ஆசைவார்த்தை கூறி பல குடும்ப பெண்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அமமுக கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி மீது பெண்கள் பலர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். 

image

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரமணி. அமமுக கட்சியில் பொறுப்பாளராக இருக்கும் இவர், குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழை குடும்ப பெண்களை குறிவைத்து அவர்களது ஏழ்மையை முதலீடாக்கி மோசடி செய்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிவதாகவும் தான் சார்ந்திருக்கும் கட்சியின் அறிவுறுத்தலின் படி கலெக்டர் அலுவலகம் வழியாக லோன் வழங்குவதாகவும் பலரும் புகார் கூறியுள்ளார்கள்.

இதைத் தொடர்ந்து அந்த லோன் உங்களுக்கு கிடைத்தால் உங்கள் ஏழ்மை நிலை மாறும் என ஆசைவார்த்தைகள் கூறி ஒவ்வொருவரிம் இருந்தும் பல இலட்சம் ருபாய் மதிப்பிலான பணத்தை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. லோன் கிடைக்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் முதலில் தலா 3000 ஆயிரம் ருபாய் செலுத்த வேண்டும் என்று கூறி பணத்தை வாங்கிக்கொண்டு பணம் செலுத்திய 3வது நாள் உங்களுக்கு 1 லட்சம் லோன் கிடைக்கும் என்று சொல்வாராம். 

image

அதன் பிறகு பணம் கொடுத்த நபர்களிடம் சென்று உங்களுக்கு தர கொண்டு வரப்பட்ட பணம் விஜிலென்ஸ் போலீசார் மற்றும் புதுக்கடை காவல்நிலைய ஆய்வாளர், உள்ளிட்ட காவல்துறையினர் பிடித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு உடனடியாக சிறிது பணம் கொடுத்தால் பிடித்து வைத்திருக்கும் பணத்தை திரும்ப கொடுத்துவிடுவார்கள். அது கிடைத்த உடன் உங்களுக்கு தர வேண்டிய பணத்துடன் இந்த பணத்தையும் சேர்த்து தந்து விடுவதாகவும் கூறி பல லட்சம் ருபாயை வாங்கி சென்று விடுவாராம்.

பலரின் பணம் அங்கு பிடிக்கப்பட்டு உள்ளது. அந்த பணத்தை மீட்க முடியாவிட்டால் நான் இங்கேயே இறந்து விடுவேன் என கத்தியை தன்னுடைய கழுத்தில் வைத்து மிரட்டுவாராம். அதற்கு பயந்து ஒருசிலர் நகைகளை விற்றும், பிறரிடமிருந்து கடன் வாங்கியும் பணத்தை கொடுத்துள்ளனர். பிறகு பணத்தை கொடுத்தவர்கள் திரும்ப கேட்டால் தரலாம் தரலாம் என கூறியுள்ளார்.

 

image

ஒருசிலர் பணத்தை கொடுக்கா விட்டால் காவல் நிலையங்களில் புகார் கொடுப்போம் என்று கூறினால் அவர்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளார். அவரின் மிரட்டலுக்கு ஆளாகாதவர்களுக்கு போலியான செக்குகளை கொடுத்து ஏமாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இதில் விஷேசம் என்னவென்றால் இவர் ஏமாற்றியதில் அதிகமானோர் அவர் சார்ந்திருக்கும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளின் குடும்பத்தினரே அதிகம்.

முதலில் ஒரு பெண்மணியிடம் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டு அவர் மூலமாக மற்ற பெண்களை ஏமாற்றுவது இவர் வழக்கம். இந்த நிலையில் கடந்த 3 வருடங்களாக பலரிடம் இதுபோன்று ஏமாற்றி பணமோசடி செய்த விவரம் பாதிக்கபட்டவர்களுக்கு தெரியவர அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பல வருடங்களாக தொடர்ந்து ஏழை பெண்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வரும் அமமுக பெண் நிர்வாகியை கைது செய்யவும், பறிகொடுத்த பணத்தை மீட்டுத்தரவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பெயரை களங்கபடுத்தி வரும் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.