பாஜக மீது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதிருப்தியில் இருப்பதாகவும், முதல்வர் பதவியை அவர் ஏற்க தயக்கம் காட்டி வருவதாகவும் தெரிகிறது.

image

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்தக் கூட்டணியின் முதல்வர் நிதிஷ் குமார் என்பதை பாஜக ஏற்கெனவே தெளிவுபடுத்தி இருக்கிறது. பாஜக டெல்லி தலைமையும் இதற்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டது. இதனால், பீகாரில் மீண்டும் முதல்வராக பதவியேற்க இருக்கிறார் நிதிஷ்குமார். 

ஆனால், இது நிதிஷுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. ‘அவர் சந்தோஷமாக இல்லை’ என்று குமுறுகின்றனர் ஐக்கிய ஜனதா தளம் தொண்டர்கள். அதற்கு காரணமாக அவர்கள் கைநீட்டுவது பாஜக – லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் இடையேயான நட்புதான்.

அக்டோபர் 4 ம் தேதி எல்.ஜே.பி தலைவர் சிராக் பாஸ்வான் ஜே.டி.யுடனான உறவுகளை முறித்துக்கொண்டு கூட்டணியில் இருந்து வெளியேறினார். அப்போது இருந்தே நிதிஷ் மீது தனது ‘அட்டாக்’குகளைத் தொடர்ந்து வருகிறார் சிராக் பாஸ்வான். அதுமட்டுமில்லாமல், நிதிஷ் குமாரின் கட்சிக்கு எதிராக வேட்பாளர்களை மற்ற காட்சிகளை காட்டிலும் முதல் ஆளாக களமிறக்கினார். மேலும், தேர்தல் கூட்டங்களுக்குகாக செல்லும் இடங்களில் எல்லாம் நிதிஷையும் அவரின் ஜே.டி.யு கட்சியையும் பகிரங்கமாக விமர்சித்தார். அதேநேரத்தில், ஜே.டி.யு உடன் கூட்டணி வைத்திருந்த பாஜகவையும், மோடி போன்ற அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்களையும் சிராக் ஒருவார்த்தை கூட பேசவில்லை.

image

இதுதான் பிரச்சனையே என்கிறார்கள் ஜே.டி.யு கட்சியினர். “லாலு பிரசாத்திடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி, பீகாரில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி, இத்தனை ஆண்டுகள் நல்லாட்சி கொடுத்து மாநிலத்தை சிறப்பான இடத்துக்கு அழைத்துச் சென்ற பெருமை நிதிஷுக்கு உண்டு. அத்தகைய தலைவரை, எங்களுடன் கூட்டணி வைத்திருந்த எல்.ஜே.பி-யின் சிராக் பாஸ்வான் பகிரங்கமாக விமர்சித்தபோது, அதுகுறித்து எங்கள் கூட்டாளியான பாஜக அவரை எதுவும் செய்யவில்லை. 

image

அவர்கள் விமர்சிக்கவிட்டாலும் பரவாயில்லை. எங்களையும் பாஜக தடுத்துவிட்டது. சில பாஜக தலைவர்கள் தேர்தலின்போது சிராக் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று தனிப்பட்ட முறையில் எங்களை வற்புறுத்தினர். பாஜகவுக்கு பஸ்வான் வாக்குகள் தேவை என்று எங்களுக்கு தடை போட்டனர். அதனால், எங்களால் சரியான பதிலடி கொடுக்க முடியவில்லை. இது பரவாயில்லை. தேர்தல் பிரச்சாரத்தின்போதுதான் விமர்சிக்கவில்லை. தேர்தல் முடிந்தபிறகு சிராக், எங்கள் கட்சித் தொடர்பாக பேசி வருகிறார். அதைகூட பாஜக தட்டிக்கேட்கவில்லை. என்.டி.ஏ-க்கு ஆதரவான வாக்குகளைப் பிரிக்க சிராக் எங்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தினார். இது தேஜஸ்வி யாதவ் தலைமையிலான பெரும் கூட்டணிக்கு பல தொகுதிகளை வென்றெடுக்க உதவியது. அதேநேரத்தில், எங்கள் கட்சி பல தொகுதிகளை இழந்தது” என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

image

“முதல்வர் பதவியை நிதிஷுக்கு பாஜக, கொடுத்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. சிராக் பஸ்வான் விவகாரத்தில் பாஜக மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் நிதிஷ். பிரச்சாரத்தின்போது சிராக்கிற்கு எதிராக ஒரு வார்த்தை கூட சொல்ல பாஜக கட்சியின் மத்திய தலைமை மறுத்துவிட்டது. இது வாக்காளர்களின் மனதில் ஏராளமான குழப்பங்களை உருவாக்கியது. மேலும் பாஜகவின் பாரம்பரிய வாக்குகள் ஜே.டி.யு வேட்பாளர்களுக்கு விழவில்லை. இதனால், ஜே.டி.யு கூடுதல் தொகுதிகளை வெல்ல முடியாமல் போனது. 

இதன் காரணமாகவே, தேர்தல் முடிவுகள் வந்த பின் மணிக்கணக்கில் அமைதி காத்து வந்தார் நிதிஷ். முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட 22 மணி நேரத்திற்குப் பிறகே பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டார். நிதிஷ் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார், ஆனால் அது அவரது மனதில் பாஜக குறித்த வருத்தம் இருக்கிறது” என்று பீகார் நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

image

பாஜகவுக்கு வேறு வழியில்லையா?!

இதற்கிடையே, 43 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே வைத்திருக்கும் நிதிஷை முதல்வராக அறிவித்ததில் பாஜக பெருந்தன்மையுடன் செயல்படவில்லை. வேறு வழியில்லாமல்தான் நிதிஷை முதல்வராக ஏற்றுக்கொண்டுள்ளனர். பாஜக அதிகபட்சமாக 74 இடங்களை வென்றது, ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) மற்றும் முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) ஆகியவற்றுடன் தலா நான்கு இடங்களை மட்டுமே வென்றுள்ளன. ஒருவேளை முதல்வர் பதவியை கேட்க போய், நிதிஷ் அதற்கு சம்மதிக்க மறுத்தால் பெங்களூருவில் காங்கிரஸ் – மஜத, மகாராஷ்டிராவில் காங்கிரஸ் – சிவசேனா – தேசியவாத ஆட்சியமைத்தது போல் இங்கும் ஆகிவிட கூடாது என்பதற்காகவே முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்துள்ளனர். 

image

முதல்வர் பதவியை கொடுத்துவிட்டு அதிக இலாகாக்களை கைப்பற்றிக்கொண்டு ஆட்சியை பின்னால் இருந்து இயக்குவதற்கான திட்டத்தில் பாஜக இருக்கிறது என்றும் வலுவான பேச்சு இருக்கிறது. இந்த விஷயம் நிதிஷ்க்கும் தெரியும். அதனால்தான் முதல்வர் பதவியை ஏற்க முதலில் சுணக்கம் காட்டினார் நிதிஷ் என்றும் கூறியுள்ளன. 

இதனை உறுதிப்படுத்தும் வகையில், “பாஜக அதிக எண்ணிக்கையில் இருந்தபோதிலும், அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு நிதிஷை சார்ந்துள்ளது. நிதிஷுக்கு வேறு வழிகள் இருக்கலாம், பாஜகவுக்கு இல்லை. இதுதான் பீகாரின் நிலவரம்” என்று ஜே.டி.யு மூத்த தலைவர் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.