இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. கோலாகலமான கொண்டாட்டத்தின் போது நம் வீடும் அழகாகவும் சுத்தமாகவும் இருப்பதும் முக்கியம் தானே.. பண்டிகையைக் கொண்டாட இருக்கும் ஆர்வம், வீட்டை சுத்தப்படுத்துவதில் பலருக்கும் இருக்காது.

 வீடு சுத்தமாக இருந்தால்தான் தெய்வீகம் குடியேறும் என்ற ஐதீகத்தைக் கொண்டவர்களுக்கு வீட்டை சுத்தப்படுத்தும் சில எளிய வழிமுறைகள் உதவியாக இருக்கும்.

image

தேவையில்லாததை அப்புறப்படுத்துங்கள்!

சிலருக்கு வீட்டில் எவ்வளவுதான் புதிய புதிய பொருட்களை வாங்கினாலும் பழையதை தூக்கிப்போட மனம் வராது. இதனால் எவ்வளவுதான் சுத்தப்படுத்தினாலும், வீடு சுத்தமாக இருப்பதைப் போன்று தெரியாது. எனவே நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாதப் பொருட்களை எறிந்துவிடுவது நல்லது. இது வீட்டில் நல்ல காலியிடத்தை உருவாக்குவதோடு, வீடு பெரியதாகவும், சுத்தமாகவும் இருப்பதை உணரவைக்கும்.

image

பிடிக்காத இடத்தை முதலில் சுத்தம் செய்யுங்கள்

ஒரு சிலருக்கு வீட்டின் குறிப்பிட்ட இடங்களை மட்டுமே மீண்டும் மீண்டும் சுத்தம் செய்ய பிடிக்கும். அதனால் மற்ற இடங்களில் குப்பையும் அழுக்கும் சேர்ந்துவிடும். எனவே சில வாரங்கள் ஆனாலும் சுத்தமாகவே இருக்கும் இடங்களை முதலில் சுத்தம் செய்துவிடுவது நல்லது.
எனவே கப் போர்டு மற்றும் கட்டில் ஸ்டோரேஜ் ஆகியவற்றிலிருந்து தொடங்கலாம்.

துணிகளை மடித்து அடுக்குதல், இடம் மாற்றுதல், ஷெல்ஃபில் பேப்பர் அல்லது துணிகளை மாற்றுதல் போன்ற வேலைகளை செய்யலாம். பெரும்பாலானவர்களிடம் பழைய துணிகள் கண்டிப்பாக இருக்கும். அவற்றை எடுத்து இல்லாதவர்களுக்கும், என்.ஜி.ஓக்களுக்கும் கொடுத்துவிடலாம்.

கட்டில் ஸ்டோரேஜில் போர்வை, தலையணை போன்ற கனமான பொருட்களை அடுக்கி வைத்திருப்பார்கள். அவைகளை எடுத்து சுத்தப்படுத்தி வெயிலில் உலர்த்தி மீண்டும் அடுக்கி வைக்கவேண்டும்.

image

கிச்சன் க்ளீனிங்

சமையலறையை சுத்தப்படுத்துவது என்பது ஒருநாளில் முடிந்துவிடக்கூடிய வேலை அல்ல. பீங்கான் பாத்திரங்கள், மண்பாண்டங்கள், அடுப்பு மற்றும் தரை ஆகிய அனைத்தையும் ஒரே நாளில் சுத்தப்படுத்த முடியாது. எனவே வேலையை திட்டமிட்டு செய்தால் எளிதாக முடிந்துவிடும்.

கிச்சன் சாமான்கள், பாத்திரங்களைத் தொடர்ந்து ரேக்குகள் மற்றும் பெட்டிகளை சுத்தப்படுத்த வேண்டும். சுவர் மற்றும் டைல்ஸை சோப்பு அல்லது டிடெர்ஜெண்ட் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

image

வீட்டு உபயோகப் பொருட்கள்

வீட்டிலுள்ள பெரிய பொருட்களை சுத்தப்படுத்த அதிக நேரம் தேவைப்படும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் சரியான முறையில் சுத்தம் செய்தால் அந்த வேலையும் எளிதுதான். டிவி, மியூசிக் ப்ளேயர், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றை சுத்தமான உலர்ந்த துணியால் முதலில் துடைத்துவிட வேண்டும். பிறகு உங்களுக்குப் பிடித்த க்ளென்சர் கொண்டு தேய்த்து, கறைகளை நீக்கினால் எளிதாக சுத்தப்படுத்தி விடலாம்.

image

திரைச்சீலைகள் மற்றும் உறைகள்

வீட்டு உபயோகப் பொருட்களை சுத்தப்படுத்திய பிறகு திரைச்சீலைகள், பெட்ஷீட், தலையணை உறை மற்றும் சோஃபா உறைகளை சுத்தப்படுத்த வேண்டும். இங்கு கருத்தில் கொள்ளவேண்டிய ஒரே விஷயம், அனைத்தையும் ஒன்றாக சுத்தம் செய்யக்கூடாது என்பதுதான்.
ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நாளில் சுத்தம் செய்தால் எளிதாக இருக்கும். அனைத்தையும் சுத்தம் செய்தபிறகு கலர் கலர் லைட்டுகளால் அலங்கரித்தால் வீடு அழகாக தயாராகி விடும்.

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.