ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. வலுவான பேட்டிங்கை வெளிப்படுத்தி அதிக ரன்களை குவிக்கலாம் என்ற எண்ணத்துடன் கொல்கத்தா கேப்டன் இயான் அந்த முடிவை எடுத்திருந்தார். ஆனால் களமிறத்தில் முற்றிலும் வேறுமாறான ஒரு முடிவு காத்திருந்தது.

image

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர் திரிபாதி ஒரு ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த நிதிஷ் ராணா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறியிருந்தார். அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க வீரரான சுப்மான் கில் அவுட் ஆக கொல்கத்தா அணி தடுமாறியது. இதையடுத்து டாம் பாண்டான் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, 14 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக் 4 ரன்களில் எல்பிடபிள்யு-வில் அவுட் ஆனார். இதனால் 32 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையை அடைந்தது கொல்கத்தா அணி.

image

இதைத்தொடர்ந்தும் விக்கெட்டின் வீழ்ச்சி நின்றபாடில்லை. பட்டகம்மின்ஸ் 4 (17) ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதற்கிடையே சிறிது நேரம் நிலைத்து ஆடிய கேப்டன் மார்கன் மட்டும் 34 பந்துகளில் 30 ரன்களை சேர்த்துவிட்டு பெவிலியன் திரும்பினார். கடைசி நேரத்தில் குல்தீப் யாதவ் 12 ரன்களையும், லக்கி ஃபர்குஷன் 19 ரன்களையும் எடுத்ததால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்களை சேர்த்தது. இல்லையென்றால் இன்னும் மோசமான நிலையை அடைந்திருக்கும்.

image

கொல்கத்தா பேட்டிங்கில் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர், லோயர் மிடில் என யாருமே அடிக்காதது பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. மார்கன் மட்டும் மல்லுக்கட்டாவிட்டால் வரலாறு காணாத வீழ்ச்சியை கொல்கத்தா சந்தித்திருக்கும். பெங்களூர் பவுலிங்கில் யாரும் எதிர்பாராத வகையில் முகமது சிராஜ் அபார சாதனை படைத்தார். 2வது ஓவரை வீசிய அவர் 3வது பந்தில் திரிபாதி விக்கெட்டையும், 4வது பந்தில் ராணா விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.

image

மீண்டும் 4வது ஓவரில் டாம் பாண்டான் விக்கெட்டை சாய்த்திருந்தார். அதுவரையிலும் அவர் ஒரு ரன் கூட கொடுக்கவில்லை என்பது ஐபிஎல் காணாத சாதனையாகும். 4 ஓவர்களை முடித்த அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 8 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். இதில் 2 மெய்டன் ஓவர்களும் அடங்கும். யஸ்வேந்தர சஹால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 4 ஓவர்களுக்கு 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். கிரிஸ் மோரிஸ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் 4 ஓவர்களுக்கு குறைவான ரன்களையே கொடுத்திருந்தனர்.

image

85 ரன்கள் என்ற மிக எளிமையான இலக்கை எதிர்த்து களமிறங்கிய பெங்களூர் அணியில் தொடக்கமே சிறப்பாக அமைந்தது. தேவ்தத் படிக்கல் மற்றும் ஃபின்ச் ஆகியோர் விக்கெட்டை இலக்காமல் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 6 ஓவர்கள் வரை விக்கெட்டை இழக்காத அவர்கள் 44 ரன்களை சேர்த்திருந்தனர். அதுவரையிலும் லக்கி ஃபர்குஷனுக்கு ஓவர் வழங்காமல் பொத்தி பொத்தி வைத்திருந்த மார்கன், இனியும் பொறுக்கமுடியாத என பந்தை அவர் கையில் கொடுத்தார். வந்த வேகத்தில் ஃபின்ச் விக்கெட்டை சாய்த்தார் ஃபர்குஷன்.

image

அதே ஓவரிலேயே படிக்கலும் 25 (17) ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் குர்கீரத் சிங் நிலையான பேட்டிங்கை கொடுத்தனர். இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச 12 ஓவர்கள் முடிவில் 77 ரன்களை பெங்களூர் அணி எடுத்தது. இதனால் 48 பந்துகளுக்கு 8 ரன்களை மட்டுமே எடுத்தால் போதும் என்ற நிலை வந்தது. இருவரும் சேர்ந்து அடுத்தடுத்து சில ரன்களை அடிக்க 13.3 ஓவர்களில் 85 ரன்களை அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பெங்களூர் அணி.

image

பெங்களூர் பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் பவர் ப்ளே முழுவதும் விக்கெட்டை இழக்காமல் ஆடியது பலமாக அமைந்தது. எளிமையான இலக்கு என்பதால் கொஞ்சம் கூட அழுத்தம் இல்லாத பேட்டிங்கை பெங்களூர் வீரர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் வெற்றிபெற முடியாது என்ற எண்ணம் இருந்ததால், ஒரு கட்டத்திற்கு மேல் கொல்கத்தா பவுலர்கள் நம்பிக்கையை இழந்தனர். லக்கி ஃபர்குஷன் மட்டும் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். 4 ஓவர்களுக்கு 17 ரன்களை மட்டுமே கொடுத்த அவர் ஒரு விக்கெட்டையும் சாய்த்திருந்தார். மொத்தத்தில் 84 ரன்களில் கொல்கத்தாவை மடக்கியதுடன், அசால்ட்டாக இலக்கை அடித்து வெற்றியை ருசித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்திற்கும் பெங்களூர் முன்னேறியது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.