அதானி நிறுவனத்துக்கு விமான நிலையப் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டதற்கு நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் கௌகாத்தி ஆகிய 6 விமான நிலையங்களை மேம்படுத்திப் பராமரிப்பதற்கான ஒப்பந்தப் பணிகளை அதானி குழுமத்திற்கு மத்திய அரசு வழங்கியது.

முன்னதாக, கடந்த 2018 டிசம்பர் மாதம் 11-ம் தேதி அகமதாபாத், மங்களூரு, லக்னோ, ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களை தனியார்மயமாக்கக்கோரி ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. இந்த முக்கியமான விமான தளங்கள் அனைத்தும் நாட்டின் முதலீடுகளில் ஒன்று என்பதால் ஒரே நிறுவனத்துக்கு 6 விமான நிலையங்களின் பணிகளை ஒப்பந்தம் அளிப்பது தவறான முடிவு என நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை எச்சரித்தது.

image

இந்த ஒப்பந்தப் புள்ளி வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது 2018 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி இந்த அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டது. ஏற்கெனவே டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களுக்கு முன்பு ஒப்பந்தப் புள்ளி வழங்கப்பட்டபோது ஒரே நிறுவனத்துக்கு அளிக்கப்படாதது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆனால் 2018 ஆம், ஆண்டின் ஒப்பந்தப்புள்ளி குறித்த விவாதத்தின்போது பொருளாதார விவகாரத்துறையின் எச்சரிக்கை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதே தினத்தன்று நிதி ஆயோக் இந்த விமான நிலையப்பணி ஒப்பந்தப் புள்ளி குறித்து இதே ஆட்சேபத்தை தெரிவித்திருந்தது. ஆனால் அதை அரசின் ஆலோசகர்கள் ஒரு நிறுவனத்தால் அனைத்து விமான நிலையங்களையும் கவனிக்கும் திறன் இருந்தால் இந்த ஆட்சேபத்தை கருத்தில்கொள்ள வேண்டாம் எனக் கூறி உள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிதி அமைச்சக செயலர் கர்க் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு அதானி நிறுவனத்துக்கு இந்த விமான நிலையப் பணிகள் அளிக்கப்பட்டன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதானி நிறுவனத்துக்கு அகமதாபாத், மங்களூரு மற்றும் லக்னோ விமான நிலைய பணிகளுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டு அதன் பிறகு மேலும் விமான நிலையங்கள் ஒவ்வொன்றாக அதானி நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளன,

இந்த ஒப்பந்தப் புள்ளிகளின் அடிப்படையில் அதானி குழுமத்திற்கு 6 விமான நிலையங்களின் பணிகளை 50 வருடங்கள் நடத்த ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை தனியார்மயமாக்கியபோது அந்த பணிகளுக்கான அதிகபட்ச காலகட்டமாக 30 ஆண்டுகள் மட்டுமே இருந்துள்ளன. அத்துடன் இந்திய விமான நிலைய நிறுவனத்துக்கு இந்த இரு விமான நிலையங்களிலும் 26% பங்குகள் அளிக்கப்பட்டிருந்தன. எனினும் இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய விமானத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக மேலும் மூன்று விமான நிலையப் பணிகளை அதானி நிறுவனம் ஏற்காமல் உள்ளது. இதற்குப் பண இழப்பு ஏற்படலாம் எனச் சொல்லப்பட்டாலும் அதிகாரிகளை மாற்றம் செய்வது தற்போது இயலாத செயல் என அதானி நிறுவனம் காரணம் கூறி உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.