ஆந்திர மாநிலம் கோதாவரியில் மர்ம நோய் காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் திடீரென உடல்நலம் குன்றி வருகின்றனர்.

image

கிழக்கு கோதாவரியை அடுத்த ஏலூர் உள்ளிட்ட பத்து கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மயக்கமடைந்தனர். மயக்கத்திற்கான காரணம் கண்டறியப்படாததால் சுகாதாரத் துறையினர் முகாம்கள் அமைத்து வீடு வீடாக மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். ஒரு சிலருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாத நிலையில், பலர் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 428 ஆக அதிகரித்தது. ஒருவர் உயிரிழந்த நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனால் வீடு திரும்பினர்.

நோயின் அறிகுறி!

குமட்டல், வலிப்பு முதல் நினைவிழப்பு வரை இந்த மர்ம நோயின் பல அறிகுறிகள் ஆகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் குழந்தைகளுக்கு கண்களில் அதிக எரிச்சல் உணரப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களுக்கு தொற்று இல்லை என்று முடிவுகள் வந்திருப்பது ஆறுதல் செய்தி. அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டதில் அதில் எந்த வித வைரஸ் தொற்றும் இல்லை என்றும் முடிவுகள் வந்துள்ளன.

image

இது தொடர்பாக பேசிய ஆந்திர அமைச்சர் ஸ்ரீநிவாஸ், “ஏலூர் மக்கள் வாழ்ந்த பகுதிகள் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. அதில், நீர் மாசுபாடு மற்றும் காற்று மாசுபாடு இந்த நோய்க்கு காரணமில்லை என்பது தெளிவாகி இருக்கிறது. மர்ம நோய் எப்படி பரவியது என்பதை சோதனைகள் மூலம், தான் கண்டுபிடிக்க வேண்டும்” எனக் கூறி இருக்கிறார்.

இதற்கிடையே, மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் குழு ஏலூர் விரைந்துள்ளது. அவர்கள் ஏலூர் பகுதிகளில் மருத்துவ முகாம் ஒன்றை அமைத்து பரிசோதித்து வருகின்றனர். இதேபோல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழுவும் அங்கு விரைந்துள்ளது. அந்தக் குழுவில் மூத்த மருத்துவர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அவர்கள் ஏலூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு மருத்துவர்களிடம் நோய் குறித்து கலந்தாலோசித்தார். மேலும் ஏலூர் அரசு மருத்துவமனையில், தேவையான அளவுக்கு படுக்கைகளை அதிகரித்துக் கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே கொரோனா வைரஸ் தாக்கம் ஒருபுறம் இருக்கும் நிலையில், இந்த மர்ம நோய் ஆந்திர மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.