விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதுகுறித்த ஆய்வுக்கூட்டம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பின்பு, அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், “விவசாயிகளின் கனவுத் திட்டமான காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முதல்கட்டமாக ரூ.7677 கோடி ஒதுக்கப்பட்டு, திட்டமதிப்பீடு செய்யப்பட்டு தமிழக முதல்வர் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்

தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்காக, 50 சதவிகிதத்துக்கும் அதிகமான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை அரசிடம் ஒப்படைத்து வருகின்றனர். கையகப்படுத்தும் நிலத்துக்கு அதிக தொகையை வழங்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம். கரூரிலிருந்து புதுக்கோட்டைக் கவி நாடு கண்மாய் வரையிலும் 52 கிலோமீட்டருக்கு கால்வாய் அமைக்கப்பட உள்ளது. தற்போது அதற்கு முதற்கட்டமாக ரூ.331 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட உள்ளது. டிசம்பர் மாதத்தில் டெண்டர் பணிகள் முடிவடைந்து ஜனவரி மாதம் இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. அதுவும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் நடைபெறும்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி 18-ம் தேதி மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும். அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவர் ஜீவித்குமார் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி கலந்தாய்வில் பங்கேற்காமல், பொதுப்பிரிவில் பங்கேற்பதாக எடுத்துள்ள முடிவு மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதன் மூலம் மற்றொரு அரசுப் பள்ளி மாணவர் மருத்துவம் படிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது. முதல்வர் கொண்டு வந்துள்ள இட ஒதுக்கீடுதான் இதுபோன்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பிற நாடுகளிலும், பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர்

பாதிப்பு எண்ணிக்கையை 2 சதவீதமாகக் குறைத்துள்ளோம். எண்ணிக்கை குறைந்திருந்தாலும், தினசரி 80 ஆயிரம் வரையிலான ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட் எடுத்து வருகிறோம். கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களில் 2.8 சதவிகிதம் பேருக்குத்தான் கொரோனா பாதிப்பு உள்ளது. உலக நாடுகளுக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. தற்போது கொரோனா கட்டுக்குள் இருந்தாலும், அடுத்த இருமாதங்களுக்குப் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியில் செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். பண்டிகை காலங்கள் வருகிறது. ஆன்மிகப் பயணங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். குளிர்காலம் வேறு தொடங்கியுள்ள நிலையில் மிகுந்த எச்சரிக்கையாகப் பொதுமக்கள் இருக்க வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.