தினமும் இலங்கையில் வாழும் இஸ்லாமியர்கள் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்தப் போராட்டங்களானது கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசு பிறப்பித்துள்ள சர்ச்சைக்குரிய உத்தரவும், அதை உறுதியாகப் பின்பற்றி வருவதுமே இந்தத் தொடர் போராட்டங்களுக்கு காரணம்.

கொரோனா வைரஸ் ஏற்படுவதற்கு முன்பு இஸ்லாமியர்கள் இறந்தவர்களின் உடல்களை தங்களின் மத சடங்குகள்படி அடக்கம் செய்துவந்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று நோய் வந்தபோதுகூட, பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் அறிவிப்பை சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. ஆனால், இது மார்ச் 30 வரை மட்டுமே. நெகோம்போ நகரத்தைச் சேர்ந்த முகமது ஜமால் என்பவர் முதல் இஸ்லாமியராக கொரோனா காரணமாக உயிரிழக்க, அவரின் உடலை குடும்பத்தின் ஒப்புதல் இல்லாமலே மருத்துவமனை ஊழியர்கள் தகனம் செய்தனர். இது சர்ச்சையாக வெடித்தது.

இலங்கையில் கொரோனாவினால் மரணமடைகின்றவர்களின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என அந்த நாட்டு அரசு உத்தரவு பிறப்பிக்க, அதன் அடிப்படையில் மருத்துவமனை ஊழியர்கள் ஜமால் உடலை தகனம் செய்தனர். ஆனால், இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் தங்கள் மத வழக்கப்படி இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கொரோனா காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டாம் என்றும், அடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறும், அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

image

இலங்கை அரசு அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. இதையடுத்தே கடந்த ஒரு மாத காலமாக இஸ்லாமியர்கள் வீதிகளில் போராடி வருகின்றனர். அனைத்து முக்கிய நகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை, கட்டாய தகனத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் வடக்கில் தமிழ் ஆதிக்கம் செலுத்தும் நகரமான கிளிநொச்சியில் நடத்தப்பட்டது. கடந்த வியாழக்கிழமை இதேபோல் மற்றொரு போராட்டம் கொழும்பின் பிரதான தகன மையம் அருகே நடந்தது.

அமெரிக்காவின் புலம்பெயர் குழுவான இலங்கை யுனைடெட் (எஸ்.எல்.யூ) சனிக்கிழமையன்று வாஷிங்டனில் பேரணி நடத்தியது. இதில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் இலங்கை அரசின் சர்ச்சைக்குரிய உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

“உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற விஞ்ஞான வல்லுநர்கள் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை மீறி, கொரோனாவால் உயிரிழக்கும் மக்களின் உடல்களை தகனம் செய்வதை இலங்கை கட்டாயமாக்கியுள்ளது, பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் மத நம்பிக்கைகளின்படி அடக்கம் செய்வதில் எந்தவிதமான சுகாதார ஆபத்தும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற விஞ்ஞான வல்லுநர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்” என இலங்கை யுனைடெட் அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம், அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் ஐக்கிய நாடுகளின் உரிமை முகவர் உள்ளிட்ட சர்வதேச குழுக்களும் இலங்கை அரசுக்கு அதன் தகனக் கொள்கையை மறுபரிசீலனை செய்யுமாறு பலமுறை கோரிக்கைகளை அனுப்பியுள்ளன. இதேபோல் ஐ.நா அமைப்பும் இலங்கை அரசுக்கு இவ்விவகாரத்தில் அழுத்தம் கொடுத்து வந்தது.

image

இதற்கிடையே, பெருகிவரும் அழுத்தம் காரணமாக, கொரோனா வைரஸ் தகன வழிகாட்டுதல்களை மறுஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிக்க இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. “இந்த விவகாரத்தை ஆராய 11 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவை நியமிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது” என்று இலங்கை முன்னாள் மந்திரி சையத் அலி ஜாஹிர் மவுலானா கூறியுள்ளார்.

ஆனால், கட்டாய தகனம் விதிக்கு எதிராக இஸ்லாமியர்கள் தாக்கல் செய்த 11 மனுக்களை இலங்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், இந்தக் குழு வெறும் கண்துடைப்புக்கு என்று அஞ்சுகின்றனர் இலங்கை இஸ்லாமிய மக்கள்.

மறுபுறம், இலங்கையின் சமூக மருத்துவர்கள் கல்லூரி (சி.சி.பி.எஸ்.எல்) மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் (எஸ்.எல்.எம்.ஏ) ஆகியவை கிடைக்கக்கூடிய அறிவியல் தகவல்களின் அடிப்படையில், கடுமையான வழிகாட்டுதலின் கீழ் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படலாம் என்று கூறியுள்ளன.

எவ்வாறாயினும், வைரஸ் பரவாமல் தடுக்க தகனம் என்பது பாதுகாப்பான வழி என்று பெரும்பாலான அமைச்சக வல்லுநர்கள் வாதிடுகின்றனர். இதனால், இந்த விவகாரத்தில் அடுத்த என்ன நடக்கப்போகிறது என்பதற்கு மத்தியில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர்.

இலங்கையின் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், முன்னாள் ஆளுநருமான ஆசாத் சாலி என்பவர், “இஸ்லாமியர்களை பழிவாங்கவே, அவர்களின் மத நம்பிக்கைக்கு எதிரான முறையில், இறந்தவர்களின் உடல்களை அரசாங்கம் தகனம் செய்து வருகின்றது. இலங்கையில் சுமார் 10 சதவீதமான இஸ்லாமியர்களே உள்ளனர். ஆனால், கொரோனாவினால் இறப்பவர்களில் அதிகமானோர் இஸ்லாமியர்கள் எனக் கூறப்படுவதில் சந்தேகம் இருக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் கூறியது போலவே, இலங்கை சுகாதார அமைச்சரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இலங்கையில் கொரோனாவில் நூற்றுக்கணக்கானர் உயிரிழந்த நிலையில், அவர்களில் பாதிக்கும் அதிகம் இஸ்லாமியர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இது ஒருபுறம் இருக்க, முதுமையின் காரணமாக சில இஸ்லாமியர்கள் உயிரிழந்த நிலையிலும் அவர்களை வலுக்கட்டாயாமாக மருத்துவ பரிசோதனை செய்து கொரோனா காரணமாக உயிரிழந்தார்கள் என்று அறிவித்து அவர்களின் உடல்களை தகனம் செய்ததாகவும் இலங்கை அரசு மீது இஸ்லாமியர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

மேலும், இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை செய்வதற்காக அரசு அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து ரூ.2000 அளவில் பணமும் கட்டாயப்படுத்தி வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.