சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தநிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்…

“தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெறுவது உறுதியாகிவிட்டதா?’’

“தி.மு.க கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தோம். 20 தொகுதிகளில் பிரசாரம் செய்தோம். அதற்கடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி ஒன்றியக்குழு, மாவட்டக்குழு எனச் சில இடங்களில் போட்டியிட்டோம். கடலூர் மாவட்டத்தில் இரண்டு மாவட்ட கவுன்சிலர், பத்து ஒன்றிய கவுன்சிலர் என வெற்றிபெற்றோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடவிருக்கிறோம்.”

ஸ்டாலினுடன் வேல்முருகன்

“நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் நீங்கள் பிரசாரம் செய்யவில்லையே… இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் மீதான உங்கள் விமர்சனம் காரணமாக அந்த நிலைப்பாட்டை எடுத்தீர்கள். சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வீர்களா?”

“நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிடாததால் எனக்கு நேரம் இருந்தது. அதனால், தி.மு.க வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்தேன். காங்கிரஸ் கட்சியினர் எங்கள் ஆதரவைக் கேட்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதால், எங்கள் வெற்றிக்காக முழு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், எங்கள் பகுதியில் பெரும்பாலும் காங்கிரஸ் போட்டியிடாது. அப்படிப் போட்டியிட்டால், அப்போது அதைப் பார்த்துக்கொள்ளலாம்.”

“உங்களின் கட்சியின் வாக்கு சதவிகிதம் எவ்வளவு?”

“2016 சட்டமன்றத் தொகுதியில் நெய்வேலி தொகுதியில் தனியாகப் போட்டியிட்டு 31,000 வாக்குகள் வாங்கினேன். கிட்டத்தட்ட 21 சதவிகித வாக்குகள். கடலூர் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் எங்களுக்கு 20 சதவிகித வாக்குகள் இருக்கின்றன. அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் உட்பட பா.ம.க இருக்கிற இடங்களில் பா.ம.க-வுக்கு நிகராக, வலுவாக நாங்கள் இருக்கிறோம். கடலூர் மாவட்டத்தில் பா.ம.க-வைவிட வலுவாக இருக்கிறோம். வட தமிழகத்தில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் குறைந்தபட்சம் 10,000 வாக்குகள் எங்களுக்கு இருக்கின்றன. சேலம், தருமபுரி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நாங்கள் நடத்திய மாநாடுகளில் லட்சக்கணக்கில் மக்கள் பங்கேற்றிருக்கிறார்கள்.”

வேல்முருகன்

“தி.மு.க கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கேட்பதாக உத்தேசம்?”

“இதுவரை தி.மு.க-வுடன் தோழமையாகவும், ஆதரவு நிலைப்பாட்டுடனும் இருந்தோம். இப்போது எங்களை ஒரு கூட்டணிக் கட்சியாக அங்கீகரித்திருக்கிறார்கள். மற்ற கூட்டணிக் கட்சிகளை அழைத்துப் பேசும்போது எங்களையும் அழைத்துப் பேசுவதாக உறுதியளித்திருக்கிறார்கள். அந்த நேரத்தில், எங்களுக்கு எத்தனை தொகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது என்பதை வைத்துப் பேசுவோம். இத்தனை தொகுதிகளை வாங்குவோம் என்பதைவிட வாங்குகிற அத்தனை தொகுதிகளிலும் வெற்றியை உறுதிசெய்வதுதான் எங்கள் இலக்கு.”

“வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே ரஜினியை அரசியலுக்குக் கொண்டுவர பா.ஜ.க அழுத்தம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. தி.மு.க-வுக்கு எதிராக பா.ஜ.க மேற்கொள்ளும் முயற்சிகள் தி.மு.க-வுக்கு எந்த அளவுக்கு தேர்தலில் சவாலாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?”

“1989-லிருந்து ரஜினியை எதிர்த்து செயல்பட்டுவருபவன் நான். 2002-ல் `பாபா’ படத்தின் பெட்டிகளை எடுத்துக்கொண்டுபோய் முந்திரிக்காடுகளில் வைத்தவன் நான். அதற்காக என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி-யிடம் ரஜினி புகார் செய்தார். ரஜினி வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அல்ல, சினிமாகாரர்கள் நாட்டை ஆண்டது போதும் என்ற அடிப்படையில் அவரது அரசியல் வருகையைத் தொடர்ந்து எதிர்த்துவந்திருக்கிறேன். சினிமாத்துறையினர் அரசியலுக்கு வரக் கூடாது என்று நான் சொல்லவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என தமிழகத்தை ஆண்ட சினிமா துறையினருக்கான பிரதிநிதித்துவம் போதும்.

வேல்முருகன்

எதன் ஊடாகவும், யார் ஊடாகவும் தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றுவதை அனுமதிக்க மாட்டோம். எனவேதான், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக, தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுத்தோம். மத்தியில் அதிகாரம் அவர்களின் கையில் இருக்கிறது. எனவே, தி.மு.க போன்ற வலுவான எதிர்க்கட்சியில் இருக்கிற செல்வந்தர்களுக்கு எதிராக வருமான வரிச்சோதனை, அமலாக்கத்துறை சம்மன் என்ற யுக்திகளைக் கையாள்கிறார்கள். அவர்களின் கூட்டணியில் இருக்கிற அ.தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அன்றைய தலைமைச் செயலாளர் வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தினார்கள்.

