இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான அசோச்சேம் (ASSOCHAM) இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக சங்கங்களால் 1920-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பு இந்தியாவில் வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. மேலும், சமூக சிக்கல்களுக்கும் தனியார் அல்லது தனிநபர் முன்முயற்சிகளுக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்படுகிறது. இந்த அமைப்பின் குறிக்கோள் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதும், வர்த்தக தடைகளை குறைப்பதும், இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சிக்கு உகந்த சூழலை வளர்ப்பதும் ஆகும்.

400 சங்கங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளை தன்னகத்தே கொண்ட அசோச்சேம் கூட்டமைப்பு, நாடு முழுவதுமுள்ள 4.5 லட்சம் உறுப்பினர்களுக்கு தனது சேவைகளை வழங்கி வருகிறது.

இதன் 100 ஆண்டுகள் நிறைவு விழா இந்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ‘அசோச்சேம் அறக்கட்டளை வாரம் 2020′ நிகழ்வு நேற்று தொடங்கியது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள், ‘இந்தியாவின் விரிதிறன்: 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய ஆத்மனிர்பர் பயணம்’.

அசோச்சேம் அறக்கட்டளை வாரத்தையொட்டி நேற்று சிறப்பு மாநாடு காணொலி மூலம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, ‘அசோசாம் நிறுவனத்தின் இந்த நூற்றாண்டின் சிறந்த நிறுவனம்’ எனும் விருதை டாடா குழுமத்தின் சார்பாக ரத்தன் டாடாவுக்கு காணொளி மூலம் பிரதமர் மோடி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது, “உலகம் மற்றொரு தொழில் புரட்சிக்கு தயாராகி வருகிறது. இதனால், நமது நாடு நிர்ணயித்த இலக்குகளை அடைய நாம் தயாராகி அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டது.

உலக நாடுகள் இந்திய பொருளாதாரத்தை நம்புகின்றன. கொரோனா காலத்தில், உலக நாடுகள் பல தடைகளை சந்தித்த போதும், இந்தியாவில் அன்னிய முதலீடு அதிகரித்தது. நமது நாடு தன்னிறைவு இந்தியாவாக மாறுவதில் மட்டும் சவால் இல்லை. அதனை எவ்வளவு காலத்தில் அடைகிறோம் என்பது முக்கியம். அடுத்த 27 ஆண்டுகளில் இந்தியா உலகளாவிய நிலையைத் தீர்மானிக்கும் என்பதால், திட்டமிட்டு செயல்பட மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்ப கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.

தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாற தொழில்துறையினர் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறைகளில் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். அந்த துறையில், தனியார் துறையினர் முதலீடு செய்ய வேண்டும். ‘ஏன் இந்தியாவில்’ என்ற நிலையில் இருந்து ‘இந்தியாவில் ஏன் இருக்கக்கூடாது’ என்ற நிலையை நோக்கி நாம் நகர வேண்டும்.

இந்தியாவின் நூற்றாண்டு கால வளர்ச்சியில் டாடா நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளது. நாட்டின் பலமுக்கிய வளர்ச்சியில் டாடா நிறுவனத்தின் பெரும் பங்கு இருந்துள்ளது” என்று மோடி பாராட்டினார்.

ரத்தன் டாடா

மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, “என் இத்தனை ஆண்டுகால தொழில்முறை வாழ்க்கையில் நான் பெரிதும் மதிப்பதும் நன்றி கூறுவதும் மோடி அவர்களுக்குத்தான். அதிருப்தி இருக்கும், எதிர்ப்பு இருக்கும், ஆனால் ஒருபோதும் திசைதிருப்பவோ அல்லது ஓடவோ இல்லை. எந்தவிதமான சலனமும் இல்லாமல், பின்வாங்காமல் முன்னேறி ஓடிக்கொண்டு இருக்கிறார்.

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதும் பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அறிவித்தீர்கள். மக்கள் பிரிவுபடாமல் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் தீபம் ஏற்றவைத்தீர்கள். நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை. பெருமைப்பேச இல்லை. இது நாட்டை ஒன்றிணைத்து, நாங்கள் எழுந்து நிற்க முடியும் என்பதை உலக்கிற்குக் காட்டுகிறது.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து நீங்கள் சொன்னதைப் பின்பற்றினால், நீங்கள் செய்ததைச் செய்தால், இந்த உலகம் சொல்லும், இந்த பிரதமர் அது நடக்கக்கூடும் என்று சொன்னார், நடத்தி காட்டினார் என்று” என்றார்.

நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டில் டாடா குழுமத்தின் பங்கு பெரிதும் முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது குறிப்பிடதக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.