பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) அமைப்பு தனது வங்கிக் கணக்கில் ரூ.100 கோடிக்கு மேல் பெற்றுள்ளது என்று பண மோசடி வழக்கை விசாரிக்கும் அமலாக்க இயக்குநரகம் (இ.டி) கொச்சி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்த முழு பின்னணி இதுதான்…

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் ரவூப் செரீப். இவர் ‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’வின் மாணவர் அமைப்பான கேம்பஸ் பிரண்ட் என்ற அமைப்பின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். துபாயில் பணிபுரிந்து வந்த செரீப், சமீபத்தில் கேரளா வந்திருந்தார். இதையடுத்து மீண்டும் வெளிநாடு செல்லும்போது அவரை அமலாக்கத்துறை சில நாள்களுக்கு முன் அதிரடியாக கைது செய்ததுடன், கைதுக்கு காரணமாக முன்வைத்தது பணமோசடி. செரீப்பிபின் 3 வங்கி கணக்குகளில் அளவுக்கு அதிகமாக பணம் முதலீடு செய்யப்பட்டதாகவும், இதை ரகசியமாக கண்காணித்து வந்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.

செரீப்பிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவந்த அமலாக்கத் துறையினர் நேற்று அவரை கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் அவரை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது. அப்போது ஓர் அறிக்கையையும் தாக்கல் செய்தது. அதில், “பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு பல வங்கிகளில் கணக்குகள் உள்ளன. அதில் ரூ.100 கோடிக்கும் அதிகமான பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும் பகுதி ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

image

2013 ஆம் ஆண்டிலிருந்து, பி.எஃப்.ஐ பல்வேறு திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு வருகிறது. 2014-க்குப் பிறகு பணப் பரிமாற்றம் மற்றும் பண வைப்புத்தொகையும் கணிசமாக அதிகரித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டங்கள் மற்றும் நிதிகளில் பி.எஃப்.ஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தப் பணம் குடியுரிமை சட்ட போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இதேபோல் செரீப்பின் வங்கிக் கணக்கிலும் கோடிக்கணக்கில் பணம் வந்துள்ளது. விசாரணையை தவிர்ப்பதற்கும், நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் செரீப்பின் வேண்டுமென்றே முயற்சிகள் மேற்கொண்டதுடன், எங்களுடன் ஒத்துழைக்காமல் இருந்த அவரது நடவடிக்கைகள், அவர் பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து மேலும் சந்தேகத்தைத் தூண்டியது. இவர்களுக்கு யார் யார் எந்தெந்த நாடுகளில் இருந்து பணம் கிடக்கிறது என்ற விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த டெல்லி கலவரத்தில் பி.எஃப்.ஐ உறுப்பினர்களின் பங்கு இருக்கிறது. இதேபோல், பெங்களூரு நகரில் அண்மையில் நடந்த வன்முறைகளுடன் பி.எஃப்.ஐ-க்கு தொடர்புகள் இருப்பதற்கான அறிகுறிகளும் உள்ளன, அதில் அதன் அரசியல் பிரிவு, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ) சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பி.எஃப்.ஐ பல்வேறு வழக்குகளில் தொடர்புடையது. இது பொது ஒழுங்குக்கு இடையூறு விளைவித்தது மற்றும் பல்வேறு வகையான குற்றங்கள் அமைப்புகளின் உறுப்பினர்களால் செய்யப்பட்டன” என்று கூறியது. இதையடுத்து செரீப்பை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா!

2006 ஆம் ஆண்டில் ஓர் அமைப்பாக பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நடைமுறைக்கு வந்த போதிலும், அதன் தோற்றம் 1993-ல் இருந்து வருகிறது. பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய அபிவிருத்தி முன்னணி (NDF) என்ற அரசியல் அமைப்பு கேரளாவில் உருவாக்கப்பட்டது. கேரள மாநில முஸ்லிம் சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுபோன்ற மூன்று முஸ்லிம் அமைப்புகள் இணைந்துதான் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உருவானது. பல ஆண்டுகளாக, மாநில முஸ்லீம் சமூகத்தின் சமூக-பொருளாதார நலனுக்காக செயல்படும் ஒரு அமைப்பாக அவர்களின் பணி மாநிலம் முழுவதும் கவனிக்கப்பட்டது. இதனால் அமைப்பின் புகழ் அதிகரித்தது.

image

தமிழகத்தில் மனித நீதிப் பாசறை, கர்நாடகத்தில் கர்நாடக கண்ணிய மன்றம், கோவாவில் குடிமக்கள் மன்றம், ராஜாஸ்தானில் கல்வி மற்றும் சமுதாயச் சமூகம், மேற்கு வங்கத்தில் நகரிக் அதிகர் சுரக்‌ஷா சமீதி, மணிப்பூரில் லிலிங் சமூகக் மன்றம், ஆந்திரப் பிரதேசத்தில் சமூக நீதிக் கழகம் போன்ற அமைப்புகள் இதனுடன் இணைந்தன. இஸ்லாமியருக்கு இடஒதுக்கீடு, இஸ்லாமியத் தனிநபர் சட்ட நீதிமன்றம், பட்டியலினம் மற்றும் முஸ்லிம் மக்களின் கல்வி மேம்பாடு போன்றவற்றில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் அரசியல் பிரிவாக இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 2009 ஆண்டு தொடங்கப்பட்டது.

தற்போது 22 மாநிலங்களில் இந்த அமைப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே, இந்த அமைப்பு பல மோதல்களிலும் அரசியல் கொலைகளிலும் சிக்கியுள்ளது. இது கேரளாவில் குறைந்தது 30 அரசியல் கொலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 2015 ஆம் ஆண்டில் கேரளாவின் கோழிக்கோடு மராட் கடற்கரையில் எட்டு இந்துக்களை கலகம் செய்து கொலை செய்ததற்காக அதன் உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். 2014 ஆம் ஆண்டில், கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் PFI செயற்பாட்டாளர்கள் குறைந்தது 27 அரசியல் கொலைகள், 86 கொலை வழக்குகள் மற்றும் 125-க்கும் மேற்பட்ட வகுப்புவாத உணர்ச்சிகளைத் தூண்டும் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது.

இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் பெயர் அடிபடத் தொடங்கி வருகிறது. கேரள அரசு முதல் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் அதன் தலைவர்கள் இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் எனக் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் தற்போது அந்த அமைப்பின் வங்கிக் கணக்கில் ரூபாய் 100 கோடிக்கும் அதிகமான பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

– மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.