மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற விவசாயிகளின் போராட்டம் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்துவருகிறது. `ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களுடன் வந்திருக்கிறோம்’ என்றும், `கோரிக்கை நிறைவேறும்வரை டெல்லியைவிட்டு நகர மாட்டோம்’ என்றும் ஆரம்பத்திலேயே விவசாயிகள் அறிவித்துவிட்டனர். அதில் இன்றுவரை அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. காரணம், வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்க முடியாது என்றும், அந்தச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் பேச்சுவார்த்தையின்போது அமைச்சர்கள் கூறிவந்தனர். ஆனால், மூன்று வேளாண் சட்டங்களையும் ஒட்டுமொத்தமாகத் திருப்பப் பெற வேண்டும் என்ற தங்கள் நிலைப்பாட்டில் விவசாயிகள் உறுதியாக இருந்தனர். இந்தநிலையில்தான், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 8-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்றது. அதற்கு எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும், தொழிற்சங்கத்தினரும் முழு ஆதரவு தெரிவித்தனர். பல மாநிலங்களில் பொது வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது.

விவசாயிகள் போராட்டம்

பொது வேலைநிறுத்தம் நடைபெற்ற நாளன்று, போராடும் விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திடீரென்று பேச்சுவார்த்தை நடத்தினார். நான்கு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்தநிலையில், டிசம்பர் 14-ம் தேதி முதல் தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது என்று அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு முடிவுசெய்திருக்கிறது.

இதற்கிடையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் டிசம்பர் 9-ம் தேதி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்தினர். காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர்.

Also Read: டெல்லி விவசாயிகள் போராட்டம்: தோல்வியில் முடிந்த அமித் ஷா முயற்சி! -அடுத்தகட்ட நகர்வு என்ன?

பின்னர் செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசினர். அப்போது, `விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை வாபஸ் பெற வேண்டியது மிகவும் முக்கியம் என்று குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தோம். நாடாளுமன்றத்தில் முறையான விவாதமின்றி வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. வேளாண் மசோதா குறித்து ஆழமான விவாதம் நடத்த வேண்டும் என நாங்கள் கோரினோம்.

தேர்வுக்குழுவுக்கு இந்த மசோதாவை அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கூறினோம். எதையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அவசரகதியில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தற்போது, 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்திருக்கிறோம். விவசாயிகளுக்காக இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், வீதியில் இறங்கி ஏன் விவசாயிகள் போராடப்போகிறார்கள். இந்த வேளாண் சட்டங்கள் ஒட்டுமொத்த விவசாயிகளையும் பாதிக்கும்” என்று அவர்கள் கூறினர்.

பேச்சுவார்த்தைக்கு வந்த விவசாயிகள்

தலைநகர் டெல்லி எல்லைகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் வயதான விவசாயிகள். உங்கள் இளைஞர்களெல்லாம் எங்கே என்ற கேள்விக்கு, அவர்கள் ராணுவ வீரர்களாக நம் நாட்டைக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

போராடும் விவசாயிகளுக்குப் பல்வேறு தரப்பினரும் பேராதரவு வழங்கிவருகிறார்கள். ஹாக்கி, கபடி போன்ற விளையாட்டுகளில் மாநில மற்றும் இந்திய அணிகளுக்கு விளையாடிய விளையாட்டு வீரர்கள், போராட்டம் நடக்கும் இடத்தில் தற்காலிகச் சலவை நிலையம் அமைத்திருக்கிறார்கள். போராடும் விவசாயிகளின் துணிகளை இவர்கள் சலவை செய்து கொடுக்கிறார்கள். ஒரு நாளைக்கு 2,000 ஜோடித் துணிகளை இவர்கள் சலவை செய்து கொடுக்கிறார்களாம். பெரும்பாலான ஆண்கள் போராட்டத்துக்குச் சென்றுவிட்டதால், பஞ்சாப்பிலும் ஹரியானாவிலும் பெண்களே வயல்வெளிகளில் இறங்கி அனைத்து விவசாயப் பணிகளையும் கவனித்துவருகிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் ஒரு திருமண வீட்டில் நடைபெற்ற நெகிழ்ச்சியான சம்பவம்… திருமணத்துக்கு வந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம், `பரிசுப் பொருள்களுக்கு பதிலாக நிதி கொடுங்கள்’ என்று சொல்லி, திருமண வீட்டார் உண்டியல் வைத்திருக்கிறார்கள். `டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக என்பதால், தாராளமாக நிதி அளியுங்கள்’ என்று அந்தக் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். `இது நம்முடைய போராட்டம். நாம் அனைவரும் சேர்ந்து போராட வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு நாம் ஒவ்வொருவரும் உதவிசெய்ய வேண்டும்’ என்று அந்தக் குடும்பத்தினர் கூறியிருக்கிறார்கள்.

வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்க முடியாது என்று மத்திய அரசு கூறுவதால், விவசாயிகளின் போராட்டம் அடுத்தகட்டத்துக்கு நகர்கிறது. மூன்று வேளாண் சட்டங்களும் தங்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட்களுக்கு ஆதரவாகவும் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், அம்பானி, அதானியின் நிறுவனங்களின் பொருள்களைப் புறக்கணிப்பது என்று விவசாயிகள் முடிவுசெய்துள்ளனர். அது தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன், #BoycottAmbaniAdani என்ற ஹேஷ்டேக், சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. `ஜியோ தொலைத் தொடர்பு நிறுவனத்தின் செல்போன் சிம்களை இனி பயன்படுத்த மாட்டேன்’ என்று ஏராளமானோர் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.

சண்முகம்

விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைவது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகத்திடம் பேசினோம். “நாடாளுமன்றத்தில் தங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக மத்திய அரசு எதை வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. பெரும்பான்மையைப் பயன்படுத்தி, நாட்டு மக்களுக்குத் தேவையான, அவசியமான, சாதகமான சட்டங்களை இயற்றலாம். ஆனால், விவசாய நாடான இந்தியாவில், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டுவருவதற்குப் பெரும்பான்மையைப் பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை வாபஸ் வாங்கச் சொல்வதா என்று கேட்பதெல்லாம் ஏற்கக்கூடியதல்ல.

இப்படிப்பட்ட சட்டங்களை மத்திய அரசு கொண்டுவரப் போகிறது என்ற நிலையிலிருந்தே விவசாயிகள் எதிர்த்துவருகிறார்கள். விவசாயிகளின் எதிர்ப்பைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல்தான், இந்தச் சட்டங்களை கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றினார்கள். மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய எந்தக் கருத்தையும் மத்திய அரசு காது கொடுத்தே கேட்கவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த திருத்தங்களையோ, நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையையோ, ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள் என்ற கேள்வியையோ மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. மத்திய அரசின் இப்படிப்பட்ட அணுகுமுறைதான், லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கிப் படையெடுத்ததற்கு முக்கியக் காரணம்.

Also Read: பிஎம் கேர்ஸ் நிதி பற்றி வாய் திறக்காத அன்னா ஹசாரே… விவசாயிகளுக்காக உண்ணாவிரதம் ஏன்?

மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும் என்பது போராடும் விவசாயிகளான எங்களின் கோரிக்கை. அதில் எந்தச் சமரசமும் இல்லை. ஆனால், அந்தச் சட்டங்களில் திருத்தங்கள் வேண்டுமானால் செய்யலாம் என்கிறது அரசு. அதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவேதான், டிசம்பர் 14-ம் தேதி முதல் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது என்று அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு முடிவுசெய்திருக்கிறது. அத்துடன் அம்பானி, அதானி ஆகியோரின் பெருநிறுவனங்களின் பொருள்களைப் புறக்கணிப்பது என்றும், வட மாநிலங்களில் டோல்கேட் கட்டணங்களைச் செலுத்துவதில்லை என்றும் ஒருங்கிணைப்புக்குழு முடிவுசெய்திருக்கிறது.

போராடும் விவசாயிகள்

இந்தியா முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர் அலுவலங்களில் போராட்டங்களை நடத்துவது என்றும் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கலெக்டர் அலுவலகங்களிலும் காத்திருப்புப் போராட்டத்தை டிசம்பர் 14-ம் தேதி முதல் நடத்தப்போகிறோம். அதற்காக லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளைப் பங்கேற்கவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம்” என்றார் பெ.சண்முகம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.