தங்களுக்கு 38 தொகுதிகள் வேண்டும் என்ற செய்தியை கசியவிட்டு, அதிமுக கூட்டணியில் ஆழம் பார்க்கத் தொடங்கியுள்ளது பாஜக. அதிமுக கூட்டணியில் 38 தொகுதிகள் பெறுமளவுக்கு பலமுடன் உள்ளதா பாஜக?

கடந்த மாதம் அமித் ஷா முன்னிலையில் அதிமுக – பாஜக கூட்டணியை, தமிழக முதல்வரும், துணை முதல்வரும் உறுதி செய்தபோதே, பாஜக 40 தொகுதிகள் கேட்கிறது என்ற தகவல் தீயாகப் பரவியது. பிறகு கொஞ்சம் அணைந்திருந்த அந்த தீ இப்போது மீண்டும் புகைய ஆரம்பித்துள்ளது. சில நாள்களாகவே  அதிமுக கூட்டணியில் பாஜக 38 தொகுதிகள் என்ற பேச்சு பரவலாக வலம்வர தொடங்கியுள்ளது.

image

சென்னையில் ஆறு தொகுதிகள், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு தொகுதி என மொத்தமாக 38 தொகுதிகளை பாஜக கேட்பதாகவும், இது குறித்த புள்ளிவிவரங்களையும், வெற்றி வாய்ப்புகள் குறித்த அலசல்களையும், வேட்பாளர்கள் லிஸ்ட்டையும் பாஜகவின் மேலிடத்துக்கு, தமிழக பாஜக அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக கோவை, திருப்பூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில் மாவட்டங்களில் சில தொகுதிகளில் சத்தமே இல்லாமல் தேர்தல் பணியையே பாஜக தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

image

கடந்த 2016 தேர்தல் வரை பாஜக, நோட்டோவுடன்தான் போட்டி போட்டுக்கொண்டிருந்தது. 2016 தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக பெற்ற வாக்குகள் சதவீதம் 2.86 சதவீதம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக, தேமுதிக, தமாகா என்ற பலமான கூட்டணியுடன் போட்டியிட்ட பாஜக பெற்ற வாக்கு சதவீதமே 3.66% தான். சுமார் 3 சதவீதம் வாக்குவங்கி உள்ள கட்சிக்கும் 38 தொகுதிகள் கொடுக்கவேண்டுமா என்று யோசிக்கிறது அதிமுக.

இந்தச் சூழலில் பாஜக ஒருவேளை 38 தொகுதிகள் கேட்கும் பட்சத்தில், அதே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 5.42 சதவீத வாக்குகளை பெற்ற பாமக குறைந்தது 50 தொகுதிகளுக்கு மேல் கேட்கும் சூழல் உருவாகலாம். மதில்மேல் பூனையாக கூட்டணியில் உள்ள தேமுதிகவும் 41 தொகுதிகள் வேண்டும் என்று வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துள்ளது. இது மட்டுமின்றி தமாகா உள்ளிட்ட மற்ற சில கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கினால், கடைசியில் அதிமுக 100 தொகுதியில்தான் போட்டியிடும் சூழல் உருவாகலாம். அந்த இக்கட்டான நிலைக்கு தன்னை அதிமுக தள்ளிக்கொள்ளாது என்று நம்பலாம்.

image

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதிகளவிலான தொகுதிகளை கேட்டு ஆரம்பத்தில் முரண்டு பிடித்தது பாஜக. இருந்தாலும் பிறகு அதிமுக தலைமை, மத்திய பாஜக தலைமையுடன், தமிழக பாஜகவின் வாக்குவங்கி நிலவரத்தை எடுத்துக்கூறி பேசியதால் கடைசியில் 5 சீட்களுக்கு ஒப்புக்கொண்டது. அதுபோல தற்போது பாஜக மேலிடத்திடம் நிலைமையை எடுத்துக்கூறி தொகுதிப் பங்கீட்டை யாருக்கும் பாதகமின்றி செய்வோம் என்று சொல்கின்றனர் அதிமுக சீனியர்கள்.

தமிழகத்தில் ஆட்சியமைக்க 118 இடங்களில் வெற்றி பெறவேண்டியது கட்டாயம். எனவே, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ஆளும் கட்சியான அதிமுக குறைந்தது 140 முதல் 150 தொகுதிகளிலாவது போட்டியிட விரும்பும். அதற்கு தக்கவாறு கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கிட்டு தந்தால் மட்டுமே அதிமுக “சேஃப் ஸோன்”-இல் இருக்கலாம். ஒருவேளை பாஜக, மத்திய தலைமை மூலமாக அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்து 38 தொகுதிகளை பெறுமேயானால், அதிமுக மிக இக்கட்டான சுழலில் சிக்கிக்கொள்ளலாம். பாஜகவுக்கு அதிக தொகுதிகள் கொடுத்து பாமக, தேமுதிகவுக்கு சீட்களை குறைத்தால், அது கூட்டணியே ஆட்டம் காணவைக்கவும் வாய்ப்பாக மாறும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இந்தத் தேர்தலில் தமிழக சட்டமன்றத்தில் அதிக பாஜக உறுப்பினர்கள் பெறவேண்டும், அடுத்ததாக அதிமுகவின் கூட்டணி ஆட்சியில் அமைச்சர் பதவி என்று பல கனவுகளோடு காத்திருக்கிறது பாஜக. விடவும் முடியாமல், சேர்க்கவும் முடியாமல் புலிவாலை பிடித்த கதையாக பாஜகவோடு போராடிக்கொண்டிருக்கிறது அதிமுக. ‘எல்லாத்தையும் மேல இருக்கிறவர் பாத்துக்குவார்’ என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் பாஜகவினர்.

– வீரமணி சுந்தரசோழன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.