தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் உடல்நலக்குறைவால் இன்று( 24-12-2020) தனது 70வது வயதில் காலமானார்.

image

தமிழகத்தின் பண்பாட்டு, வரலாறு ஆய்வுகளிலும், நாட்டார் தெய்வங்கள் பற்றிய ஆய்விலும் புதிய வெளிச்சம் பாய்ச்சியவர் பேராசிரியர் தொ.பரமசிவன். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வசித்து வந்த இவர், தமிழகத்தின் மண்ணின் தெய்வங்கள், பழக்கவழக்கங்கள் பற்றிய ஆய்வுகளின் புதிய பரிணாமத்தை வெளிக்கொணர்ந்தவர்.

பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன், இளையான்குடியிலுள்ள ஜாகிர் உசேன் கல்லூரியிலும், மதுரை தியாகராசர் கல்லூரியிலும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றியவர். கல்லூரிப்பணியில் இருந்த காலத்திலும், அதன்பின்னும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, மாறாத இந்த மண்ணின் குரல்களை பதிவு செய்தவர் இவர். பணி ஓய்வுக்கு பிறகும்கூட இறக்கும் தருவாய் வரையிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிக்கொண்டே இருந்தார் தொ.ப. இவரின் பேச்சும், எழுத்தும் பலநூறு தமிழர் வரலாறு, பண்பாட்டு ஆய்வு மாணவர்களை உருவாக்கியுள்ளதை கண்கூடாக காணலாம்.

image

இவரின் ‘அழகர் கோயில்’ என்ற நூல் தமிழர்களின் ஆய்வுப்பொக்கிசம் என்று எல்லோராலும் போற்றப்படுகிறது. இந்த நூல் இதுவரையிலான கோயில் ஆய்வுகளின் எல்லையை விரிவுப்படுத்தியது, அந்த நூலுக்காக இவரின் உழைப்பு ஆய்வியல் மாணவர்களுக்கு எந்த காலத்துக்குமான பாடமாகும்.

இவரது ‘அறியப்படாத தமிழகம்’ என்ற நூல் தமிழ் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியது, இந்த நூலில் தமிழகத்தில் உணவு, உடை, பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், பேச்சுவழக்குகள், சாதிகள், பண்டைய கருவிகள் என்று நம்முன்னே ஒரு புதிய வரலாற்று பார்வையையும், நீங்காத பிரமிப்பையும் கண்முன்னே நிறுத்தியிருப்பார். தொடர்ந்து இவர் எழுதிய தெய்வங்களும் சமூக மரபுகளும், தெய்வம் என்பதோர், சமயங்களின் அரசியல் என்பன போன்ற பல்வேறு நூல்களின் மூலமாக தமிழக நாட்டார் தெய்வங்களின் வரலாறையும், புழுதிப்படிந்த நம் மண்ணின் வரலாறையும் அழுத்தமாக நிறுவியவர்.

 பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர், தமிழகத்தின் வரலாற்றையே அசைத்துப்பார்க்கக்கூடிய பல ஆணித்தரமான கட்டுரைகளை பதிவு செய்தவர். இந்த கட்டுரைகள் பல தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. எழுத்து மட்டுமின்றி இவரது பேச்சும்கூட அத்தனை ஆய்வுப்பூர்வமாக, பொருள் பொதிந்ததாக இருக்கும். தமிழகத்தின் நாட்டார் தெய்வங்களின் வரலாறு, பண்பாட்டு ஆய்வுகள், வரலாற்று ஆய்வுகள் என எதனை தொட்டாலும் அதில் நிச்சயமாக தொ.பவின் தடம் அழுந்த பதிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வீரமணி சுந்தரசோழன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.