சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி 27.12.2020 முதல் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்தப் பெயர்ச்சியை ஒட்டி மேஷம், கடகம், துலாம் ஆகிய ராசிகளுக்குக் கண்டகச் சனியாக வும், மிதுன ராசிக்கு அஷ்டமத்துச் சனியாகவும், தனுசு ராசிக்கு பாதச் சனியாகவும், கும்ப ராசிக்கு ஏழரைச் சனி ஆரம்பம், மகர ராசிக்கு ஜன்மச் சனியாகவும் அமைகிறார்.

தற்போதைய பெயர்ச்சியில் சனி பகவானின் அமைப்பைக் கண்டதும் பயம் கொள்ளத் தேவையில்லை. சுய ஜாதகம் வலுப்பெற்றிருக்கும் நிலையில் எவ்வித பாதிப்புகளும் நம்மை அண்டாது. மேலும், சனி பகவான் கஷ்டத்தை அளிப்பவர் அல்ல, எதையும் எதிர்கொள்ளும் வல்லமையைப் பெறும் விதமான அனுபவத்தை அளிப்பவர்; முன்வினைகள் கரைந்து போக அருள் செய்பவர் என்றே சொல்லவேண்டும்.

எனினும், சனிபகவானின் திருவருளைப் பெறவேண்டும் என விரும்பும் அன்பர்கள் உரிய வழிபாடுகளைச் செய்து பலன் பெறலாம். எளிய மந்திரங்களைச் சொல்லி வழிபட்டு வரம் பெறலாம்.

அவ்வகையில் சில எளிய பரிகாரங்களை அறிவோம்.

ஒருவருக்கு ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி நடைபெறும் காலங்களிலும், சனி தசை நடைபெறும் காலங்களிலும் சனீஸ்வரரைப் ப்ரீதி செய்வதற்காகப் பல எளிய பரிகாரங்களை நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அவற்றில் சில பரிகாரங்களை அறிந்துகொள்வோம்.

சனிபகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமை அன்று விரதம் கடைப்பிடித்தால், நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

சனிக்கிழமைகளில் சனிபகவானின் அதிபதியான மகாவிஷ்ணுவைப் பிரார்த்தித்து விஷ்ணு சஹஸ்ரநாமம் அல்லது அனுமன் சாலீஸா பாராயணம் செய்தால், எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.

சனிக்கிழமைகளில் வரும் மகா பிரதோஷ புண்ணிய தினத்தில், சிவாலயங்களில் வில்வ தளத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் சனியின் பாதிப்புகள் குறையும்.

சங்கடஹர சதுர்த்தி தினத்தில், விநாயகருக்கு எட்டு சிதறு தேங்காய்களை உடைத்து, நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், சனியின் பாதிப்புகள் குறையும்.

சனிபகவானின் தானியம் எள். அந்த எள் எண்ணெயில் (நல்லெண்ணெய்) அவருக்கு விளக்கு ஏற்றி வழிபடுவதால், நன்மைகள் பெருகும்.

சனீஸ்வரருக்கு எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்து, அதில் காகத்துக்குக் கொஞ்சம் வைத்துவிட்டு, நாம் சாப்பிட்டால் நன்மைகள் பெருகும்.

நல்லெண்ணெய், உளுந்து, இரும்புச்சட்டி ஆகியவற்றை ஏழை, எளியோருக்குத் தானம் செய்யலாம். அதேபோல், சனி ஆதிக்கம் செலுத்தும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர நாள்களில் அன்னதானம் செய்வது சிறப்பு.

நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்தால், சனிபகவான் அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

சனிக்கிழமை விரதம் இருந்து, எள் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்து, சனிபகவானுக்கு உகந்த எள் எண்ணெய் விளக்கிட்டு, எள் சாதம் படைத்து, சனி கவசம் ஓதி வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.

வெள்ளிக்கிழமை இரவு, எள் தானியத்தை கரும்பட்டுத் துணி அல்லது கருமை நிற காகிதத்தில் வைத்து மடித்து தலையணைக்குக் கீழ் வைத்து படுத்துறங்கவும். மறுநாள் காலையில் எள் எண்ணெய் தேய்த்துக் குளித்து, முதல்நாள் மடித்து வைத்த எள்ளை வடித்த சாதத்தோடு கலந்து நைவேத்தியம் செய்து காக்கைக்கு வழங்க நன்மை ஏற்படும். இயன்றபோது குச்சனூர், திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு முதலான தலங்களுக்கும் சென்று சனிபகவானை வழிபட்டு வரலாம்.

வெள்ளிக்கிழமைதோறும் அதிகாலை நீராடி அருகம்புல் மாலை சாற்றி, அரசமர பிள்ளையாரை சுற்றி வந்து முறையாக வழிபட்டால் சீரும் சிறப்பும் நாடி வரும்.

இயன்றபோதெல்லாம் அனுமனுக்கு வடைமாலை சாத்தி, துளசி மாலை அணிவித்து, வெண்ணெய் அர்ப்பணித்து வழிபட்டு வந்தால், பாதிப்புகள் நீங்கும். அதேபோன்று நளபுராணம் படிப்பதாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராம நாமத்தை உச்சரிப்பதாலும் பாதிப்புகள் நீங்கி பயன் அடையலாம்.

நேர்மை, நீதி, வாக்கு தூய்மையை விரும்பக்கூடியவர் சனி பகவான். பாதகமான காலங்களில் சோதனைகளைத் தாங்கி நேர்மையாக உண்மையாக நடந்துகொண்டால் எந்தத் தீங்கும் ஏற்படாது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.