ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் இருந்து ஒருவரின் புகைப்படம் மட்டும் அமெரிக்கர்களின் இணையப் பக்கங்களில் வைரலாக வலம்வந்து கொண்டிருக்கிறது. பதவியேற்பு விழாவுக்காக அனைவரும் டாப் டு பாட்டம், ட்ரெண்டிங் ஆடைகள், கோட் சூட் என ஆடம்பரத்தின் உச்சம் தொட்டு அணிந்துகொண்டு வர, ஒருவர் மட்டும் குளிர்காலத்தில் அணியும் ஸ்வட்டர், முகக்கவசம், துணியால் நெய்யப்பட்ட கையுறை என வித்தியாசமான கெட்டப்புடன் வருகை புரிந்தார். இதுமட்டுமில்லாமல், கால் மேல் கால் போட்டு பவ்வியமாக அமர்ந்தவாறு அவர் விழாவை ரசிக்க, இது விழாவில் பங்கேற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது. கூடவே நெட்டிசன்களையும்.

அவ்வளவுதான், அந்த மனிதரின் புகைப்படம்தான் கடந்த இரண்டு நாட்களாக மீம்களாக சித்தரிக்கப்பட்டு இணையத்தில் ஹிட் அடித்து கொண்டிருக்கின்றன. அதிபராக ஜோ பைடன் கையெழுத்து போடும்போது அருகில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது தொடங்கி, மலையாள பட போஸ்டரில் போஸ் கொடுத்தது வரை விதவிதமான சித்தரிப்பு மீம்ஸ்களால் உலகளவில் வைரலாக்கப்பட்டார் அந்த மனிதர். இப்படி ஒற்றை லுக்கால் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி கொண்டிருப்பருவர் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் நாடாளுமன்ற பிரதிநிதி பெர்னி சாண்டர்ஸ். இப்படி இணையத்தில் கேலி பொருளாகி கொண்டிருக்கும் இந்த பெர்னி சாண்டர்ஸ் பற்றி பலருக்கும் தெரியாது. அவர்கள் அறிய வேண்டிய பின்புலம் இதுதான்:

image

யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?

நியூயார்க் நகரின் புருக்ளின் பகுதிதான் இவரது பூர்விகம். சிகாகோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பெர்னி 1971லேயே அரசியலில் காலடி எடுத்துவைத்தவர். அப்போது அவரின் வயது 30-க்கும் குறைவு. 1971லேயே அரசியலில் நுழைந்தாலும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து அமெரிக்க பிரதிநிகள் சபையில் உறுப்பினரானார். 40 ஆண்டு காலத்தில் அமெரிக்க பிரதிநிகள் சபைக்கு தேர்வான ஒரே சுயேச்சை என்றால் அது பெர்னி மட்டும்தான். ஆம்… இப்போது வேண்டுமானால் அவர் ஜனநாயக கட்சியில் இருக்கலாம். ஆனால், அவரின் ஆரம்ப காலகட்டம் சுயேச்சையாகத்தான் தொடங்கியது.

ஜனநாயகக் கட்சியின் மிக மூத்த அரசியல்வாதி. 30 ஆண்டுகளாக அமெரிக்க அரசியலில் இருந்து மக்கள் பணியாற்றி வருகிறார். எப்போதும் நேர்மையான அணுகுமுறை இருக்க வேண்டும் என நினைக்கும் மனிதர். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், தீவிர கம்யூனிசவாதி கிடையாது. ஆனால், அமெரிக்காவை கொஞ்சமேனும் அசைத்து பார்க்கும் சோசலிம் பேசுவார் இந்த பெர்னி சாண்டர்ஸ்.

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கட்சியில் இருந்துவந்தாலும் வியட்நாம் முதல் ஈராக் வரை அமெரிக்காவால் நடத்தப்பட்ட அத்தனை அத்துமீறல்களையும் முதல் ஆளாக எதிர்ப்பது, அவரின் சோசலித்திற்கான ஒரு சான்று. ஈவா மொராலஸ்ஸின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு அமெரிக்காவிலிருந்து கண்டனம் தெரிவித்த மிகச் சிலருள் பெர்னியும் ஒருவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் எந்த மூலையிலும் அநீதி விஷயங்கள் நடக்கும்போது முதல் ஆளாக குரல்கொடுப்பார் பெர்னி.

