ஆண்டுதோறும் டிசம்பர் 1 அன்று உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் என்ற கொடூர நோயின் தாக்கம், இந்த ஆண்டு கொரோனா என்ற மற்றொரு தொற்றுநோயிலிருந்து மீண்டுவர பல பாடங்களை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது. 

இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் நாம் மற்றொரு எய்ட்ஸ் தினத்தைக் காண்கிறோம். உலகெங்கிலும் பரவி, சுகாதார அமைப்புகளை சீர்குலைத்து, பொருளாதார சீரழிவை ஏற்படுத்தியுள்ளது இந்த கொரோனா வைரஸ். இதேபோலத்தான் 1990களில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் என்ற தொற்றுநோய் உலகளவில் பரவி சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

இதுபோன்ற பெருந்தொற்றுகள் மனித இனத்தின் செழிப்பையும், வளர்ச்சியையும் பாதிக்கக்கூடியவை. கடந்த 40 வருடங்களில் எய்ட்ஸ் நோயால் மட்டும் 32.7 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், கொரோனாவால் இந்த ஓராண்டில் மட்டும் 1.4 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

image

இந்த நோய்கள் அனைத்து சமூகம் மற்றும் அனைத்து மட்ட மக்களின் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை ஒன்றுதிரட்டுவதோடு, அனைவரையும் நோய்ப்பற்றி புரிந்துகொள்ள, சிகிச்சையளிக்க, முன்னெச்சரிக்கையாக இருக்க வலியுறுத்துகின்றன.

எச்.ஐ.வியானது கொரோனாவைவிட நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சில விஷயங்களில், நாடுகளும் மக்களும் ஒன்றிணைந்து செயல்படும்போது எதையும் சாதிக்கமுடியும் என்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணம். உலக சுகாதார அமைப்பு, யுனைட்ஸ் மற்றும் சர்வதேச எய்ட்ஸ் சொசைட்டி போன்ற அமைப்புகள் சுகாதார துறைக்கும், சமூகத்திற்கும் இடையில் தகவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவாக பகிர்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

உலகளாவிய நிதி அமைப்பு மற்றும் PEPFAR ஆகியவை குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பகுதிகளிலும் நோயின் தன்மை மற்றும் இறப்பைக் குறைக்கத் தேவையான முயற்சிகளை எடுத்துள்ளன. அதனால்தான் 2010 முதல் உலகளவில் எய்ட்ஸ் தொடர்பான இறப்புகள் 39% குறைந்துள்ளன.

image

இதில் கருத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், எய்ட்ஸ் நோய்க்கான மருந்து விலைகளுக்கு எதிராக பல அமைப்புகள் போராடியுள்ளன. குறிப்பாக எய்ட்ஸ் தொற்றுநோயின் மையப்பகுதியான தென்னாப்பிரிக்காவில் 2002ஆம் ஆண்டின் தரவுப்படி, மிக மலிவான ஆன்டிரெட்ரோவைரல்களின் ஒரு நாளைய செலவு ரூ.250. இந்த விலை தற்போது மலிவாகத் தெரிந்தாலும், அப்போதைய நிலவரப்படி, இந்த சிகிச்சைக்கு அதிகமாக செலவிடவேண்டி இருந்தது.

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் அடுத்த கட்டத்திற்கு உலகம் தயாராகி வருவதால் எய்ட்ஸ் கட்டுப்பாட்டில் கற்றுக்கொண்ட அனைத்துப் பாடங்களையும் இதிலும் பயன்படுத்தவேண்டும். எந்தவொரு நாடும், வளர்ச்சி நிலையைப் பொருட்படுத்தாமல், மக்கள்தொகைக்கு ஏற்ப, சுகாதார சேவைகளை அணுகுவதற்கான வழிமுறைகளையும், இந்த தொற்றுநோய் போரை எதிர்கொள்ளும் வழிமுறைகளிலிருந்து பின்வாங்குவதில்லை என்ற உறுதிமொழியையும் எடுக்கவேண்டும்.

image

தற்போது கொரோனா தடுப்பூசி சோதனைகள் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. வளர்ந்துவரும் நாடுகளில் கொரோனா தடுப்பூசி சோதனை மேற்கொள்ளுதல் தவிர்க்கப்படலாம் என்ற பயம் எழுந்துள்ளது. இதற்குமுன்பே எய்ட்ஸ் நோய்க்கான தடுப்பூசி ஆராய்ச்சிக்கு திறன்மிக்க சோதனை தளங்கள் பல நிறுவப்பட்டுள்ளது. எனவே தவிர்ப்பதற்கு பதிலாக உலகளாவிய ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து நாடுகளிலும் சோதனைகள் நடத்தப்படலாம்.

உலக சுகாதார அமைப்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கொரோனா கருவிகளுக்கான அணுகல் (ACT) – அக்ஸிலரேட்டரை நிறுவியது. மேலும், பல உலகளாவிய நிறுவனங்கள், அரசாங்கங்கள், சிவில் சமூகம் மற்றும் தொழில் ஆகியவற்றுடன் இணைந்து, கொரோனா தடுப்பூசியையும் சமமாக வழங்குவதாக உறுதிப்படுத்தியுள்ளது. எனவே தடுப்பூசி மற்றும் கண்டறியும் சோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு, இந்த உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் வழிமுறைகளுக்கு தொடர்ந்து ஆதரவு தேவைப்படுகிறது.

எச்.ஐ.விக்கு இப்போதுவரை தடுப்பூசி கண்டுபிடிப்பு என்பது மிகவும் சிக்கலானதாகவும், ஏமாற்றமளிக்கக் கூடியதாகவும் உள்ளது. ஆனால் கொரோனா தடுப்பூசியைப் பொருத்தவரை விரைவில் பயன்பாட்டிற்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தனியார் துறைகளும் மிக முக்கிய பங்களிப்பு கொடுத்துவருகிறது. எச்.ஐ.வி மற்றும் காசநோய் தடுப்பூசி தயாரிப்புகளுக்கும் இதேபோன்ற முயற்சி தேவை.

image

இவை உலகம் எதிர்கொள்ளும் ஒரே தொற்றுநோய் அல்ல. உண்மையில், புதிய தொற்றுநோய்களின் தோற்றம் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று வலுவான கணிப்புகள் உள்ளன. உலகமயமாக்கல், காலநிலை மாற்றம் மற்றும் வனவிலங்குகளால் உருவாகும் விளைவுகளும் இதற்குக் காரணம்.

எச்.ஐ.வி மற்றும் கொரோனா போன்ற தொற்றுநோய்கள் பற்றிய ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால், அவை பாகுபாடு காட்டுவதில்லை. எந்தவொரு தொற்றுநோய்க்கும் அரசியல் எல்லைகள் என்பது கிடையாது. மேலும் அனைவருக்கும் தொற்று அல்லது பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக “அனைவரும் பாதுகாப்பாக இல்லாதவரை ஒருவரும் பாதுகாப்பாக இல்லை’’ (no one is safe, until everyone is safe) என்பதை அறிந்து உலக அளவில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

Reference: The Conversation

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.