புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, பலகாரத்தை சுட்டு பலருக்கும் கொடுத்து பந்தாவாக கொண்டாடப்படுவது தீபாவளி பண்டிகை. ஆனால் இன்று குடும்பத்தில் தம்பதிகள் இருவரும் வேலைக்குச் செல்வதால் பலகாரம் சுடுவதற்கெல்லாம் நேரம் இல்லாமல் போய்விட்டது. இதனால் மக்கள் ரெடிமேட் இனிப்பு வகைகளையே விரும்பி வாங்கி வருகின்றனர். அந்த வகையில் சுவையாகவும் விலை மலிவாகவும் உடலுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாத செட்டிநாட்டு பலகாரங்களை இங்கு பரிமாறலாம்.

 

image

சமையல் கலைக்கு புகழ்பெற்ற செட்டிநாடு பலகாரங்கள் உலக அளவில் புகழ் பெற்றவை. வருடம் முழுவதும் தயாரிக்கப்படும் இவ்வகை செட்டிநாடு பலகாரங்கள் தீபாவளி பண்டிகை காலங்களிலும் அனைவராலும் விரும்பி சுவைக்கப்படுகிறது. இந்த செட்டிநாடு பலகாரங்களின் சிறப்பை அறிய சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள கோட்டையூர் சென்றோம்.

பலகாரம் செய்யும் வீட்டை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. முறுக்கு பொறிக்கும் வாசம் நம்மை தானாகவே இழுத்துச் சென்றது. வேலையில் மும்முரமாக இருந்த மீனா பெரியகருப்பணிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினோம். இருபது வருசத்துக்கு முன்னாடி எங்க அம்மாவும் அப்பாவும் சேர்ந்து இந்த தொழில சின்னதா ஆரம்பிச்சாங்க. ஆனால் இன்னைக்கு உலகம் முழுவதும் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் இருக்காங்க. 

image

அதுக்கு முக்கிய காரணம் சுத்தமாவும் சுவையாவும் பலகாரங்களை தயாரித்து கொடுப்பதுதான். அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு தரமில்லா பொருட்களை வாங்கி பலகாரம் செய்வதில்லை. முதல்தர மளிகைப் பொருட்கள், தரமான எண்ணெய் சுத்தமான தண்ணி இதை பயன்படுத்தி பதார்தங்கள் செய்றதால ரொம்ப நாளைக்கு கெட்டுப் போகாம அப்படியே இருக்கும்.

திருவிழா, பண்டிகை, கல்யாணம், காதுகுத்து போன்ற விழாக் காலங்கள்ல வியாபாரம் அதிகமா இருக்கும். மற்ற நாட்கள்ல எப்பவும் போல இருக்கும் என்றார். ஒரு தடவை செட்டிநாடு பலகாரத்தை வாங்கிட்டுப் போய் சாப்பிட்டா வேறு எந்த பலகாரத்தையும் வாங்கி சாப்பிட விரும்ப மாட்டார்கள். 

image
இங்க வருஷம் முழுவதும் மணக்கோலம், அதிரம், உருண்டை, சீடை, சீப்புசீடை, மாவு உருண்டை, தேன்குழல் மிக்சர் முறுக்கு ஆகிய பலகாரங்களை தயார் செய்வோம். தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள்ல லட்டு, ஜிலேபி, மைசூர்பாகு, பாதுஷா போன்ற ஸ்வீட்களையும் மற்றும் வாடிக்கையாளர்கள் கேட்கக் கூடிய இனிப்பு காரங்களையும் செய்து கொடுப்போம்.

செட்டிநாடு பலகாரங்களில் தேன்குழல் சீடை, முறுக்கு ஆகியவை தேங்காய் எண்ணெய்யிலும் அதிரசம் ரீபைண்ட் ஆயிலிலும் உருண்டை வகைகள் தனி நெய்யிலும் தயாரிக்கப்படுகிறது. இதனால பலகாரங்கள் ஒருவருடம் ஆனால் கூட கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். 

image

இங்கு தயாரிக்கப்படும் செட்டிநாடு பலகாரங்கள் சென்னை, மதுரை, திருச்சி போன்ற தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்புறோம். அதேபோல பெங்களூர் கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்புறோம். சிங்கப்பூர் மலேசியா மற்றும் வளைகுடா நாடுகள் என தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் நாங்கள் தயாரிக்கும் பலகாரங்கள் அவர்களது இல்ல விழாக்களை சிறப்படையச் செய்கிறது என்றார்.

பாரம்பரிய பக்குவத்துடன் சுத்தமாகவும் சுவையாகவும் குறைந்த விலையில் கிடைக்கும் தரமான செட்டிநாடு பலகாரங்களுடன் இந்த தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவோம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.