சபரிமலையில் திங்கள் முதல் வெள்ளிவரை 2,000 பேருக்கும், சனி ஞாயிறு நாட்களில் 3 ஆயிரம் பேரும் தரிசனம் செய்ய கேரள அரசு அனுமதியளித்துள்ளது.
கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல பூஜை மகரவிளக்கு விழாவையொட்டி குறைந்த அளவிலான பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதுவரை திங்கள் முதல் வெள்ளி வரை ஆயிரம் பேரும் சனி ஞாயிறு தினங்களில் 2 ஆயிரம் பேரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழா அன்று மட்டும் 5 ஆயிரம் பேரும் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தொடர்ந்து கேரள அரசை வலியுறுத்தி வந்தது. அதை பரிசீலித்த கேரள அரசு, தரிசனத்திற்கான பக்தர்கள் எண்ணிக்கையை உயர்த்தி அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி திங்கள் முதல் வெள்ளி வரை 2 ஆயிரம் பேரும் சனி, ஞாயிறு தினங்களில் 3 ஆயிரம் பேரும் தரிசனம் செய்ய கேரள அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், கானகப் பாதை வழியாக இதுவரை சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்காத நிலையில், சபரிமலை வட்டார பகுதியில் வசிக்கின்ற மலை அரைய சமூகத்தினர் மட்டும் கானகப் பாதை வழியாக சபரி மலைக்குச் செல்ல சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று ((டிசம்பர் 2)) தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM