சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், எம்.எல்.ஏக்கள் பலரும் தங்களுக்கே தொகுதியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகின்றனர். இதனால், பலரும் தொகுதிக்குள் அறிவித்து முடிக்காத பல திட்டங்களையும் தற்போது விரைந்து முடித்து வருகின்றனர். அதோடு அவ்வப்போது நலத்திட்ட உதவிகளையும் செய்து மக்கள் மத்தியில் செல்வாக்கைச் சம்பாதித்து வருகின்றனர். அந்த வரிசையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா நேரத்தில் தன்னை எம்.எல்.ஏவாக்கிய விராலிமலை தொகுதி முழுவதும் வீட்டுக்கு வீடு அரிசி, மளிகைப்பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைக் கொடுத்து அவர்களை நெகிழ வைத்தார்.

அந்த வரிசையில், தற்போது தொகுதி முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு “நம்ம விஜயபாஸ்கர் வீட்டுப் பொங்கல் சீர்’ என்ற பெயரில் பித்தளை பொங்கல் பானை, பச்சரிசி, வெல்லம், நெய், கரண்டி என பொங்கல் வைக்கத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வழங்கி தொகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் அரசு சார்பில், ஏற்கனவே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில்,விராலிமலைத் தொகுதி மக்களுக்கு அமைச்சர் வழங்கிய பொங்கல் சீர் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றிருக்கிறது.

இதற்கிடையே, அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கும் போது பொங்கல் தொகுப்பு குறித்து தவறாத செய்தி வெளியிட்டதாக குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சியின் மைக்கை தூரத்தில் எடுத்து வைத்து அந்தத் தொலைக்காட்சிக்குப் பேட்டியளிக்க மறுத்துவிட்டார். இந்தச் சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுபற்றி தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க வினர் சிலரிடம், கேட்டபோது, “இப்போ பொங்கல் பரிசு கொடுத்தது மட்டுமில்ல, கஜா, கொரோனா நேரத்திலும் அமைச்சர் தொடர்ச்சியா நிவாரண உதவிகள் செஞ்சுக்கிட்டு வர்றாரு. கொரோனா ஊரடங்கால ரொம்ப சிரமப்பட்டுக்கிட்டு இருந்த நேரத்துல எங்களுக்கெல்லாம் இரண்டு முறை நிவாரணம் கிடைச்சிருக்கு.

வயசானவங்க கண்ணு தெரியாம கஷ்டப்படக்கூடாதுன்னு வீடு தேடி வந்து கண்ணாடி கொடுத்தாரு. இப்போ, பொங்க சீர் கொடுத்திருக்காரு” என்றனர்.

தி.மு.க மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தென்னலூர் பழனியப்பன் கூறும்போது, “தமிழகம் முழுவதுமே அனைத்து குடும்பங்களுக்கும் அரசு சார்பில் ரூ.2,500 பணத்துடன் பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கு.

அதைக் கேவலப்படுத்துகிற மாதிரி தான் இப்போ அமைச்சர், தன் தொகுதிக்குள் தனியாகப் பொங்கல் பரிசு கொடுத்துக்கிட்டு இருக்காரு. கடந்த 10 வருஷமா பொங்கல் வந்துக்கிட்டு தான் இருக்கு. இத்தனை ஆண்டுகளில் கொடுக்காத பொங்கல் பரிசை இந்த வருடம் மட்டும் கொடுப்பதற்கு, வரப்போகிற தேர்தல் தான் காரணம் என்று மக்கள் அனைவருக்குமே நன்றாக தெரியும். மக்கள் ரொம்ப தெளிவாக இருக்காங்க. அவர பாராட்டினா ஏத்துக்குவாரு.

தென்னலூர் பழனியப்பன்

அதே நேரத்துல உள்ள கருத்தைச் சொன்னதுக்காக ஆக்ரோஷப்பட்டு தொலைக்காட்சி மைக்கை தூக்கிப் போட்டிருக்காரு. இதுபற்றி கண்டனத்தைத் தெரிவித்துள்ள எங்கள் தி.மு.க தலைவர் ஸ்டாலின், அதிகார மமதையில் அமைச்சர் செயல்பட்டிருக்கிறார். அவரையும், அவரது அமைச்சரவையையும் மக்கள் தூக்கி வீசும் காலம் நெருங்கி வருகிறது’ என்று கூறியுள்ளார். அதன்படி அவர்களின் எதிர்வினை கண்டிப்பாக இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.