சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் எய்மஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

image

மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு  கடந்த 2019 ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டியது. ஆனால் மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிகளும் நடைபெறவில்லை.  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென்தமிழகம் மற்றும் கேரளா மாநில மக்கள் பெரும் பயன் அடைவார்கள். மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் மாணவர்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும் தற்போது கொரோனா தொற்று காரணமாக பல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அளவுக்கு அதிகமாக பணம் வசூல் செய்யும் சூழலில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருந்தால் ஒரே நேரத்தில் பல ஆயிரம் மக்கள் சிகிச்சை பெற்று பயன்பெற்றிருப்பார்கள். ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும் எவ்வித  பணிகளும் நடைபெறவில்லை.  ஆகவே, மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த  உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் “எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன” என தெரிவிக்கப்பட்டது.

image

அதற்கு நீதிபதிகள், “2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் தற்போது வரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு  இன்னமும் ஒப்படைக்கவில்லை என குறிப்பிடப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளதே” எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில் நிலத்தை கையகப்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பதால் காலதாமதமாவதாக குறிப்பிடப்பட்டது. 

அதற்கு நீதிபதிகள் “ஏறத்தாழ 2 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் மருத்துவமனை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? இந்நிலையை பார்க்கும் போது மதுரையில் குறிப்பாக தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஆர்வம் அரசுக்கு இல்லை என்றே தெரியவருகிறது” என தெரிவித்தனர்.

image

தொடர்ந்து, வழக்கில் பதிலளிக்க உத்தரவிட்டு இரண்டு மாத காலம் ஆகியும் முறையாக பதிலளிக்காதது வருத்தத்தை அளிக்கிறது. இந்நிலை தொடர்ந்தால்  சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

அதற்கு அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை சிறிது நேரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.