“அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி வரும் தேர்தலிலும் தொடரும்” என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிய , அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்திருக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்ட நிகழ்ச்சியில்தான், கூட்டணி குறித்த அதிகாரபூர்வமான கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர் இருவரும். இரண்டு கட்சிகளுக்கும் இடையே பல்வேறு முட்டல், மோதல்கள், இரண்டு கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் கூட்டணி குறித்த மாறுபட்ட கருத்துகள் நிலவிவந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர், ஓ.பி.எஸ் & ஈ.பி.எஸ் சகாக்கள்.

நாடாளுமன்றத்துக்கு ஒன்று… மொத்தம் நாற்பது!

கூட்டணி உறுதியாகிவிட்டது. எனில் இந்தக், கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்படும் என்கிற கேள்விதான் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.“தனியாக நின்றாலே 60 இடங்களில் வெற்றிபெறுவோம்” எனப் பேசிவந்த பா.ஜ.க, நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி வீதம் நாற்பது தொகுதிகளைக் கேட்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், அ.தி.மு.க தரப்பில் அவ்வளவு தொகுதிகள் ஒதுக்கத் தயாராக இல்லாததாகவும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் பா.ஜ.க-வின் வாக்குவங்கி, அதிலும் சட்டமன்றத் தேர்தல்களில் அந்தக் கட்சியின் வாக்கு வங்கி எவ்வளவு என்பதை முதலில் பார்ப்போம்.

பா.ஜ.க

பா.ஜ.க-வின் வாக்குவங்கி!

கிட்டத்தட்ட 2001 தேர்தலுக்குப் பிறகு இருபதாண்டுகள் கழித்து, இந்தமுறைதான், பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது பா.ஜ.க.

2001-க்கு முன்புவரை 84, 89, 91, 96 என நான்கு முறையும் தனியாகவே தேர்தலைச் சந்தித்தது பா.ஜ.க. அப்போது அந்தக் கட்சிக்கு 2 சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளே கிடைத்தன. முதன்முறையாக, 2001 தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து, 21 தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கு இடங்களில் வெற்றிபெற்றது பா.ஜ.க. அப்போது அந்தக் கட்சிக்கு 3.19 சதவிகித வாக்குகள் கிடைத்தன. அதுவே இதுவரை, பா.ஜ.க சட்டமன்றத் தேர்தலில் வாங்கிய அதிகபட்ச வாக்குகளாக இருக்கிறது. அந்தமுறை, காரைக்குடி, மயிலாப்பூர், மயிலாடுதுறை, தளி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றிபெற்றது.

அதற்குப் பிறகு, 2006 தேர்தலில் 225 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு, 221 இடங்களில் டெபாசிட் இழந்தது. வாக்கு வங்கியும் 2.02 சதவிகிதமாகக் குறைந்தது. 2011 தேர்தலில், 204 தொகுதிகளில் தனியாகப் போட்டியிட்ட பி.ஜே.பி 198 இடங்களில் டெபாசிட்டைப் பறிகொடுத்தது. 2.22 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 2016 தேர்தலில், பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சி, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகிய சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 2.84 சதவிகித வாக்குகளைப் பெற்றது. சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதம் சராசரியாக மூன்று என்கிற அளவிலேயே இருக்கிறது. அதேபோல. கடைசியாக நடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்தக் கட்சி வாக்கு சதவிகிதம் 3.71 என்கிற அளவிலேயே இருக்கிறது.

இந்தநிலையில், வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில், அந்தக் கட்சி நாற்பது தொகுதிகளைப் பெற்றால், அந்தக் கட்சியின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும், பா.ஜ.க அதிக இடங்களில் போட்டியிடுவது அ.தி.மு.க, தி.மு.க இரண்டு கட்சிகளில் யாருக்குச் சாதகமாக இருக்கும்.

கணபதி (மூத்த பத்திரிகையாளர்)

“பா.ஜ.க-வுக்கு நாற்பது தொகுதிகளை அ.தி.மு.க நிச்சயம் கொடுக்காது. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில், தி.மு.க வலுவான வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிபெற முயற்சிக்கும். அடுத்ததாக, கடந்த நாடாளுமன்றத் தொகுதியில், ஐந்து தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க-வுக்கு நாற்பது தொகுதிகள் கொடுத்தால், ஏழு தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க ஐம்பது தொகுதிகள் கேட்பார்கள். அதேபோல, தே.மு.தி.க-வும் குறைந்தது முப்பது இடங்களைக் கேட்பார்கள். இதுவே கிட்டத்தட்ட 100 இடங்களுக்கும் மேல் வந்துவிடுகிறது. அதனால், அ.தி.மு.க ஒருபோதும் இப்படியொரு முடிவை எடுக்காது. பா.ம.க மற்றும் தே.மு.தி.கவை இழக்கவும் அ.தி.மு.க விரும்பாது.

