சமீப காலமாக தங்கக் கடத்தல் வழக்கு, மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவந்த கேரள அரசு தற்போது பேச்சு சுதந்திரத்திலும் கைவைத்துள்ளதாக குற்றச்சாட்டும், எதிர்ப்புக்குரலும் வலுவாக எழுந்தது. இதையடுத்து, சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்தை நிறுத்திவைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன் பின்புலத்தை விரிவாகப் பார்ப்போம். 

கேரள அரசு கொண்டுவந்த ‘போலீஸ் சட்டம் 118(ஏ)’ தான் அந்த மாநில அரசியலில் தற்போதைய ‘ஹாட் டாப்பிக்’. இந்தச் சட்டத்துக்கு சனிக்கிழமை அம்மாநில ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் அளித்தார். புதிய சட்டத்திருத்த மசோதாவில் கையெழுத்திட்டதாக ஆளுநரின் அலுவலகம் உறுதிப்படுத்தியது.

கேரள அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் மத்தியில் இந்தப் புதிய சட்டப்பிரிவு கடுமையான சட்டம் என்று பேசப்பட்டது. இந்த விவகாரத்தில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு எதிராக காங்கிரஸ், பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் ஒன்றாகத் திரண்டன.

image

சட்டம் சொல்வது என்ன?!

கேரள போலீஸ் சட்டப் பிரிவு 118 (டி) மற்றும் ஐ.டி சட்டப் பிரிவு 66-ஏ ஆகியவற்றை கடந்த 2015இல் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த நிலையில் 118 (ஏ) என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதன்படி, ‘சமூக வலைத்தளங்கள் அல்லது தகவல்தொடர்பு தளங்கள் மூலமாக எந்தவொரு நபரையும் புண்படுத்தும் அல்லது அச்சுறுத்தும் நோக்கம் கொண்ட பதிவுகளை உருவாக்கும் அல்லது அனுப்பும் நபர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.’

இந்தச் சட்டமானது, “காவல்துறைக்கு அதிக அதிகாரம் அளிப்பதற்கும், பத்திரிகை சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கும் சுதந்திரமான பேச்சுரிமையை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும்” என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, “அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை, புதிய பிரிவு ஊடகங்களை மவுனமாக்குவதே இந்தச் சட்டத்தின் நோக்கம். சிபிஎம் மற்றும் அதன் அரசாங்கம் அவர்களை விமர்சிப்பவர்களை மவுனமாக்க விரும்புகின்றன. ஆட்சியில் ஊழல் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை அம்பலப்படுத்தும் பத்திரிகைகளை அரசாங்கம் இதன்மூலம் ஒடுக்கப் பார்க்கிறது. அரசிற்கு எதிராக பேசத்துணிந்த எவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்றச் செய்தியை இந்தச் சட்டத்தின்மூலம் சிபிஎம் சொல்கிறது” என்ற பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதேபோல் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கேரள அரசின் நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக கூறியிருந்தார். பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன், “அரசிற்கு எதிரான அரசியல் எதிர்ப்பை ஊமையாக்குவதற்கு இந்தச் சட்டத்தை இயற்றியுள்ளார் பினராயி விஜயன். கேரளாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை இருப்பதை இது காட்டுகிறது. புதிய பிரிவு கருத்துச் சுதந்திரத்திற்கான மக்களின் உரிமையை ஆக்கிரமிக்கும். புதிய ஊடகங்களை மட்டுமல்ல, மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களை, மவுனமாக்க முதல்வர் விரும்புகிறார்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

image

 காங்கிரஸ், பாஜகதான் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறது என்றால், இதைவிட ஆளும் சிபிஎம் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) கட்சியும் அதிருப்தியை பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், “அனைத்து ஆட்சேபனைகள் மற்றும் அச்சங்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று பினராயி விஜயன் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, எல்.டி.எஃப் அரசு பொதுமக்களின் கருத்தை பரிசீலிக்கும் என்றும், எங்கள் கட்சி அதற்கேற்ப பொருத்தமான மட்டத்தில் பிரச்னையை தீர்க்கும் என்றும் நம்புகிறோம். நாங்கள் இந்த விஷயத்தை தகுந்த மட்டத்தில் எடுத்துக்கொள்வோம்” எனக் கூறியிருந்தார்.

எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், “இங்கு தேவையில்லாத அச்சங்கள் எழுந்துள்ளது. அத்தகைய அச்சங்கள் ஆதாரமற்றது. இந்தத் திருத்தத்தின்கீழ் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்குமுன், சட்டத்தை எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து ஒரு நிலையான இயக்க நடைமுறை (எஸ்ஓபி) தயாரிக்கப்படும்.

பத்திரிகை சுதந்திரத்தின் பெயரில், தனிப்பட்ட சுதந்திரத்தை மீறமுடியாது. இதேபோல், தனிப்பட்ட சுதந்திரம் என்ற பெயரில், பத்திரிகை சுதந்திரத்தை மீறமுடியாது. இரண்டையும் பாதுகாக்கவேண்டிய கடமை அரசிற்கு உள்ளது. இந்தச் சூழலில்தான், சர்வதேச மட்டத்தில்கூட தனிப்பட்ட கவுரவத்தை மீறுவதற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கேரள போலீஸ் சட்டத் திருத்தம் என்பது அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஏற்ப மட்டுமே உள்ளது.

image

கொரோனாவிற்குபின் சமூக ஊடகங்களில் குற்றங்கள், போலிப் பரப்புரை மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் அதிகரித்துள்ளன. தற்போதுள்ள சட்ட விதிகள் அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமானதாக இல்லை. கேரள போலீஸ் சட்டத்தின் பிரிவு 118 (டி) மற்றும் ஐ.டி சட்டத்தின் பிரிவு 66-ஏ ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தாலும், அவற்றை மாற்றுவதற்கான வேறு எந்த சட்ட கட்டமைப்பையும் மையம் அறிமுகப்படுத்தவில்லை.

சமூக ஊடகங்கள் மூலம் செய்யப்படும் குற்றங்களை காவல்துறையால் திறம்பட கையாளமுடியாது. எனவே, தனிநபர்களைக் குறிவைத்து சமூக ஊடகங்களில் அதிகரித்து வரும் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்தவே இந்த முடிவு” என்றதுடன், பெண்கள் மற்றும் திருநங்கைகள் மீதான சமூக ஊடக தாக்குதல்களை குறிப்பாக சுட்டிக்காட்டிய பினராயி விஜயன், “இந்தத் திருத்தம் தொடர்பாக தெரிவிக்கப்படும் அனைத்து ஆக்கபூர்வமான கருத்துகளையும் பரிந்துரைகளையும் அரசாங்கம் நிச்சயமாக பரிசீலிக்கும்” என்று உறுதி அளித்திருந்தார்.

சட்ட நிபுணர்கள் சொல்வது என்ன?! 

பெண்களுக்கு எதிரான இணைய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதாக இந்தச் சட்டங்களை கேரள அரசு குறிப்பிட்டாலும், அது தொடர்பாக சட்டத்தில் எந்தக் குறிப்பையும் காணவில்லை என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். பொதுநல தொழில்நுட்ப வல்லுநரான அனிவர் அரவிந்த், இந்தச் சட்டம் தொடர்பாக ‘நியூஸ் மினிட்’ தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “இந்தச் சட்டம் கடுமையானது. பிரிவு 66 ஏ ஆன்லைனில் தகவல்தொடர்புகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த 118A எந்தவொரு தகவல்தொடர்பு முறைக்கும் பொருந்தும். இது பெண்களின் பாதுகாப்பு அல்லது அரசு முன்பு கூறிய எதையும் தொடர்புபடுத்தவில்லை. இது ஒரு பேச்சுச் சட்டம், எந்தவொரு கள வரம்பும் இல்லாமல் பேச்சைக் கட்டுப்படுத்துகிறது. இது அரசியலமைப்பின் 19வது பிரிவை ஒரு செயலில் கட்டுப்படுத்துகிறது மற்றும் பிரிவு 19 (2)ஆல் பாதுகாக்கப்படவில்லை.

