தேடியந்திர இணைப்புகளுக்கு கட்டணம் செலுத்துவது இணைய சுதந்திர தன்மைக்கு எதிரானது எனும் கருத்து முன்வைக்கப்படுவதையும் மறந்துவிடக்கூடாது.

இந்த சட்டம், இணைப்புகள் மூலம் இயங்கும் வலையின் தன்மையை மாற்றிவிடும் என வையவிரிவு வலையான வெப்பை கண்டுபிடித்த டிம் பெர்னரஸ் லீ கூறியிருக்கிறார். அவர் சொல்வது சரிதான்.

நண்பர்களிடம் காபி கடையை பரிந்துரைக்கும் ஒருவரிடம், அந்த காபி கடை அதற்கான கட்டணத்தை கேட்பது போல, இருக்கிறது இணையவாசிகளுக்கு செய்திகளை பரிந்துரைக்கும் எங்களிடம் கட்டணம் கேட்பது என கூகுள் வாதிடுகிறது.

ஆனால், பிரச்னை என்னவெனில், கூகுளும் பேஸ்புக்கும் பரிந்துரைப்பது மட்டும் இல்லை. செய்திகளை பரிந்துரைத்து விட்டு, அதன் பின் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் பின் தொடர்ந்து விளம்பர வலை விரித்து செயல்படும் வர்த்தக சாம்ப்ராஜ்யங்களாக இருக்கின்றன. எனவே, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இணைப்புகளை சுட்டிக்காட்டும் இணையத்தின் தன்மையை இந்நிறுவனங்கள் தங்கள் வர்த்தக நோக்கிற்கான வாதமாக முன்வைப்பதை ஏற்க முடியாது என்கின்றனர் வல்லுனர்கள்.

ஆக, சர்வ வல்லமை படைத்த பெரு நிறுவனங்களாக வளர்ந்திருக்கும் கூகுள் போன்ற நிறுவனங்களை கட்டுப்படுத்தி, அவற்றின் செயல்பாடுகளால் விளையும் பாதகங்களை குறைத்தாக வேண்டும் எனும் பரந்த கருத்தின் ஓர் அம்சமாகவே இந்த பிரச்னையை பார்க்க வேண்டும்.

சைபர்சிம்மன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.