இந்தியப் பெண் ஐ.எஃப்.எஸ் அதிகாரியான விதிஷா மைத்ரா ஐ.நாவின் நிர்வாக மற்றும் பட்ஜெட் கேள்விகளுக்கான ஆலோசனைக் குழு உறுப்பினராக தேர்வாகியுள்ளார். அவரைப் பற்றிய ஒரு சிறிய பார்வை.

ஐ.நா சபையின் நிர்வாக மற்றும் பட்ஜெட் கேள்விகளுக்கான ஆலோசனைக் குழுவுக்காக ஆசிய – பசிபிக் நாடுகள் சார்பாக இரண்டு பேர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியப் பெண் ஐ.எஃப்.எஸ் அதிகாரி விதிஷா மைத்ரா அதிக வாக்குகளை பெற்று தேர்வாகி இருக்கிறார். 

ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராவதற்கு போராடி கொண்டிருக்கும் இந்தியாவுக்கு இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. காரணம், இந்தக் குழுவுக்கு விதிஷாவை தேர்ந்தெடுக்க ஐ.நா சபையின் 193 உறுப்பு நாடுகளும் வாக்களிக்க வேண்டும்.

அதேநேரத்தில், வேட்பாளர்களுக்கு சாதாரணமாக மற்ற நாடுகள் வாக்களித்து விடாது. தகுதி, அனுபவம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு மற்ற நாடுகள் தங்கள் வாக்குகளை செலுத்தும். ஆம், விதிஷா மைத்ரா உலக நாடுகளின் கவனங்களை ஈர்த்த முக்கியப் பெண் அதிகாரி. 

இதற்கு முன் நடந்த ஐ.நா கூட்டங்களில் தனது பேச்சினால் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தவர். அதற்குச் சான்றாக இம்ரான் கானை தனது பேச்சால் விதிஷா ஒருமுறை தவிடுபொடியாக்கிய சம்பவத்தை இங்கே பார்க்கலாம். 

பாகிஸ்தானைத் திணறிடித்த தருணம்!

ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு நாட்டின் தலைவர்கள் கலந்துகொண்டாலும் பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருவரின் பேச்சுதான் ஹைலைட்டாக இருந்தது. அதிலும் இம்ரான் கான் தனது பேச்சில் இந்தியா மீது கடும் விமர்சனத்தைக் கொட்டினார். அன்று இம்ரானுக்கு ஒதுக்கப்பட்டது 20 நிமிடங்கள். ஆனால், அவர் பேசியது என்னவோ 50 நிமிடங்கள். இந்த 50 நிமிடங்களில் 20 நிமிடம் காஷ்மீர் குறித்து மட்டுமே பேசினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தனது பேச்சில் இந்தியா மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

இம்ரானின் இந்த 50 நிமிட உரையை ‘Right of Reply’ எனப்படும் 5 நிமிட `பதிலளிக்கும் உரிமை’ மூலம் ஒன்றும் இல்லாமல் ஆக்கினார் விதிஷா மைத்ரா. அதில், “ஐ.நா பட்டியலிட்டுள்ள 130 தீவிரவாதிகள் மற்றும் 25 தீவிரவாத குழுக்கள் பாகிஸ்தானில் இருக்கின்றன. இதனை இங்கு வெறுப்பைக் கக்கிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் உறுதிசெய்வாரா அல்லது ஒசாமா பின்லேடனை பாகிஸ்தான் பாதுகாக்கவில்லை என அமெரிக்காவிடம் இம்ரான் தெரிவிப்பாரா? இம்ரான் கான் நியாஜி தனது வரலாறு குறித்து புரிதலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். 

காஷ்மீர் மக்கள் சார்பில் பேசுவதாக சொன்ன இம்ரான் கான், ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை கொண்ட இந்தியாவின் உண்மையான பகுதிதான் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் ஐ.நா-வால் தடை செய்யப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலில் இருக்கும் தீவிரவாதிக்கு பென்ஷன் அளிக்கும் ஒரே நாடாக பாகிஸ்தான்” என அடுத்தடுத்த கேள்விகளால் பாகிஸ்தானை கலங்க வைத்தார் விதிஷா. 

இதற்கு அடுத்து ‘Right of Reply’ உரையில் விதிஷாவின் கேள்விக்கு பாகிஸ்தான் திணறியது வேறு கதை. இப்படி சரியான குறிப்புகள் எடுத்து தெளிவான பேச்சு.. கடுமையான தொனி என அடுத்தடுத்த கேள்விக்கணைகளை தொடுத்து அப்போதே ஐ.நா மன்றத்தில் கவனம் ஈர்த்தார் விதிஷா.

யார் இந்த விதிஷா மைத்ரா?!

2008-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் 39-வது ரேங்க் எடுத்து 2009 பேட்ச் ஐ.எஃப்.எஸ் அதிகாரியானார் விதிஷா. அப்போதே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பயிற்சியில் ‘சிறந்த பயிற்சி அதிகாரி’க்கான தங்கப்பதக்கம் வென்றார். ஐ.நா.வின் `நிரந்தர உறுப்பினர்’ பெறும் இந்தியாவின் ஒரு ஜூனியர் அதிகாரியாக உள்ளே சென்ற விதிஷா, தனது திறமையான செயல்பாட்டால் நாளுக்குள் நாள் மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார். 

தற்போது வெளியுறவு அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் விதிஷா, ஐ.நா ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகி இருப்பதன் மூலம் இன்னும் ஐ.நா அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்வார் என்று நம்பலாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.