“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேருவதற்கான 7.5% இட ஒதுக்கீட்டை உருவாக்கி, அமல்படுத்திய பெருமை ஆளும் அ.தி.மு.க அரசையே சாரும்!” என்று பெருமைகொள்கிறது தமிழக அரசு. ஆனால், ` `அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்ற குழுவின் பரிந்துரையைப் புறந்தள்ளிவிட்டு, 7.5 %-ஆகக் குறைத்துக் கொடுப்பது ஏன்?’ என்று எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

அண்மையில், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கொடுக்காத மத்திய அரசு, தற்போது மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் முதுநிலைப் படிப்புகளுக்கு நீட் தேர்வை விலக்கியிருக்கிறது. இது குறித்துக் கேள்வி எழுப்பாத தமிழக அரசு, `7.5% இட ஒதுக்கீடு அளித்துவிட்டோம்’ என்று பெருமைகொள்வது சரிதானா?’’ என்ற கேள்வியை நிருபர் ஒருவர் எழுப்ப, கடும் கோபம்கொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

மருத்துவம்

“நீட் தேர்வு வருவதற்கு முன்பு, மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா… இப்போது நாங்கள் கொண்டுவந்த 7.5% இட ஒதுக்கீட்டால், ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து படிக்கின்றனர். கிராமத்திலிருந்து வந்தவன் என்ற அடிப்படையில், உண்மையிலேயே இந்தச் சாதனை குறித்து நான் பெருமைகொள்கிறேன். என்ன கேள்வி கேட்கிறீர்கள்… ஏழை மாணவனுக்கு சப்போர்ட் பண்ணுங்க சார்” என்று உணர்ச்சிவயப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்தநிலையில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் தற்போதைய தி.மு.க எம்.எல்.ஏ-வுமான தங்கம் தென்னரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு குறித்துப் பேசும்போது,

“நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை தீர்மானத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. ஆக, இந்தத் தோல்வியை மறைப்பதற்காகவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை கொண்டுவர முடிவெடுத்தது அ.தி.மு.க அரசு. ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் இதற்கான குழுவையும் அமைத்தனர். இந்தக் குழு, தனது அறிக்கையில் ‘அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில், 10% உள் இட ஒதுக்கீடு வழங்கலாம்’ என்று குறிப்பிட்டது.

தங்கம் தென்னரசு

ஆனால், தமிழக அமைச்சரவையோ இந்த 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல், வெறும் 7.5 % இட ஒதுக்கீடாகக் குறைத்து அமல்படுத்தியிருக்கிறது. விடுபட்டுப்போன 2.5 % இட ஒதுக்கீட்டால், கிட்டத்தட்ட 100 மாணவர்களின் மருத்துவப் படிப்பு பறிபோய்விட்டது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதமாக இருக்கிறது என்று அரசே புள்ளிவிவரம் சொல்கிறது. `அப்படியென்றால், இந்த விகிதாசாரத்துக்கு ஏற்ப உள் இட ஒதுக்கீட்டைக் கொடுங்கள்’ என நாங்கள் ஏற்கெனவே கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்ட அ.தி.மு.க அரசு, அவர்கள் அமைத்திருந்த குழுவின் பரிந்துரையான 10 சதவிகிதத்தையும் கொடுக்காமல் 7.5%-ஆகக் குறைத்து அமல்படுத்தியிருக்கிறது.

நீதியரசர் தலைமையிலான குழு, 10% உள் இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என பரிந்துரைத்ததன் பின்னணியில் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அப்படியிருக்கும்போது, குழுவின் பரிந்துரையை நிராகரித்து, வெறும் 7.5 %-மாக உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதன் அடிப்படை நோக்கம் என்ன? இது பற்றி அ.தி.மு.க அரசு ஏன் வெளிப்படையாக பதில் சொல்ல மறுக்கிறது? இந்தக் கேள்விகளையெல்லாம் சட்டமன்றத்திலேயே நாங்கள் கேட்டுவிட்டோம். ஆனால், அ.தி.மு.க அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் சொல்லப்படவில்லை.

இந்த 7.5% இட ஒதுக்கீடும்கூட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்துவரும் மாணவர்களுக்குப் பொருந்தாது; ஏனெனில், ‘அவை தனியார் பள்ளிகள்’ என்று சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் ஏழை எளியவர்கள்தான். அதனால்தான் பாடத்திட்டத்தில் ஆரம்பித்து, மாணவர்களுக்கான அரசின் உதவித் திட்டங்கள்வரை அனைத்துமே அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுவருகிறது. இந்த உண்மைகூடத் தெரியாமல் இருக்கிறார் நமது முதல்வர்.

