தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்தில் செய்து வந்த பிரசார பயணம் நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் 28ம் தேதி முதல் தஞ்சையில் பயணம் தொடங்கும் என உதயநிதி தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டத்தில் உதயநிதி

தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 20-ம் தேதி திருக்குவளையில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டார். அதன் பிறகு திட்டமிட்ட படி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால் அடுத்தடுத்த நாட்களிலும் உதயநிதியை போலீஸார் கைது செய்து விடுவிப்பது வாடிக்கையானது.

இந்நிலையில் கும்பகோணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலினை போலீஸார் கைது செய்வார்கள் என்பதால் ஏராளமான தி.மு.க தொண்டர்கள் உதயநிதி தங்கியிருந்த ஹோட்டலில் முன்பு திரண்டனர்.

உதயநிதிக்கு வரவேற்பு கொடுக்கும் தி.மு.க தொண்டர்கள்

போலீஸ் அதிகாரிகள் சிலர் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பொது இடங்களில் மைக்கில் பேசக்கூடாது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து வடக்கு மாவட்ட செயலாளரான கல்யாணசுந்தரத்திடம் போலீஸ் அதிகாரிகள் சிலர் கையெழுத்து வாங்கி சென்றனர். கும்பகோணத்தில் நடந்த இளைஞரணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய உதயநிதி, “சென்னை வந்த அமித்ஷா அ.தி.மு.கவுடன் கூட்டணி உறுதி என சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். இதனால் நம்ம வேலை சுலபமாகி விட்டது.

“ஏன் என்னை கைது செய்யுறீங்க என கேட்டதற்கு நீங்க போற இடமெல்லாம் பெரும் கூட்டம் கூடுது, அவங்களுக்கு வர்ற கூட்டம் வேற, உங்களுக்கு வர்ற கூட்டம் வேற. அதனால் தான் கைது செய்கிறோம் என சொல்ல எனக்கு தெரியும் நீங்க அம்பு எய்தவர் எடப்பாடி பழனிசாமி” என கலகலப்பூட்டினார்.

ஆலோசனை கூட்டத்தில் உதயநிதி

இதனை தொடர்ந்து வழி நெடுகிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட உதயநிதி தஞ்சாவூருக்கு வந்தார். தனியார் ஹோட்டலில் தங்கியவர் அங்கு நடந்த வர்த்தக சங்க கூட்டத்தில் கலந்து கொண்டார். நேற்று காலை எழுந்ததுமே வாக்கிங் செல்ல திட்டமிட்டிருந்தார். அதனை கட்சி நிர்வாகிகள் சிலர் மீடியாவிடமும் தெரிவித்திருந்தனர். ஆனால் நிவர் புயல் காரணமாக அதனை தவிர்த்து விட்டார் உதயநிதி.

பின்னர் நடந்த இளைஞரணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூடத்தில் கலந்து கொண்ட உதயநிதிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான சண்.ராமநாதன் தலைமையில் வீரவாள் பரிசளித்தனர். அப்போது இரண்டு வருடங்களுக்கு முன்பே நீங்கதான் இளைஞரணி செயலாளராக வர வேண்டும் என இளைஞரணி சார்பில் தஞ்சாவூரில் தீர்மானம் நிறைவேற்றினோம் என சண்.ராமநாதன் கூறினார்.

உதயநிதி ஸ்டாலின்

பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, `புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இப்பிரசார பயணம் வரும் 28 -ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. மீண்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் பிரசார பயணம் தொடங்கப்படும். புயல் பாதிப்பு ஏற்பட்டால் இளைஞரணியினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

வரக்கூடிய தேர்தல் நமக்கு சவாலானது. தி.மு.கவின் வாக்குகளை திட்டமிட்டு வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்கின்றனர். இதனால் தேர்தல் முடியும் வரை விழிப்புடன் இருக்க வேண்டும். பிரசாரத்திற்கு சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

இளைஞரணி பொறுப்பில் உள்ளவர்கள் வாட்ஸ் அப்பில் பல்வேறு குழுக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு அன்பகத்திலிருந்து கன்டென்ட் அனுப்படும் அதனை நீங்கள் உருவாக்கியுள்ள குழுக்களுக்கு அனுப்பினால் போதும். தஞ்சாவூர் எப்போதும் எனக்கு விசுவாசமாக இருக்கும் மாவட்டம். இங்குள்ள நிர்வாகிகள் உழைப்பு வேகமாக இருக்கும் சோடை போகாது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.