ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தற்போது முன்னிலை வகித்து வரும் நிலையில், இரண்டாவது இடத்திற்கு பாஜக மற்றும் ஓவைசி கட்சி இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

image

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் இரண்டாம் இடத்தை பிடிக்க பாஜக மற்றும் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது, தற்போதைய சூழலில் பாஜக 37 வார்டுகளிலும், ஒவைசி கட்சி 40 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளது.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகளில் நிமிடத்திற்கு நிமிடம் காட்சிகள் மாறிவருகிறது. இன்று வெளியாகிவரும் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகளில் தொடக்கத்தில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்துவந்தாலும் பிறகு தெலங்கானாவின் ஆளுங்கட்சியான டிஆர்எஸ் முன்னிலை வகிக்க தொடங்கியது.

தற்போதைய நிலவரப்படி ஹைதராபாத்தின் மொத்தமுள்ள 150 வார்டுகளில் முன்பு 87 வார்டுகளில் முன்னிலை வகித்த பாஜக தற்போது 37 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முன்பு 33 வார்டுகளில் முன்னிலையில் இருந்த  தெலங்கானாவின் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தற்போது 68 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 40 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி இரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. வாக்குச்சீட்டு முறையில் நடந்த இந்த தேர்தலின் வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.


ஹைதராபாத்குறிவைத்த மோடிஅமித் ஷா

கர்நாடகாவுக்கு பிறகு தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி வேரூன்ற தெலங்கானா மாநிலம் ஒரு சிறந்த வாய்ப்பு என பாஜக தலைமை கருதுகிறது. கடந்த வருட மக்களவை தேர்தலில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை நிஜாமாபாத் தொகுதியில் பாஜகவை சேர்ந்த அரவிந்த் தோற்கடித்தது பாஜக தலைமையின் இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.

image

இதனால்தான் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலை சாதாரணமான ஒரு தேர்தலாக கருதாமல், சட்டசபைத் தேர்தல் அல்லது ஒருசில மக்களவை இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடந்தால் எந்த அளவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடக்குமோ அந்த அளவு முயற்சி செய்து பாரதிய ஜனதா கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டது.

ஹைதராபாத்தை தேர்ந்தெடுக்க இன்னொரு முக்கிய காரணம் அந்த நகரத்தின் மக்களுக்கு ஹிந்தி பரிச்சயமான மொழி. ஆகவே பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர்கள் ஹிந்தியில் பிரச்சாரம் செய்வது என்பது அந்த மக்களுக்கு அவர்கள் நேரடியாக தங்களுடைய கருத்துக்களை கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பை அளித்து இருக்கிறது.

ஆகவேதான் ஒரு பக்கம் அமித் ஷா, இன்னொரு பக்கம் ஜேபி நட்டா, இதுமட்டுமல்லாமல் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். இதைத் தவிர பாரதிய ஜனதாக் கட்சி தெலங்கானா மாநிலத்தில் காய்களை நகர்த்த மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் அமித் ஷாவின் வலதுகரமாக கருதப்படும் பூபேந்திர யாதவ் ஆகியோரையும் களமிறக்கியது.

image

தெலங்கானாவின் தற்போதைய அரசியல் களம் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக இருக்கிறது என அந்தக் கட்சியின் தலைமை கருதுகிறது. ஒரு பக்கம் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வருகிறது என்றும் தெலங்கானா தனி மாநிலமாக உருவானபோது சந்திரசேகர ராவுக்கு இருந்த செல்வாக்கு தற்போது இல்லை எனவும் பாஜக தலைமை கருதுகிறது. அதே சமயத்திலே காங்கிரஸ் – தெலுங்கு தேசம் மற்றும் இடதுசாரிகள் கூட்டணியும் தெலங்கானா மாநிலத்தில் ஓரம் கட்டப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் செல்வாக்குடன் இருப்பதை தகர்த்தால் பிற இடங்களில் பல்வேறு வாய்ப்புகள் பாரதிய ஜனதாவுக்கு கிடைக்கும் என்கிற சூழ்நிலையில்தான் பாஜக தலைமை ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் தங்கள் கட்சியை மாநிலத்தில் நிலைநாட்ட முழு முனைப்புடன் களம் இறங்கியது குறிப்பிடத்தக்கது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.