Also Read: `பெரியார் சொன்ன வழியில்தான் போவேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டேன்’ – வெடிக்கும் வேல்முருகன்!

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் ஒரு பயத்தையும் பீதியையும் உருவாக்கி, தங்கள் மறைமுக அரசியல் அஜெண்டாவை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். மத்தியில் அதிகாரம் இருப்பதால் தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்று அனைத்துவிதமான யுக்திகளையும் கையாள்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விடுதலை செய்யப்பட்ட பிறகு, அவசரமாக மேல்முறையீடு செய்கிறார்கள். கலைஞர் தொலைக்காட்சிக்கு நன்கொடை வந்த விஷயத்தைப் பெரிதாக்குகிறார்கள். இதுபோல நிறைய விஷயங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

வேல்முருகன்

அதுபோக உறவாடி அழிப்பது என்கிற யுக்தியுடன் பல காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள். `தமிழின் பெருமையை பிரதமர் மோடி பேசுகிறார்’ என்பார்கள். `முருகன் எங்கள் முப்பாட்டன்’ என்று சொல்வார்கள். `நாங்கள்தான் தமிழக அரசிடம் சொல்லி தைப்பூசத்துக்கு விடுமுறை வாங்கித் தந்தோம்’ என்று சொல்வார்கள். வள்ளலாருக்கும் இவர்கள் பேசுகிற கொள்கைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஆனால், வள்ளலார் தங்களவர் என்று சொல்ல முயல்வார்கள். அதே நேரத்தில், தமிழர்களுக்கு எதிராக அனைத்து வேலைகளையும் செய்வார்கள். எனவே, பா.ஜ.க-வை நாங்கள் வலுவாக எதிர்ப்போம்.”

Also Read: `கட்டாயத் திருமணம்’, `கள்ளத் திருமணம்’… அ.தி.மு.க Vs தி.மு.க கூட்டணி குஸ்தி!

“புகழ் வெளிச்சத்தை மட்டுமே வைத்துக்கொண்டு சினிமாத் துறையினர் அரசியலுக்கு வரக் கூடாது என்றும், மக்கள் பிரச்னைகளுக்காகப் போராட்டங்கள் நடத்திவிட்டு அதன் பிறகு வாருங்கள் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சொல்கிறார். நீங்களோ, இனிமேல் சினிமாத் துறையினர் அரசியலுக்கு வரக் கூடாது என்கிறீர்கள்…”

“புகழ் வெளிச்சம் என்பதையும் உள்ளடக்கித்தான் திரைத்துறை பிரதிநிதித்துவம் என்று நான் சொல்கிறேன். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் புகழ் வெளிச்சத்தின் மூலமாகத்தானே வந்தார்கள்… சீமான், சினிமாதுறையினர் யாருமே அரசியலுக்கு வரக் கூடாது என்றுதான் முதலில் சொல்லிக்கொண்டிருந்தார். `மக்களுக்கான போராட்டங்களை நடத்திவிட்டு, மக்களின் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்துவிட்டு சினிமாதுறையினர் அரசியலுக்கு வரலாம்’ என்று நான் சொன்ன பிறகு, சீமானும் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

வேல்முருகன்

அரசியலுக்கு வர விரும்புகிற சினிமாதுறையினர் யாராக இருந்தாலும் இந்த மண்ணின் பிரச்னைகள், மக்களின் வலிகள், இந்த மக்களின் வாழ்வியல் முறைகள் என அனைத்தையும் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். எங்கள் பகுதியில் முந்திரியும் கரும்பும் விளைகின்றன. அவை எப்படி விளைகின்றன, அந்த விவசாயிகளின் பிரச்னைகள் என்னென்ன என்கிற அடிப்படை விஷயங்கள்கூட பல நடிகர்களுக்குத் தெரியாது. அரசியலுக்கு வர விரும்பினால் கம்யூனிஸ்ட்களைப்போல, எங்களைப்போல மக்களோடு மக்களாக நில்லுங்கள்.

அவர்களின் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுங்கள். கங்கைகொண்டானில் பன்னாட்டு குளிர்பான நிறுவனத்துக்கு எதிராகப் போராடி, காவல்துறையின் தடியடியில் மண்டை உடைந்து நாங்கள் ரத்தம் சிந்தியிருக்கிறோம். நெய்வேலியில் என்.எல்.சி-க்காக நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுங்கள் என்று போராட்டம் நடத்தியதற்காகப் பல வழக்குகளைச் சந்திக்கிறோம். சுங்கச்சாவடி கட்டடணத்துக்கு எதிராகப் போராடி தேசத்துரோக வழக்குகளை எதிர்கொள்கிறோம். என்.ஆர்.சி., சி.ஏ.ஏ-வுக்கு எதிராகப் போராடியதற்காக எங்கள் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.

கமல்

மக்களுக்கான உரிமைகளுக்காகப் போராடி அறுபது, எழுபது வழக்குகளைச் சந்தித்திருக்கிறேன். இந்த மாதிரியான வலிகளையும் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவிக்காமல், மக்களுக்காகக் குரல் கொடுக்காமல், திடீரென்று அரசியல் கட்சி ஆரம்பித்து, நேரடியாக முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்று நினைக்கக் கூடாது. கேரவனிலும் ஹெலிகாப்டரிலும் வந்து கமல் இறங்குகிறார். இதுவா மக்களுக்கான அரசியல்… கம்யூனிஸ்ட்களைப்போல, எங்களைப்போல மக்களோடு மக்களாக நிற்க வேண்டும்.“

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.