பொள்ளாச்சி பாலியல் வழக்கு மீண்டும் விஸ்வருபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த அருளானந்தம், ஹெரோன், பைக் பாபு ஆகியோர் சி.பி.ஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். மேலும், அமைச்சர் வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அ.தி.மு.க தலைவர்களுடன் அருளானந்தம் எடுத்த புகைப்படங்களும் வெளியாகின. இதனால், அ.தி.மு.க-வினருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக, தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி ஆர்ப்பாட்டம்

Also Read: சிக்கிய ஆளுங்கட்சிப் பிரமுகர்கள்… சூடுபிடிக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு…

முன்னதாக, தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி உள்ளிட்டோர், கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும்போது, ஈச்சனாரி அருகே போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பிறகு, அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் அவர்களை பொள்ளாச்சி செல்ல அனுமதித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, “இந்த குற்றம் கொடூரமானது. இவர்களுக்குப் பின்னால் இருந்து, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள் யார் என்பதற்கான பதில் உங்கள் விசாரணையில் இருக்கிறது. இந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்கள் குறித்தும் ரகசியமாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மீது எந்த கோபமும் இல்லை. ஆனால், தமிழகத்தின் சிறந்த ஊழல் நாயகன் எஸ்.பி வேலுமணிதான்.

பொள்ளாச்சி ஆர்ப்பாட்டம்

இந்தக் குற்றங்களுக்கு பின்னால் உள்ள அருளானந்தம் மட்டுமல்ல, முன்வரிசையில் உள்ள அமைச்சர்களையும் விசாரணை செய்ய வேண்டும். அதற்கு முன்பு அவர்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `பெண்களின் பாதுகாப்புக்குக் காவலர்’ என்று சொல்கிறார். இந்த ஆட்சியில் 3 வயது பெண் குழந்தையில் இருந்து 70 வயது மூதாட்டி வரை யாருமே பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றனர்” என்றார் ஆவேசமாக.

கடைசியாகப் பேசிய கனிமொழி எம்.பி, “இந்தப் போராட்டத்தைத் தடுக்க முயன்றனர். ‘அப்படி தடுத்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்’ என தளபதி எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, காவல்துறை பணிந்தது. இதைத் தடுத்தால் வெகுண்டு எழுவோம். ஆளுங்கட்சியினர் தங்களை மட்டும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். அ.தி.மு.க-வினர் தொடர்பான ஆதாரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இன்று வரை அந்தக் கும்பல், பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

கனிமொழி

இதைத் தட்டி கேட்கவில்லை என்றால், பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் நாதியில்லை என நினைத்து விடுவார்கள். அப்படி ஓர் சூழலை உருவாக்கி விடக்கூடாது. தனது கட்சிக்காரர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, பெண்களைப் பழிவாங்கிக் கொண்டிருக்கின்ற ஆட்சிதான் இந்த ஆட்சி.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிடுவது சட்டப்படி குற்றம். ஆனால், இதுகுறித்து யாரும் வெளிப்படையாகப் பேச்கூடாது என்று மிரட்டல் தொனியில் காவல்துறையே பாதிக்கப்பட்டவர் பெயரை வெளியிட்டனர். `ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். இப்போது, அவர்கள் அ.தி.மு.க-வினர் என்பதும், அமைச்சருடன் எடுத்த படங்களும் ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளன. இங்கு யாரும் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது.

கனிமொழி

தமிழ்நாட்டுக்கும் இதற்கு சம்பந்தமில்லை என்பது போலவும், தனிநாடு வாங்கிவிட்டது போலவும் கட்டுக் காவல் நடத்திக் கொண்டிருக்கிறார் வேலுமணி” என்று சொல்லி அருளானந்தம், அமைச்சர் வேலுமணியுடன் எடுத்த படங்களை மக்களிடம் காண்பித்தார்.

மீண்டும் தொடர்ந்த கனிமொழி, “இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்? இந்தப் பிரச்னையால் பொள்ளாச்சி ஜெயராமன் தொகுதியே மாறிச் செல்கிறார்.

எடப்பாடியைப் பார்த்து ஆபிரகாம்லிங்கன் என்று சொல்கின்றனர். அவருக்கு ஆபிரகாம்லிங்கன் யார் என்று தெரியுமா? கறுப்பின விடுதலைக்காகப் பாடுபட்டு, தனது உயிரை இழந்தவர்தான் ஆபிரகாம் லிங்கன். மேட்டுப்பாளையம் நடூரில் சுவர் எழுப்பி 17 பேரைக் கொன்றனர். அதுக்குக் கூட இவர்களால், நியாயம் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. தற்போது அ.தி.மு.க.வினர் மூலம் மீண்டும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. நீங்களும், ஆபிரகாம்லிங்கனும் ஒன்றா? இதை சொல்ல கூசவில்லையா?

கனிமொழி

மதத்தின் பெயரால் ஆட்சி செய்பவர்களுடன் இவர்கள் கூட்டணி அமைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கும்வரை நாங்கள் ஓய மாட்டோம். உங்கள் அச்சுறுதல்களுக்கு அஞ்ச மாட்டோம். குற்றவாளிகளையும், அவர்களைப் பாதுகாக்க துணிந்த அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு, தண்டனை வாங்கித்தரப்படும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.