அரசுப் பள்ளி மாணவர்கள்

கலையரசன் கமிட்டி பரிந்துரைத்த 10% உள் இட ஒதுக்கீட்டில், 7.5% இட ஒதுக்கீட்டை மட்டுமே அமல்படுத்தியிருக்கும் தமிழக அரசு, மீதமுள்ள 2.5% இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கினால்கூட 100-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் பயன்பெற முடியும். அதையும் இந்த அரசு செய்யவில்லை” என்று ஆதங்கப்பட்டவர், கலந்தாய்வு நடைமுறையிலுள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டிப் பேசும்போது,

“இந்த 7.5% உள் இட ஒதுக்கீட்டின் மூலமாக 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள் என்று அரசு சொன்னது. ஆனால், இன்றைக்கு வெறும் 377 பேர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. ஆக, இந்த 7.5% இட ஒதுக்கீடும் முழுமையாக கொடுக்கப்படவில்லை. அடுத்து உள் இட ஒதுக்கீட்டு வாய்ப்பு என்பது அரசு மருத்துவக் கல்லூரிகளில் முழுமையாகக் கொடுக்கப்படவில்லை என்பது இன்னொரு பெருத்த ஏமாற்றம்” என்றார் கவலையோடு.

Also Read: திண்டுக்கல் சிறுமி பாலியல் வழக்கு: `டி.என்.ஏ மாதிரி ஒத்துப்போகிறது’ – தமிழக அரசு மேல்முறையீடு

இந்தநிலையில், ஆளும் அ.தி.மு.க அரசு மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளருமான வைகைச் செல்வனிடம் பேசினோம்.

“10% உள் இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்பது குழுவின் பரிந்துரைதான். அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அதேசமயம் குழுவின் பரிந்துரையைத் தாண்டி அதிகமாகவும் செய்துவிடக் கூடாது. அந்த வகையில், தமிழக அமைச்சரவை கூடி 7.5% உள் இட ஒதுக்கீடாகக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்து செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இதுதான் நியாயமான அளவு என்பதை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வைகைச் செல்வன்

அரசுப் பள்ளி மாணவர்களில் ஆறு அல்லது ஏழு பேர் மட்டுமே மருத்துவப் படிப்புகளுக்குத் தகுதி பெற்றுவந்த நிலையில், இன்றைக்குத் தமிழக அரசின் முயற்சியால் 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அரசியல்ரீதியாக அ.தி.மு.க அரசின் இந்தச் சாதனையைப் பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க., காழ்ப்புணர்ச்சியோடு தமிழக அரசை விமர்சித்துவருகிறது. இந்த 7.5 % இட ஒதுக்கீடு என்பது அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கான கோட்டா மட்டுமே. இதில் அனைத்து மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயேதான் இடம் கிடைக்கும் என்பது இல்லை. மதிப்பெண்களின் அடிப்படையில்தான் அரசு மருத்துவக் கல்லூரி, சுயநிதிக் கல்லூரி என மாறி மாறி இடம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

Also Read: `ஒரே ஒரு பொய்யால் ஆறு நாள்கள் லாக்டெளன்!’ – தெற்கு ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன?

அரசு உதவி பெறும் பள்ளிகள் அரசின் நிதியளிப்பை பெற்றுவந்தாலும்கூட, தனியார்களால் நிர்வகிக்கப்பட்டுவரும் நிர்வாகம். இவற்றிலேயே சில பள்ளி நிறுவனங்கள் 10-ம் வகுப்பு வரையில் மட்டும் அரசு உதவி பெறும் பள்ளியாகவும், 11, 12 -ம் வகுப்புகள் மட்டும் சுயநிதியைக்கொண்டு நடத்தப்படும் பள்ளிகளாகவும் இருக்கின்றன. இன்னும் சில பள்ளிகளில் ஒரே வகுப்பில் சில குறிப்பிட்ட பிரிவுகள் மட்டும் அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தின் கீழும், மற்றவை சுயநிதி நிர்வாகத்தின் அடிப்படையிலும் செயல்பட்டுவருகின்றன.

எடப்பாடி பழனிசாமி – மு.க.ஸ்டாலின்

இப்படி உள்ளீடாக நிறைய வேறுபாடுகள் இருப்பது தி.மு.க-வினருக்கும் தெரியும். ஆனாலும், வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இது போன்ற விமர்சனங்களை முன்வைத்துவருகிறார்கள். இது வரலாற்றில் அவர்களுக்குத் தீராப் பழியை ஏற்படுத்தும்” என்றார் ஆவேசமாக. இதற்கிடையே, ‘7.5 % இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தி.மு.க ஏற்கும்!’ என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், அரசே செலுத்தும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

தமிழக அரசியலில், 2021 தேர்தல் ஜுரம் தகிக்க ஆரம்பித்துவிட்டதன் அறிகுறி இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.