பீகார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பரில் நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க – ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி ஆட்சியை கைப்பற்ற நிதீஷ் குமார் மீண்டும் முதல்வரானார். இந்தக் கூட்டணிக்கு எதிராக போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவியது. அதிலும், 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வென்றது. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும் விரிசல்களும் உரசல்களும் தொடர்ந்தன. கட்சி தலைமைகள் ஒன்று சேர்ந்தாலும் நிர்வாகிகள் மட்ட அளவில் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

இதற்கிடையே, தற்போது பீகார் காங்கிரஸின் மூத்த தலைவர் பாரத் சிங் தெரிவித்துள்ள கருத்துகள் காங்கிரஸ் – ஆர்ஜேடி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர், “காங்கிரஸ் கட்சியின் 19 எம்.எல்.ஏ-க்களில் 11 பேர் கட்சியைவிட்டு விலகி வேறு கட்சியில் இணைவார்கள். இந்த 19 பேரும் ஆரம்பம் முதலே காங்கிரஸ் தொண்டர்கள் கிடையாது. தேர்தலுக்காக பணம் கொடுத்து எம்.எல்.ஏ சீட் வாங்கியவர்கள்.

image

இவர்களைப்போலவே பீகார் காங்கிரஸின் மாநிலத் தலைவரான மதன் மோகன் ஜா, மாநிலங்களவை உறுப்பினரான அகிலேஷ் பிரசாத் சிங், மூத்த தலைவர் சதானந்த் சிங் ஆகியோரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிச் செல்வார்கள். காங்கிரஸில் இருந்துகொண்டே அவர்கள் கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஆர்ஜேடி உடனான கூட்டணியை நான் உட்பட பலர் எதிர்த்தோம். ஆனால் இது மாதிரியானர்வர்கள் மூலம் கட்சி தலைமைக்கு பீகார் நிலைமை குறித்த தவறான கருத்துகளே சொல்லப்பட்டுவந்துள்ளன” என்று அதிரடியாக பேசியுள்ளார்.

இதற்கிடையே பாரத் சிங் காங்கிரஸ் நிலைமை குறித்து பேசியுள்ளதை ஐக்கிய ஜனதா தளம் கட்சி கிண்டல் செய்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர், “பீகார் காங்கிரஸ் கோமாவில் இருக்கிறது. இதை பாரத் சிங்கின் கருத்துகள் வெளிக்காட்டுகின்றன. காங்கிரசின் தற்போதையை நிலையை அறிந்தே அக்கட்சியின் மூத்த தலைவர் சக்திசிங் கோஹில், தனது பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

சக்திசிங் கோஹில் என்பவர் பீகார் காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளராக பதவி வகித்து வந்தார். சமீபத்தில் அவர் தன் சொந்தக் காரணங்களுக்காக அப்பொறுப்பிலிருந்து விலகினார். இதையடுத்துதான் இந்த சர்ச்சை வெடித்துள்ளது. இது பீகார் காங்கிரஸில் தற்போது புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.