கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 60 வித்தியாசத்தில் தோல்வியை தழுவி மூன்றாவது அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மிகவும் முக்கியத்தும் வாய்ந்த போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது. துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

image

இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் நிதிஷ் ராணா தான் சந்தித்த முதல் பந்திலே கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஜோப்ரா ஆர்ச்சர் வழக்கம் போல் தன்னுடைய தொடக்க ஸ்பெல்லிலேயே விக்கெட்டை எடுத்தார். முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்ந்தாலும் சுப்மன் கில்லும், ராகுல் திரிபாதியும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

image

சுப்மன் கில் 36 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சுனில் நரேன் ரன் ஏதும் எடுக்காமல் இரண்டாவது பந்திலேயே நடையைக் கட்டினார். இவர்களை தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த திரிபாதியும் 39(34) ரன்னில் ஆட்டமிழந்தார்.

image

தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆகி மீண்டும் சொதப்பினார். கேப்டன் மோர்கன் அதிரடி காட்ட, அவருக்கு சிறிது நேரம் ஒத்துழைப்பு அளித்த ரஸல் 11 பந்துகளில் 3 சிக்ஸர் உட்பட 25 ரன்கள் விளாசி அவுட் ஆனார். விக்கெட்கள் வீழ்ந்தாலும் மோர்கன் தன்னுடைய அதிரடியை தொடர்ந்தார். பேட் கம்மின்ஸ் 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார்.

image

இறுதியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. மோர்கன் 35 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில், 6 சிக்ஸர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும்.

image

ராஜஸ்தான் அணி சார்பில் திவாட்டியா 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட் சாய்த்தார். தியாகி இரண்டு விக்கெட் எடுத்தார். ஜோப்ரா ஆர்ச்சர் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தாலும் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

image

இதனையடுத்து, 192 ரன் என்று வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது. பேட் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 19 ரன்கள் விட்டுக் கொடுத்தாலும் கடைசி பந்தில் உத்தப்பா விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பிறகு விக்கெட் சரிவை ராஜஸ்தான் அணியால் தடுக்க முடியவில்லை. பேட் கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஸ்டோக்ஸ் 18 ரன்னில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஸ்டீவ் ஸ்மித் க்ளீன் போல்ட் ஆகி நடையைக் கட்டினார்.

image

அடுத்த ஓவரில் ஷிவம் மாவி தன்னுடைய பங்கிற்கு சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்தினார். சாம்சன் ஒரு ரன் மட்டுமே எடுத்து மீண்டும் சொதப்பினார். பேட் கம்மின்ஸ்சன் வீசிய மூன்றாவது ஓவரில் ரியான் பராக் டக் அவுட் ஆகி வெளியேறினார். 37 ரன்கள் எடுப்பதற்கு ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது, ஜோஸ் பட்லருடன், திவாட்டியா ஜோடி சேர்ந்தார். இருவரும் கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்தனர்.

image

பட்லர் தேவையான பந்துகளை பவுண்டரிகளும் விளாசினார். இருப்பினும், வருண் சக்ரவர்த்தியின் சுழலில் சிக்கிய அவர் தூக்கி அடிக்க முற்பட்டு 35 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து போராடிய திவாட்டியா 31 ரன்னில் வருணின் சுழலில் வீழ்ந்தார். அப்போதே ராஜஸ்தான் அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஷ்ரேயாஸ் கோபால் ஒருபுறம் நிதானமாக விக்கெட்டை இழக்காமல் ரன்களை சேர்க்க, ஆர்ச்சர்(6), கார்த்திக் தியாகி (2) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். கோபால் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட் சாய்த்து வெற்றி அடித்தளமிட்டார். அதேபோல், வருண் இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். மவி தன் பங்கிற்கு இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.

image

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தன்னுடைய பிளே ஆஃப் வாய்ப்பை கொல்கத்தா அணி தக்க வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். 3ம் தேதி நடைபெறும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெறுகிறதா அல்லது தோல்வியை தழுவுகிறதா என்பதை பொறுத்துதான் கொல்கத்தா அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும். அதேபோல், டெல்லி, பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியும் முக்கியமானது.

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. தற்போது மூன்றாவது அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.