‘கேப்டன் என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது’’ என்று தெரிவித்துள்ளார் தோனி.

அதிர்ச்சியிலும் சோகத்திலும் உறைந்திருக்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள். பிளே ஆஃப் செல்லும் கடைசி வாய்ப்பாக இருந்த நேற்றைய போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் சொதப்பி 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் சரண்டர் ஆனது சென்னை அணி. இதனால் சென்னையின் ‘பிளே-ஆஃப்’ வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தின் தோல்விக்குப் பிறகு தோனி கூறுகையில், ‘’இந்த தோல்வி வலிக்கிறது. எங்கே சறுக்குகிறோம் என்பதை ஆராய வேண்டும். இந்த சீசன் எங்களுக்கான ஆண்டாக அமையவில்லை, ஓரிரண்டு போட்டிகளில் மட்டும் இதுவரை பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டோம்.

image

ராயுடுவுக்கு காயம் ஏற்பட்ட பின்னர் மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை. பேட்டிங் ஆர்டர் மீது நாங்கள் அழுத்தத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தோம். எப்போதெல்லாம் எங்களுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லையோ அப்போதெல்லாம் மிடில் ஆர்டர் மீது அழுத்தம் கூடியது.

கிரிக்கெட்டில் உங்களுக்கு கடினமான கட்டம் வரும்போது உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் அமைய வேண்டும். ஆனால் இந்த தொடரில் அது எங்களுக்கு அமையவில்லை. பனி இல்லாத சமயத்தில் நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்தபோது நாங்கள் டாஸ் வென்றிருக்கவில்லை. ஆனால் நாங்கள் பேட்டிங் செய்த போட்டிகளில் எல்லாம் திடீரென பிற்பாதியில் பனி இருந்தது.

image

எப்போதெல்லாம் நீங்கள் சரியாக செயல்படாமல் இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் அதற்கு காரணமாக 100 விஷயங்களை சொல்லமுடியும். நம்மால் இயலக்கூடிய முழு பலத்தை திரட்டி விளையாடுகிறோமா என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும், மூன்று அல்லது நான்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை எனில் கஷ்டம் தான்.

எப்பொழுதும் முடிவு நமக்கு சாதகமாக அமையும் என்பது கிடையாது. இது கிரிக்கெட்டின் ஒரு அங்கம் தான். இருப்பதிலேயே கடினமான ஒன்று எனில் வருத்தத்தில் இருக்கும் சமயத்தில் சிரித்துக்கொண்டே கஷ்டமான சூழலை எதிர்கொள்வது. அதனை அணி வீரர்கள் செய்தனர்.

image

நிர்வாகம் பெரிதாக பதட்டம் ஆகவில்லை. அடுத்த சீசனை பற்றி யோசிக்க வேண்டும். விளையாடும் மைதானம் எப்படி, எந்த மாதிரி வீரர்கள் தேவை என ஆராய வேண்டும். அடுத்த மூன்று போட்டிகள் அதற்கு பயன்படும். அடுத்த சீசனுக்கு இளையவர்களை தயார் செய்யலாம். அடுத்ததாக விளையாட உள்ள மூன்று போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள வீரர்களுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படும்.

(நீங்கள் கட்டாயம் அடுத்த 3 போட்டியில் ஆடுவீர்கள் தானே, ஆடவேண்டும் என கேட்டதற்கு) கேப்டன் என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது. எனவே அடுத்த மூன்று போட்டிகளிலும் விளையாடுவேன். அடுத்துவரும் மூன்று போட்டிகளில் நாங்கள் சிறந்ததை கொடுப்போம்.” என பேசிமுடித்தார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.