பரபரப்பான தேர்தல் பரப்புரை சூழலுக்கு இடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து பேசினோம்…

இந்த பேட்டியின் முதல் பாகத்தை கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து படிக்கலாம்…!

Also Read: “10 வருடங்களாக நான் பேசியதைத்தான் அமெரிக்கா இன்று செய்கிறது!’’ – என்ன சொல்கிறார் சீமான்?

”சந்தைப் பொருளாதாரத்துக்கு எதிராக தற்சார்பு பொருளாதாரத்தை நாம் தமிழர் கட்சி முன்னிறுத்தவேண்டியதன் அவசியம் என்ன?”

”என் மக்களுக்கான தரமான கல்வி, மருத்துவத்தோடு அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் அவர்களது வாழ்விடத்திலேயே கொடுத்துவிட்டேன் என்றால், நகரங்கள் இதுபோல் பிதுங்கி வழியாது. முதல்தர, இரண்டாம்தர ஆசிரியர்கள் நகர்ப்புறங்களில் பணியமர்த்தப்படுவதும், மூன்றாம்தர ஆசிரியர்கள் சிற்றூர்களில் பணியமர்த்தப்படுவதும் இங்கே இப்போது வழக்கமாக இருக்கிறது. இதையெல்லாம் மாற்றவேண்டும் என்கிறேன்.

அதாவது, ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது என்றால், அந்த இடத்திலேயே வெல்லம் காய்ச்சுகிற, நாட்டு சர்க்கரை தயாரிக்கிற தொழிற்சாலையை நிறுவுவோம். நாம் சாப்பிடுவதற்குப் பயன்படுத்துகிற தட்டினை கரும்புச் சக்கையிலிருந்து தயாரிக்கமுடியும். பிரேசிலின் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு கரும்பிலிருந்து எத்தனால் பெட்ரோல் தயாரிக்கமுடியும். இதிலும்கூட சந்தைப்படுத்துவதற்கு படித்தவர்களையும், உற்பத்தித் துறையில் படிக்காதவர்களையும் பணியமர்த்தும்பொழுது… இரண்டு தரப்புக்கும் சம அளவிலான அரசுப்பணி கிடைத்துவிடுகிறது. இதுதான் நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள்.”

”மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்து முதல் தேர்தலிலேயே நாம் தமிழர் கட்சிக்கு இணையான வாக்குகளை கமல்ஹாசன் பெற்றுவிட்டாரே…?”

”கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து 2019 தேர்தலில் முதல் முறையாக களம் கண்டார் என்பது உண்மைதான். ஆனால், 5 வயதிலிருந்தே திரையுலகில் நடித்துவரும் கமல்ஹாசனுக்கு இருக்கும் திரைக்கவர்ச்சி, தமிழ்நாடு முழுக்க அவர் அறியப்பட்ட அளவுக்கு எளிய மகனான சீமான் அறியப்படவில்லை. அடுத்து, மனச்சான்றோடு பேசினால்… தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது குறித்து ஊடகமும் செய்தி பரப்பவில்லை. கருத்துக் கணிப்பு வெளியிட்டவர்கள்கூட ‘தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., ம.நீ.ம’ ஆகிய கட்சிகளைத்தான் குறிப்பிட்டன. ‘நாம் தமிழர் கட்சியும் தேர்தலில் போட்டியிடுகிறது… ஆனால், அந்தக் கட்சிக்கு வாக்குகளே இல்லை’ என்றுகூட நீங்கள் கருத்து கணிப்பில் சொல்லலாமே… ஆனால், நான் போட்டியிடுவதையே மறைத்துவிட்டீர்கள் என்றால்… என்ன சொல்வது? ஆனாலும்கூட மக்கள் எங்கள் மீது கொண்ட பேரன்பினால், எங்களுக்கு 17 லட்சம் வாக்குகள் கிடைத்திருக்கின்றன.”

கமல்

”கமல்ஹாசனும் ரஜினிகாந்தும்கூட திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்று சொல்லித்தானே தமிழக அரசியலுக்குள் வருகிறார்கள்…?”

”திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்றுதான் ரஜினியும் கமலும் சொல்கின்றனர். ஆனால், மாற்று என்று சொல்கிற இவர்கள் இருவருமே ‘நாங்கள் எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கொடுப்போம்’ என்றுதான் மாறி மாறி சொல்லி வருகின்றனர். ஏன் காமராஜரை, கக்கனை, கலைஞரை சொல்லவில்லை? எம்.ஜி.ஆரை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்?”

”திரைத்துறையைச் சேர்ந்த எம்.ஜி.ஆர், அ.தி.மு.க தலைமையில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்திருக்கிறார் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கமுடியும்?’’

”எம்.ஜி.ஆர் ஆட்சி, எம்.ஜி.ஆர் ஆட்சி என்று சொல்கிறவர்கள் ‘எம்.ஜி.ஆர் அப்படி என்ன சிறப்பாக ஆட்சி செய்தார்…’ என்றாவது சொல்லுங்களேன்… ஈழ விடுதலைப் போராட்டத்தில், எங்கள் தலைவருக்கு 100 விழுக்காடு உண்மையாக இருந்தார். அதனாலேயே எம்.ஜி.ஆர் பற்றி நாங்களும் விமர்சிப்பதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர்-தான் ஆங்கில வழிக் கல்வியை இங்கே கொண்டுவந்தார். கல்வி, மருத்துவத்தை தனியார்மயப்படுத்தினார்.

தமிழ்நாட்டிடம் இருந்த முல்லைப்பெரியாறு அணைப் பாதுகாப்பு உரிமையை, கேரள மாநிலத்துக்கு மாற்றி எழுதிக்கொடுத்தது அவர்தான். இப்படிப்பட்ட எம்.ஜி.ஆர் ஆட்சியைத்தான் நீங்களும் கொடுப்பீர்களா? சரி… அப்படியென்றால், அவரைப்போல், நீங்களும் ஈழ விடுதலைக்கு ஆதரவாக இருந்து பெற்றுக்கொடுத்து விடுவீர்களா? சும்மா எதையாவது பேசிக்கொண்டிருக்கக்கூடாது.”

”ரஜினி, கமல் இருவருமே எம்.ஜி.ஆர் பெயரை முன்னிறுத்தி அரசியல் செய்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்…?”

”எம்.ஜி.ஆர் பெயரை, இன்றைக்கு அ.தி.மு.க-வே சொல்வது இல்லை; ஜெயலலிதா பெயரை மட்டும்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். எனவே, எம்.ஜி.ஆரைப் பற்றி இவர்கள் பேசப்பேச… அது அ.தி.மு.க-வுக்குத்தான் வலு சேர்க்கும். எனவே, ரஜினியும் கமலும் அ.தி.மு.க-வுக்குத்தான் வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் பெயரையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே… உங்கள் கொள்கை என்னவென்று கேட்டால், ஒருவர் ‘தலை சுத்துகிறது’ என்கிறார்… இன்னொருவர் ‘காப்பி அடித்துவிடுவார்கள்’ என்கிறார்.”

ரஜினி

”திரைத்துறையிலிருந்து அரசியலுக்குள் வந்திருக்கும் சீமானுக்கும் ரஜினி – கமலுக்கு என்ன வித்தியாசம்?”

”எனக்குப் பின்னாடி வருகிற 18, 19 வயது இளைஞர் கூட்டம் எல்லாம் எம்.ஜி.ஆரைப் பார்த்தவர்கள் இல்லை… இவர்களெல்லாம் ரஜினி, கமல் பின்னாடிகூட போகாமல், இந்த எளிய மகன் சீமான் பின்னாடி வருகிறார்கள்.

ரஜினியும் கமலும் ரசிகர்களை தொண்டர்களாக்குகிறார்கள். ஆனால், நான் நேரடியாக மக்களை சந்தித்தே ஒன்று திரட்டுகிறேன். நானும் திரையுலகில்தான் இருந்தேன் என்றால்கூட எனக்கென்று எந்தப் பின்புலமும் கிடையாது.”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.