ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இதில், அஸ்வின் – விஹாரி இணை நீண்ட நேரம் பாட்னர்ஷிப் அமைத்தது பாராட்டுகளை பெற்றது. ஆஸ்திரேலிய பவுலர்களை டயர்டாக்கிய அஸ்வின் 128 பந்தில் 39 ரன்களும், விஹாரி 161 பந்துகளில் 23 ரன்களும் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தனர்.

இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டி தனது வாழ்நாளில் மறக்கமுடியாதது என்று குறிப்பிட்டு, அன்று என்ன நடந்தது என்பதை பகிர்ந்துள்ளார் அஸ்வினின் மனைவி ப்ரீத்தி நாரயணன்.

“என்னுடைய நான்கரை வயது மகள் ஆத்யா. அன்று காலை பெட்ரூமில் அஸ்வின் வலியால் துடிப்பதைக் கண்டாள். உடனே, ‘இன்னைக்கு லீவு போடுங்கப்பா… நீங்கள் வீட்டில் ஓய்வு எடுக்காமல் எதற்கு இந்த வலியுடன் ஆபிஸூக்கு போறீங்க?’ என்ற அவளது பேச்சு எங்களை சிரிக்க வைத்தது.

உடனே நானும் என் பங்குக்கு, ‘பள்ளியில் குழந்தைகள் ஸ்நாக்ஸ் இடைவெளியின்போது வீட்டுக்கு வருவது போல, நீங்களும் 2 மணிநேரம் அனுமதி கேட்டு வீட்டுக்கு வந்து செல்லுங்கள்’ என்றேன். அதற்கு அஸ்வின், ‘ஓவரா ஓட்றியே’ என்றார். அது பதற்றமான காலை வேளையாக இருந்தது. அவர் வலியின்போது இப்படி துடித்து நான் பார்த்தில்லை. அவர் தரையில் ஊர்ந்து கொண்டிருந்தார். அவரால் எழுந்திருக்கவோ, குனியவோ முடியவில்லை. அவர் எப்படி விளையாடப் போகிறார் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அவர் ‘நான் விளையாடியாக வேண்டும். இதை செய்து முடிக்க வேண்டும்’ என்று என்னிடம் கூறினார்.

image

நான்காவது நாள் ஆட்டத்தின் முடிவில், மாலை நேரத்தின் முதல் அறிகுறிகள் தென்பட்டன. அவரை அன்று தொலைக்காட்சியில் ஒரு வித வலியுடன் ஆடுவதை பார்த்தேன். தாமதமாக திரும்பி வந்தவரிடம், “நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா, உடல் ரீதியாக ஏதேனும் பிரச்னை இருக்கிறதா” என நான் அவரிடம் கேட்டேன். காலை வாம்அப்பின்போது முதுகில் சில மாற்றங்களை உணர்ந்ததாக கூறினார். அவர் வித்தியசமாக நடந்துவந்ததை நான் அன்று கவனித்தேன்.

அதுமட்டுமில்லாமல் முதுகில் ஏதோ ஒன்றை செய்தபடியே நடந்துவந்தார். பின்னர் அவர் பிசியோவுக்குச் சென்றார். அஸ்வின் வலியால் துடித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் மற்ற வீரர்களும் காயமடைந்ததை நான் அறிவேன். ஆட்டம் இன்னும் முடிவடையவில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது, எப்படி இவர்கள் விளையாடப்போகிறார்கள் என்று. ஒரு குடும்ப உறுப்பினர்களாக எங்கள் உணர்வுகள் வேறு மாதிரியாக இருக்கும். நாங்கள் அவர்களை இன்னும் நெருக்கமானவர்களாக உணர்கிறோம்.

அன்று இரவு, ஐந்தரை வயதான அகிரா மற்றும் ஆத்யா இருவரையும் தனி அறையில் தூங்க வைக்க முயற்சித்தேன். காரணம் அவருக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் என்று. அடுத்த நாள் காலை எழுந்தபோது, மோசமாக உணர்ந்தேன். அவருக்கு வலி இன்னும் கடுமையானது. நான் பிஸியோ அறைக்கு அவரை அழைத்து சென்றேன். நல்ல வேளையாக அது எங்கள் அறைக்கு பக்கத்து அறையாக இருந்தது. அவரால் குனியவோ, நிமிரவோ முடியவில்லை. உட்கார்ந்து எழுந்திருக்க கூட கஷ்டப்பட்டார். எனக்கு அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நான் இதுவரை அவரை அப்படி பார்த்ததேயில்லை.

‘நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?’ ‘எப்படி பேட்டிங் செய்வீர்கள்?’ என்று அவரிடம் கேட்டேன். ‘எனக்கு தெரியவில்லை. நான் களத்துக்குச் சென்றதும், என்ன செய்ய வேண்டுமென்று கண்டறிவேன்’ என அவர் பதிலளித்தார். இதன் காரணமாகத்தான் ஆத்யா, ‘அப்பா லீவு எடுங்கள்… இப்படியான வலியுடன் எப்படி ஆபிஸூக்கு போவீர்கள்?’ என்று கேட்டாள்.

அவர் எங்களை விட்டு போட்டிக்கு கிளம்பினார். வெளிப்படையாகச் சொல்வதானால், அவர் ஸ்கேன் செய்வதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று அணியில் உள்ள ஒருவரிடமிருந்து இரண்டு மணி நேரத்தில் அழைப்பு வரும் என நான் எதிர்பார்த்தேன். இறுதி நாள் ஆட்டத்தின்போது நான் மைதானத்துக்குச் செல்லவில்லை. வீட்டிலிருந்தே டிவி பார்த்தேன். டிரஸ்ஸிங் ரூம் காரிடோரில் நிற்பதை பார்த்தேன். எங்கே உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாது என்பதை அறிந்து அவர் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு வலி நிவாரணி மருந்துகள் பயனளிக்கவில்லையா? வலி எப்படி இருக்கிறதோ? என்றெல்லாம் எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

image

இதனிடையே குழந்தைகளுக்கு உணவு தயார் செய்ய வேண்டும். அவர்கள் சண்டை போடுகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். இதெல்லாம் இருந்தபோதிலும், நான் அன்று முழு நாளும் டிவியின் முன் அமர்ந்திருந்தேன்.

அஸ்வின் வலியுடன் பேட்டை சுமந்துகொண்டு களத்துக்குச் செல்வதை பார்த்தேன். இவர்கள் இதை எப்படி செய்ய போகிறார்கள்? அது அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று நினைத்துக்கொண்டேன். ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சு அவரது முதுகுவலியை மோசமாக்கும் என எண்ணி நான் கவலைப்பட்டேன். அப்போது அம்மா போன் செய்திருந்தார். நான் இப்போது பேச முடியாது மேட்ச் நடந்துகொண்டிருக்கிறது என கூறி கட் செய்துவிட்டேன். எனக்குத் தெரியும், நான் ஒரு வரலாற்று நிகழ்வை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ‘பத்து பத்து பந்தாக ஆடலாம் என்ற அந்த வாய்ஸ் கேட்டபோது கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தேன்.

ஆட்டம் சமனில் முடிந்ததும் நான் அறையில் குதித்து மகிழ்ந்தேன். அன்று மாலை அஸ்வின் நடந்து வந்ததை நான் என் வாழ்வில் ஒருபோதும் மறக்கமாட்டேன். நாங்கள் அன்று அழுதோம். சிரித்தோம் என்ன உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டுமென்றே தெரியாமல் நெகிழ்ந்துபோனோம்” என்று நினைவுகளை பகிர்ந்தார் பிரித்தி நாராயணன்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.