கணபதி (மூத்த பத்திரிகையாளர்)

பா.ஜ.க போராடி 30-35 தொகுதிகள் கேட்டு வாங்கினாலும், பா.ம.க-வையும் தே.மு.தி.க-வையும் சரிகட்ட வேண்டிய பொறுப்பை அ.தி.மு.க, பா.ஜ.க வசம் ஒப்படைத்துவிடும். இந்தமுறை, கண்டிப்பாக 160 தொகுதிகள்வரை தங்கள் கட்சி போட்டியிட வேண்டும் என்றே அ.தி.மு.க நினைக்கும். ஆனால், பா.ஜ.க-வின் கணக்கு, அ.தி.மு.க-வுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காத அளவுக்கு, 150-க்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிட வைக்கவேண்டும் என்பதே. இந்தமுறை, பா.ஜ.க தயவில் கூட்டணி ஆட்சி, அடுத்தமுறை பா.ஜ.க தனியாக ஆட்சி அமைக்கவேண்டும் என்பதே அமித் ஷாவின் திட்டம்.

அதேபோல, பா.ஜ.க, 30-35 தொகுதிகள் வாங்கினால், அதில் 15 தொகுதிகளில் வெற்றிபெற கடுமையான முயற்சி எடுப்பார்கள். அதாவது, காங்கிரஸ் கட்சி போட்டியிடும் இடங்களில், பா.ஜ.க போட்டியிட்டால், காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியாக இருக்கும் யாரையாவது சுயேச்சையாக நிறுத்தி வாக்குகளைப் பிரிப்பது மு.க.அழகிரி மூலம் தி.மு.க-வின் வாக்குகளை பிரிப்பது போன்ற பல யுக்திகளைக் கையாள்வார்கள்”

Also Read: அமித் ஷா: 40 தொகுதிகள் முதல் ரஜினியின் முடிவு வரை… நள்ளிரவைத் தாண்டி நீடித்த ஆலோசனை!

ப்ரியன் (மூத்த பத்திரிகையாளர்)

“காங்கிரஸால் எப்படி அ.தி.மு.க நிற்கும் இடங்களில் அவர்களைத் தோற்கடிப்பது கடினமோ, அதேபோல, தி.மு.க நிற்கும் இடங்களில் பா.ஜ.க, அவர்களை வெல்வது கடினம். அவர்களின் ஸ்டிரைக்கிங் ரேட் மிகவும் குறைவு. கடந்த காலங்களில் அவர்கள் பெற்ற வாக்குகளில் இருந்து நாம் அதைத் தெரிந்துகொள்ளலாம். அ.தி.மு.க தரப்பில், நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து இடங்கள் ஒதுக்கினோம். ஒரு இடத்துக்கு, ஆறு சட்டமன்றத் தொகுதிகள் வீதம் இப்போது முப்பது தொகுதிகள் கொடுக்கலாம் என நினைக்கிறது. ஆனால், பா.ஜ.கவோ, அறுபது இடங்களில் நாங்கள் பலமாக இருக்கிறோம் என பேரத்தை ஆரம்பித்து, நாற்பது இடங்கள் கேட்பதாகத் தெரிகிறது.

2011-ல், தி.மு.க – காங்கிரஸ் இடையே இருந்த அதே சூழல்தான் தற்போது இருக்கிறது. அப்போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததால், தி.மு.க அவர்களுக்கு 63 இடங்கள் ஒதுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோலதான், தற்போது, அ.தி.மு.க-வும் பா.ஜ.கவிடம் அதிகமாக முரண்டு பிடிக்க முடியாது. காரணம், மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பா.ஜ.க-தான் இருக்கிறது. அவர்களின் கை ஓங்கிதான் இருக்கும்.

ப்ரியன்

அதேபோல, நாடாளுமன்றத் தேர்தலில், கொடுத்த இடங்களை வாங்கிக்கொண்டது போல, இந்தத் தேர்தலில் நிச்சயம் பா.ஜ.க-வினர் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். காரணம், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழகத்தில் பா.ஜ.க மிகவும் ஆக்டிவ்வாக இருப்பது போல ஒரு பார்வை உருவாகியிருக்கிறது. தவிர, தமிழகத்தின் பல சிறிய கிராமங்களில்கூட இன்று பா.ஜ.க-வின் கொடியைப் பார்க்கமுடிகிறது”என்கிறார் அவர்.

பா.ஜ.க-வினரும், அதைத்தான் சொல்கிறார்கள், “கடந்த காலங்களில் நாங்கள் பெற்ற வாக்குகளை வைத்து எங்களைக் கணக்கிடாதீர்கள், நாங்கள் வளர்ந்திருக்கிறோம். அறுபது தொகுதிகளில் பலமாக இருக்கிறோம். நிச்சயம் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்” என, ஆனால், பா.ஜ.க தலைவர் செல்லும் இடங்களில் கூடும் கூட்டத்தை வைத்து, அவர் எப்போதும் மீடியா லைம்லைட்டில் இருப்பதை மட்டும் வைத்து தமிழகத்தில் பா.ஜ.க-வின் வளர்ச்சியைக் கணக்கிட முடியாது. தமிழகத்தில் பா.ஜ.க-வின் வாக்குவங்கி அதிகரித்திருக்கிறதா, அந்தக் கட்சி வளர்ச்சியடைந்திருக்கிறதா என்பது தேர்தல் முடிவுகளின்போது மட்டுமே தெரியவரும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.