ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோரை எதிர்த்து, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் பேசி வருகின்றனர். இதன் பின்னணி அரசியலை பார்ப்போம். 

image

இந்தியாவின் பிரபல தேர்தல் வித்தகராக கருதப்படும் பிரசாந்த் கிஷோர், தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுகவுடன் கைகோத்துள்ளார். அதேபோல் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக வேலைப்பார்த்து வருகிறார். இவரின் ஆலோசனைபடியே மம்தா தற்போது செயல்பட துவங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

மம்தாவின் மருமகனும், மக்களவை எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜியுடன் நெருக்கமாக இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக வேலைபார்க்கத் தொடங்கியுள்ளார் பிரசாந்த். கட்சியின் மேல்மட்டத்தில் பிரசாந்தின் செல்வாக்கு சமீபத்தில் அதிகரித்து காணப்படுகிறது. அவரின் ஆலோசனைப்படியே முடிவுகளும் எடுக்கப்படுகின்றன எனக் கூறப்படுகிறது. 

image

ஆனால், பிரசாந்த் கிஷோரின் செல்வாக்கு மேல்மட்ட அளவிலேயே இருக்கிறது. கட்சியின் அடிமட்ட தொண்டர்கள், எம்எல்ஏக்கள் மத்தியில் அவருக்கு எதிரான மனநிலை இருந்து வருகிறது. இதனை சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் நேரடியாக காண முடிந்ததுதான் கொல்கத்தாவின் இப்போதைய ஹாட் டாபிக்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ நியாமத் ஷேக், “நாங்கள் பிரசாந்த் கிஷோரிடமிருந்து அரசியல் கற்றுக்கொள்ள வேண்டுமா? மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், இதற்கு பிரசாந்த் கிஷோர் மட்டுமே பொறுப்பாவார்” என்று அதிரடியாக பேசினார். 

image

இவர் மட்டுமில்லை, கூச் பெஹார் எம்.எல்.ஏ மிஹிர் கோஸ்வாமியும் தனது கோபத்தை வெளிப்படையாகக் காட்டியுள்ளார். கோஸ்வாமி சமூக ஊடகங்களில், “திரிணாமுல் காங்கிரஸ் உண்மையில் மம்தா பானர்ஜியின் கட்சியா? இந்தக் கட்சி ஒரு காண்ட்ராக்டரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேற்கு வங்க தேர்தலுக்கு முன்னர், நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் மம்தா பானர்ஜிக்கு ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்” என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். இப்படி கூறிய இதே கோஸ்வாமி பிரசாந்த் கிஷோர் மீதான கோபத்தால் தனது கட்சி பொறுப்புகள் அனைத்திலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டார்.

 

image

“அனைத்து மோசமான சூழ்நிலைகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்ட போதிலும் நான் 1989 முதல் கட்சியை விட்டு வெளியேறவில்லை. அனைத்தும் தீதி (மம்தா) காரணமாகதான் இப்படி செய்தேன். ஆனால், இப்போது கட்சி மாறிவிட்டது. வாழ வேண்டுமா அல்லது அல்லது கட்சியை விட்டு வெளியேறுகிறீர்களா என்ற போதுதான் இந்த முடிவை எடுத்தேன்” என பிரசாந்த் உடனான மோதலால் தனக்கு நேர்ந்ததை கூறி வேதனைப் பட்டார் கோஸ்வாமி. இவருக்கு திரிணாமுலின் மூத்த மற்றும் வலுவான தலைவர்களான சுபேந்து ஆதிகாரி, எம்.எல்.ஏ., ஜெகதீஷ் சந்திர பர்மா பசுனியா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ நியாமத் ஷேக் சமீபத்தில் நடந்த கூட்டத்தில், பிரசாந்தை நேரடியாகவே தாக்கினார். “எல்லா பிரச்னைகளுக்கும் பிரசாந்த் கிஷோர்தான் காரணம். முஷிதாபாத்தில் கட்சியை பலப்படுத்தியவர் சுபேந்து ஆதிகாரி. ஆனால், இப்போது அவருடன் பேசும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

image

என்ன காரணம்?!
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 42 இடங்களில் 18 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. மேற்கு வங்கத்தில் பாஜகவின் எழுச்சி, மம்தாவை கலக்கமடைய வைத்தது. இப்படியே சென்றால் விபரீதம் என்பதை உணர்ந்த மம்தா, பிரசாந்த் கிஷோர் உதவியை நாடினார். அவரிடம் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை ஒப்படைத்தார். அதன்படி தேர்தலுகாக பல யுக்திகளை செயல்படுத்த பிரசாந்த் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கட்சி பொறுப்புக்கு, பழைய தலைவர்கள் மாற்றப்பட்டு புதிய முகங்களுக்கு பதவி கொடுக்கப்பட்டு வருகிறது.

 

image

இதில், சில எம்.எல்.ஏ.-க்களின் கட்சிப் பதவிகளும் காலியாகின. இவை அனைத்துக்கும் காரணம், பிரசாந்த்தின் ஆலோசனையே என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தற்போது அவர்மீது கோபம் கொண்டுள்ளனர். இதன் வெளிப்பாடாகவே, பிரசாந்தை பொதுவெளியில் நடைபெறும் கூட்டங்களில் தற்போது நேரடியாக தாக்கத் தொடங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஆனால், இந்த மோதல்கள் திரிணாமுல் காங்கிரஸ{க்கு வரும் தேர்தலில் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.