இந்தச் சட்டத்தை வைத்து சிறிய கருத்து வேறுபாடுகளுக்கு எதிராக வழக்குத் தொடர விரும்பும் நபர்களாலும், ஏற்கெனவே அவதூறுச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துபவர்களாலும் மீண்டும் தவறாகப் பயன்படுத்த முடியும். இது அரசியல் விமர்சனம் அல்லது மதக் கருத்து உருவாக்கத்திற்கு மட்டுப்படுத்தப்படாது. எஃப்.ஐ.ஆர்களின் சீற்றத்திற்கு வழிவகுக்கும் இந்தச் சட்டம், சட்ட அமலாக்கத்தில் சவால்களையும் ஏற்படுத்தக்கூடும். சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ‘நபர்களின் வர்க்கம்’ தெய்வங்கள், எந்தவொரு குழு, அமைப்பு, பிராண்ட் அல்லது நிறுவனம் என்றுகூட பொருள் கொள்ளலாம்.

image

பிராண்டுகளுக்கு எதிரான எந்தவொரு விமர்சனத்திற்கும் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பேச்சு சட்டங்களை தவறாக பயன்படுத்துகின்றனர். இந்தப் புதிய சட்டம் ஒரு வணிக அச்சுறுத்தலாகவும், மக்கள் அச்சுறுத்தலாகவும் இருக்கும். ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் பராமரிப்பை யாராவது அழைத்தால், கருத்து வேறுபாடு ஏற்பட்டால், வாடிக்கையாளர் அவதூறு பிரச்னை இருப்பதாகக் கூறி நிறுவனத்தை எளிதாக நீதிமன்றத்திற்கு கொண்டுவர முடியும்.

இந்தச் சட்டத்தின் கவலை அளிக்கக்கூடிய மற்றொரு அம்சம் என்னவென்றால், அதாவது ஒரு நபரை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக விசாரணையைத் தொடங்குவதற்கும் காவல்துறைக்கு வாரண்ட் தேவையில்லை. அது யாருக்கும் எதிராக சுய-மோட்டு (மற்றொரு தரப்பினரிடமிருந்து முறையான தூண்டுதல் இல்லாமல் எடுக்கப்பட்ட அதிகாரத்தின் செயல்) வழக்குகளை பதிவு செய்ய காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கிறது” என்று அச்சம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தற்போது கோர்ட் படியேற உள்ளது. கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் அனூப் குமாரன், இந்தச் சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். “பிரிவு 118 (ஏ) மக்களை, குறிப்பாக பெண்களை சமூக ஊடக துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பதற்காக என்று அரசு கூறுகிறது. ஆனால், உண்மையில், புதிய சட்டத்தை அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக அதிகாரிகளும் அரசாங்கமும் பயன்படுத்துவார்கள்” எனக் கூறியிருந்தனர்.

இது ஒருபுறம் இருக்க, “ஊழல், தங்கக் கடத்தல், மாவோயிஸ்ட் மீதான அடக்குமுறை போன்ற கேரள அரசின் மீதான குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதற்காகவே, திசை திருப்பும் செயலாக இந்தச் சட்டத்தை பினராயி அரசு அமல்படுத்தியுள்ளது. இப்போது இந்தச் சட்டத்தை கொண்டு வர வேண்டியதன் அவசியம் என்ன? தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே இப்படி ஒரு செயலை செய்துள்ளது மார்க்சிஸ்ட் அரசு” என்று பிரபல மலையாள இயக்குனரும், பத்திரிகையாளருமான ஜாய் மேத்யூ உள்ளிட்ட சிலர் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்தப் பின்புலத்தில்தான், இந்த சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்தை நிறுத்தி வைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. “திருத்தம் அறிவிக்கப்பட்டபோது, பல தரப்பினரிடமிருந்து கருத்து வேறுபாடு எழுந்தது. எல்.டி.எஃப்-ஐ ஆதரிப்பவர்களும் ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்காக நிற்பவர்களும்கூட கவலை தெரிவித்தனர். இந்தச் சூழ்நிலைகளில்தான் திருத்தத்தை செயல்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

– மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.