அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை புதைக்க இடமில்லாததால் கல்லறைகளில் நாட்கணக்கில் மனித உடல்கள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று இந்தியா, துருக்கி, அயர்லாந்து உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் மூன்று மாநிலங்களில் உருமாறிய கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து அந்நாட்டு உடனான விமான போக்குவரத்துக்கு 40க்கும் மேற்பட்ட நாடுகள் தடை செய்துள்ளன. உருமாறிய கொரோனா எதிரொலியாக லண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் முழுவதும் கொரோனா அவசரகால மருத்துவமனைகளை மீண்டும் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

image

இதனிடையே உலகம் முழுவதும் தற்போது குறைந்தது நான்கு வகையான மரபணு திரிபு கொரோனா வைரஸ்களாவது பரவியிருக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவத் தொடங்கிய சில நாட்களிலேயே வைரஸின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டதாகவும், கடந்த ஜூன் மாதம் இந்த மரபணு மாற்ற வைரஸ் வீரியம் மிக்கதாக மாறியதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது. தற்போது அந்த வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவியதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

image

உலக அளவில் கொரோனா பாதிப்பில் 6 ஆம் இடத்தில் உள்ள பிரிட்டனில், கடந்த 24 மணிநேரத்தில் 57 ஆயிரத்து 725 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 60ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் ஒரே நாளில் 445 பேர் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 570 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை புதைக்க இடமில்லாததால் கல்லறைகளில் நாட்கணக்கில் மனித உடல்கள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. புதைக்க முடியாத அளவுக்கு சடலங்கள் வந்துகொண்டே இருப்பதாகவும், நாள் ஒன்றுக்கு 30 உடல்கள் கல்லறை அடுக்களில் இருந்து எடுத்து அதே இடத்தில் புதிய உடல்கள் வைக்கப்படுவதாகவும், இறுதிச்சடங்கு பணியில் ஈடுபடுவோர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 பேர் உயிரிழப்பதால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தால் அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் வேகம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2 லட்சத்து 77 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.