உலகிலேயே அதிக மக்கள் கொண்டுள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கான பணிகள் ஜோராக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக 30 மில்லியன் முனகள பணியாளர்களுக்கு இந்த கொரோனா தடுப்பூசியை செலுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகளில் கால் பங்கு தடுப்பூசிகள் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள COVAXIN மருந்துகளாகும். இந்த மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த தெளிவான தரவுகள் இதுவரை பதிவாகவில்லை. குறிப்பாக மருந்தின் செயல்பாடு குறித்த மூன்றாம் கட்ட பரிசோதனை முழுமை பெறாமல் உள்ளது. 

image

சோதனை முயற்சியில் முழுமை பெறாத மருந்தை ஏன் வாங்க வேண்டுமென மருத்துவ வல்லுனர்களும், சுகாதார துறை சார்ந்த வல்லுனர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மருந்தை காட்டிலும் கோவாக்சின் மருந்தின் விலையும் கூடுதலாக உள்ளது. அதே போல கோவிஷீல்டு தடுப்பு மருந்து சோதனை பிரிட்டன் மற்றும் பிரேசிலில் பெரிய அளவில் பலன் கொடுத்துள்ளதாகவும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 

கோவிஷீல்டு தடுப்பு மருந்தை 200 ரூபாய் வீதம் 1.1 கோடி டோஸ்களை  இந்திய அரசு வாங்கியுள்ளது. மறுபக்கம் கோவாக்சின் மருந்தை 295 ரூபாய் வீதம் 38.5 லட்சம் டோஸ்கள் வாங்கப்பட்டுள்ளனவாம். அதில் 16.5 லட்சம் டோஸ்களை பாரத் பயோடெக் நிறுவனம் அரசுக்கு இலவசமாக கொடுத்துள்ளதாம். அதுபோக மீதமுள்ள ஒவ்வொரு டோஸையும் 206 ரூபாய்க்கு அரசு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

“மலிவான விலையில் மருந்து கிடைக்கும் போது அதிக விலைக்கு ஏன் வாங்க வேண்டும். இதில் அரசின் வியூகம் தான் என்ன. இதில் ஒரு நியாயமும் இருக்க வழியே இல்லை” என தெரிவித்துள்ளார் சுகாதாரம் சார்ந்த பொருளாதார வல்லுனர் இந்திரனில் முகோபாத்யாய். 

image

மூன்றாம்கட்ட பரிசோதனை முடிந்ததும் அனுமதிக்கலாம் என இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணைய விஞ்ஞானிகள் தெரிவித்த போது, ‘கொரோனா தடுப்பு மருந்தின் ‘பேக் – அப்’ மருந்தாக இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி பயன்படுத்தப்படும்’ என இந்தியாவிற்கான கொரோனா டாஸ்க் ஃ போர்ஸ் குழுவில்  இடம்பெற்றிருந்த பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். 

அதேபோல், அவசரகால பயன்பாட்டுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக சொல்கிறார் ICMR தலைவர் பல்ராம் பார்கவா. இதன் அம்சம் என்னவென்றால் கொரோனா தொற்று பரவலில் எழுச்சி இல்லையெனில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தான் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார் டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர். கோவாக்சின் மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை முழுமை பெறாத நிலையில் அரசு ஏன் இதில் அவசரம் காட்டுகிறது என்பது புரியவில்லை என தெரிவித்துள்ளார் முன்னாள் NHSRC இயக்குனர் சுந்தரராமன்.  

இவை அனைத்தும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மருந்தை அதன் மூன்றாம் கட்ட முடிவுகள் வரும் வரை பயன்படுத்தாமல் முடக்கி வைக்கவே அறிவுறுத்துகின்றன. இருந்தாலும் இதில் அரசு முரண்பட்ட கருத்துகளை முன்வைத்து வருகிறது. 

இப்போதைக்கு நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேர் வீதம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பு தடுப்பூசி  செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மொத்தம் இரண்டு டோஸ்கள் ஒவ்வொருவருக்கும் செலுத்த உள்ளது அரசு. சீரம் நிறுவனம் இப்போதைக்கு 5 கோடி கோவிஷீல்டு டோஸ்களை இருப்பு வைத்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் 10 கோடி டோஸ்களை தயாரிக்க இலக்கு வைத்துள்ளது சீரம். 

image

சுயசார்பு இந்தியா திட்டத்தின் அடிப்படையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மருந்தை அரசு வாங்கி இருக்கலாம் என்கிறார் IIHMR-இன் சுனில் ராஜ்பால். அதே நேரத்தில் சீரம் நிறுவனம் பெருமளவில் ஏற்றுமதி செய்ய வேண்டுமென்பதற்காக 200 ரூபாய்க்கு தடுப்பு மருந்தை கொடுத்திருக்கலாம் எனவும். இதே மருந்து தனியார் கைகளுக்கு செல்லும் போது 1000 ரூபாய்க்கு அந்நிறுவனம் விற்பனை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் சில தெரிவித்துள்ளனர். 

அதே நேரத்தில் இந்த இரண்டு மருந்துகளை பயன்படுத்துவதில் மத்திய மற்றும் மாநிலஅரசுகளுக்கு இடையே கருத்து முரணும் ஏற்பட்டுள்ளது. சத்தீஷ்கரை ஆளும் காங்கிரஸ் கட்சி கோவாக்சின் மருந்து தங்கள் மாநிலத்தில் பயன்படுத்தப்படாது எனவும் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்ட பரிசோதனையின் முடிவை அடுத்து அந்த மருந்தை பயன்படுத்துவது  குறித்து ஆலோசிக்கப்படும் என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் மத்திய அரசாங்கம் அந்த மாநிலத்திற்கு கோவிஷீல்டு மருந்தை மட்டும் தான் கொடுக்குமா என இதுவரை தெரிவிக்கவில்லை. 

தகவலுக்கு நன்றி : SCROLL

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.