‘மார்கழி மழையால்’ பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்குவதை உறுதி செய்து, பயிர்க் காப்பீட்டுத் தொகையும் தாமதமுமின்றி கிடைப்பதற்கு முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள், தொடர்ச்சியாகப் பெய்த மார்கழி மழையில், அடியோடு மூழ்கி – பொங்கல் விழா நேரத்தில் விவசாயிகள் அனைவரும் பெருந்துயருக்கும், பேரிழப்பிற்கும் உள்ளாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

நிவர் புயலில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு, இந்த “மார்கழி மழை” பேரிடியாகவே வந்திருப்பதை, ஏனோ இன்னும் அ.தி.மு.க. அரசு உரிய முறையில் அணுகுவதாகத் தெரியவில்லை. வடி வாய்க்கால்களைத் தூர்வாரும் பணியில் கோட்டை விட்ட அ.தி.மு.க. அரசு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதிலும் கோட்டை விட்டு – குறட்டை விட்டுத் தூங்குகிறது.

image

நிவர் புயல் பாதிப்பிற்குள்ளான நிலங்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையை ஏற்காத அ.தி.மு.க. அரசு, ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்று செய்த அறிவிப்பு, விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அறிவிக்கப்பட்ட அந்த நிவாரணமும் இன்னும் முழுமையாக தங்கள் கைகளுக்கு வந்து சேரவில்லை எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குமுறுகிறார்கள், கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகையும் பெரும்பாலான விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. இப்போது பெய்துள்ள கனமழையால் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு மேல் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றன. குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகி, அரசின் நிவாரணம் ஏதும் இதுவரை கிடைக்காமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வேளாண் நிலங்களில் கடல் போல் நிரம்பியிருக்கும் தண்ணீரையும் – அதில் மூழ்கிக் கிடக்கும் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்களையும் பார்த்து விவசாயிகள் கண்கலங்கி – கையறு நிலையில் புலம்பி நிற்பதை அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே நிவர் புயலுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 600 கோடி ரூபாய் நிவாரணத் தொகை என்ன ஆனது? எத்தனை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்குப் போய்ச் சேர்ந்தது? மத்திய பா.ஜ.க. அரசிடம் கோரிய 3758 கோடி ரூபாய் நிதி என்ன ஆனது? என்பது எல்லாம் மர்மமாக இருக்கும் நிலையில் – இப்போது ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு விவசாயிகளின் வாழ்வில் தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுபோன்ற சூழலில், நாசமாகியுள்ள நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல், “இனிமேல்தான் கணக்கு எடுக்கப் போகிறோம்” என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலிருக்கிறது. ஆகவே, “மார்கழி மழையால்” பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் உடனடியாக நிவாரணத் தொகையை அறிவிக்க வேண்டும் என்றும்; ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்குவதை உறுதி செய்து, பயிர்க் காப்பீட்டுத் தொகையும் எவ்வித தாமதமுமின்றி கிடைப்பதற்கு முதலமைச்சர் திரு. பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது” என தெரிவித்திருக்கிறார்

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.