இந்தமுறை ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளர்களுக்கான போட்டி கட்சிக்குள் நடந்தபோது பெர்னி போட்டியிட்டார். பைடன், மைக் ப்ளூம்பெர்க் என சக போட்டியாளர்களுக்கு மத்தியில் பெர்னிக்கே அதிக ஆதரவு கிடைத்தது. இவரின் சோசலிச கொள்கை இவர் அதிபர் வேட்பாளராக இருந்தபோதும் வெளிப்பட்டது. வேட்பாளர் தேர்வின்போது அனைவருக்கும் இலவச மருத்துவம்; குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு $15 டாலர்களாக உயர்த்த கோரி போராடுவது, கட்டணமில்லா கல்லூரிகள் என மக்களின் அடிப்படை பிரச்னைகளை வாக்குறுதிகளாக கொடுத்தார்.

image

மேலும், `அமெரிக்காவுக்கான அரசியல் புரட்சியைத் தொடங்குவோம்’ மற்றும் `நான் அல்ல, நாம்’ என்று முழக்கங்களுடன் கொள்கை ரீதியாக அதிபர் வேட்பாளர் தேர்வில் முன்னணியில் இருந்தார். ஆப்பிரிக்க, லத்தீன், இந்திய அமெரிக்க குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த தலைவராக பெர்னி களத்தில் பார்க்கப்பட்டு வந்தார். இதனால் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட மூவரில் பெர்னிக்கு அடித்தட்டு மக்களிடம் இருந்து அமோக ஆதரவு பெருகியது. அமெரிக்காவிலிருந்து ட்ரம்ப் மட்டுமல்ல, அமெரிக்க பொருளாதார முறையும் வெளியேற வேண்டும் என்றே மக்கள் பெர்னியை ஆதரித்தனர்.

ஆனால், ஒருநாள் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா நேரில் சென்று பெர்னியை சந்தித்தார். சந்திப்பின் காரணம், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியிலிருந்து பெர்னி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தவே. பைடன் ஆதரவில் இருந்த ஒபாமா, பெர்னி போட்டியிட்டால் பைடனுக்கு ஆதரவு கிடைக்காது என்பது அறிந்து பெர்னியை நேரில் சந்தித்து அதிபர் வேட்பாளர் போட்டியில் விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். பிறகு மெல்ல மெல்ல பெர்னியும் ஒதுங்க தொடங்கினார்.

அதன்பின் வேட்பாளர் போட்டி நடந்த ஐயோவா போன்ற மாகாணங்களில் முடிவு வருவது தாமதிக்கப்பட்டது. ஊடகங்கள், மக்கள் என ஜெயித்த நபரை தோற்கடிக்கப்பட பேச்சுவார்த்தை நடக்கிறது என்று பெர்னிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இறுதியில் கட்சியின் நிர்பந்தத்திற்கு பணிந்தார். எதிர்பார்த்தபடி அந்த மாகாணத்தில் பெர்னி தோல்வியடைந்தார்.

அமெரிக்காவில் எப்போதும் முதலாளித்துவ சிந்தனை கொண்டவர்களின் குரல்தான் ஓங்கி ஒலித்துத்துள்ளது. முதன்முறையாக சோசலிச சிந்தனை கொண்டவர் அமெரிக்க அதிபராகும் வாய்ப்பு உருவான நிலையில் அதை ஆரம்பத்திலேயே முறித்துவிட்டனர்.

image

இத்தகைய சூழலில் நடந்த பைடனின் பதவியேற்பு விழாவில்தான் மிக எளிதாக பெர்னி இப்படி அமர்ந்திருந்தார். ஆடம்பரம் இல்லா உடை, அடக்கத்துடன் அவர் உட்கார்ந்திருந்தது என பதவியேற்பு விழாவில் அவரின் செயலை இங்கு கேலி செய்து மீம்களாக்கி வருகின்றனர். ஆனால் பெர்னியை விரும்பும் பலர் பெர்னியின் இந்த தோற்றமே அமெரிக்கா விரும்பும் தோற்றம், அரசியல் என அவருக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர். இதைவிட ஒரு முக்கியமான விஷயம்… பதவியேற்பு விழாவில் பெர்னி பகட்டு இல்லாமல் அமர்ந்திருக்க இன்னொரு காரணம் இருக்கிறது. பதவியேற்புவிழாவில் அவர் அணிந்திருந்த குளிருக்கு ஏதுவான எளிமையான ஒர் ஆடை, கையுறைகளையும் ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியை பெர்னிக்கு பரிசளித்தவையாம்.

– மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.